Chillzee KiMo Books - பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Pon anthi saaral nee... - Srija Venkatesh

பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Pon anthi saaral nee... - Srija Venkatesh
 

பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பொன் அந்திச் சாரல் நீ.....என்ற இந்தக் கதை, காதலுக்கும்,செஞ்சோற்றுக்கடனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்.

நிஷா அழகான இளம் பெண். செல்வாக்கான பெற்றோர், செல்லமான தம்பி என நிறை வாழ்வு வாழும் அவளது வாழ்க்கை பரத் என்னும் டாக்டர் நிஷாவின் தாய்க்கு ஆப்பரேஷன் செய்யும் போது செய்த தவறால் திசை மாறுகிறது. பெற்றோரை இழந்து, செல்வத்தை இழந்து தவிக்கிறாள். தூரத்து உறவு முறையில் சித்தி ஆதரவு காட்ட ஒண்டிக்கொள்கிறாள். பரத் மீது மாறாத கோபமும், வெறுப்பும் மண்டுகிறது அவள் மனதில்.

ஆனால் பரத் நிஷாவை மனமாரக் காதலிக்கிறான். அவனும் பெற்றோரை இழந்து மாமனின் ஆதரவில் படித்து டாக்டர் ஆனவன். அவன் நிலை என்ன? நிஷாவின் மனதில் பரத்தின் மேல் இருந்த வெறுப்பு மாறுமா? அவர்கள் இணைவார்களா? நிஷாவின் தம்பி சச்சினின் வெளி நாட்டில் படிப்பு என்ற கனவு நிறைவேறியதா?

இவற்றைத் தெரிந்து கொள்ள படியுங்களேன் "பொன் அந்திச் சாரல் நீ....".

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்கள்.

Srija Venkatesh
Srija Venkatesh
 

அத்தியாயம் 1.

பட்டுப்புடவை சரசரக்க தேவதையாய் வளைய வந்து கொண்டிருந்தாள் நிஷா. கல்லூரி இறுதியாண்டை இப்போது தான் முடித்திருந்தாள். அவள் முகமெல்லாம் மகிழ்ச்சியாக வந்தவரை வரவேற்றுக் கொண்டும் , தேவையானவற்றை கொடுத்துக் கொண்டும் இருந்தாள். அன்று அவளது பெற்றோர் ஜெயக்குமார் - சியாமளா தம்பதியினரின் 25ஆவது திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

ஜெயக்குமார் ஊரில் ஒரு முக்கியப்புள்ளி. பல பிசினஸ்கள் செய்து வருபவர். அவரது மிகப்பெரிய பலம் அவரது மனைவி சியாமளா தான். அவள் மேல் உயிரையே வைத்திருந்தார் அவர். சியாமளா இல்லாமல் எதுவும் இல்லை அவருக்கு. அந்த அன்பான தம்பதியினரின் மூத்த பெண் தான் நிஷா. அவளுக்கு ஒரே தம்பி சச்சின். பத்தாம்  வகுப்புப் படிக்கும் அவன் படிப்பில் படு சுட்டி.

"ஜெயக்குமார்! விழா ரொம்பப் பிரமாதம். ஏற்பாடுகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. எல்லாத்தையும் விட சாப்பாடு சூப்பர்"

"ரொம்ப நன்றி சார்! எல்லாம் என் டாட்டர் நிஷா தான் பாத்துக்கிட்டா. கேட்டரிங்க் ஏற்பாடு பண்ணினது கூட அவதான். "

"அப்படியா? இப்படி ஒரு மக கிடைக்க நீ உண்மையிலேயே கொடுத்து வெச்சிருக்கணும்"

"பின்ன? எல்லாம் என் மனைவி சியாமளாவோட வளர்ப்பாச்சே?"

"அதானே பாத்தேன்! நீ இத்தனை நேரம் உன் மனைவியைப் பத்திப் பேசாம இருந்ததே இல்லியே? எங்க அவங்க?"

"அதோ அங்க ஜட்ஜ் ஒய்ஃப் கிட்டப் பேசிக்கிட்டு இருக்கா பாருங்க" , "சியாமா, சியாமா நம்ம செல்வா சார் உன்னைக் கூப்பிடுறாரு கொஞ்சம் வாம்மா"

"என்னங்க! எல்லாரும் சாப்பாடு பிரமாதம்னு சொல்றாங்க! நம்ம ஜட்ஜ் சம்சாரம் உமா மேடம் இன்னும் பத்து நாள்ல அவங்க வீட்டுல ஏதோ விசேஷமாம் அதுக்கு இந்தக் கேட்டரிங்கையே ஏற்பாடு பண்ணிடலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க"

"இவரும் சாப்பாடு பிரமாதம்னு உன்னைப் பாராட்டத் தான் கூப்பிடாரு"

"ஆமாம் ! மேடம்! ஒவ்வொரு ஐட்டமும் சுவை அப்படியே நாக்குல இருக்கு. வயித்துல எடம் பத்தலையேன்னு தான் சாப்பிடுறதை நிறுத்த வேண்டியிருக்கு. "

"ரொம்ப தேங்க்ஸ் சார்! எல்லாம் நிஷா தான்"

"அப்பாவும் , அம்மாவும் எல்லாம் மக தான்னு சொல்றீங்களே தவிர அவளைக் கண்ணுல காட்ட மாட்டேங்கறீங்களே?"

"என்ன செல்வா சார்? நீங்க நம்ம நிஷாவைப் பாத்தது இல்ல? இருங்க இதோ கூப்பிடுறேன்" என்றவர் அருகே வந்த மகனிடம் "சச்சின் அக்கா எங்கேடா? கூப்பிடு அவளை அங்கிள் பாக்கணும்னு சொல்றாரு"

"என்ன டேடி நீங்க? இதோ உங்க எதுத்தாப்புல தான் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக்கிட்டு இருக்கா. அவளை நீங்க கவனிக்கலையா?"

"அடேடே! இங்க தான் இருக்காளா? நிஷா ! நிஷாக்கண்ணு! கொஞ்சம் இங்க வாடா!"

அப்பாவின் குரல் கேட்டுத் திரும்பினாள் நிஷா. அருகே வந்து நின்றாள்.

"என்ன டேடி கூப்பிட்டீங்களா?"

"நிஷா! சாரைத் தெரியும் இல்ல? பாத்துருப்பியே?"

"ஓ! என் கிளாஸ்மேட் ப்ரியாவோட அப்பா தானே? போன வாரம் தானே நான் அவங்க வீட்டுக்குப் போனேன். ஆனா அப்ப அவரு அங்க இல்ல! "

"ஓ! நீ ப்ரியா ஃபிரெண்டா? வெரி குட் வெரி குட்! நிஷா நீ தான் கேட்டரிங்கல சாப்பாடு ஏற்பாடு பண்ணுனன்னு உங்கப்பா சொன்னாரு. என் மகளுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம். எப்படியும் 100 பேராவது வருவாங்க. அதுக்கு இந்த கேட்டரிங்க ஆள் கிட்டப் பேசணும். கொஞ்சம் நம்பர் தரியா?"

"ஓ! தரேன் அங்கிள். இவரு என் கூடப் படிச்ச கல்யாணியோட அப்பா தான். சின்னதா மெஸ் வெச்சு நடத்திக்கிட்டு இருக்காரு. ஒரு நாள் எதேச்சியா அவங்க மெஸ்ல சாப்பிட்டேன். சுவை ரொம்ப நல்லா இருந்தது. அதான் அவங்களை தைரியமா இந்த ஃபன்க்ஷனுக்கு புக் பண்ணிட்டேன். "

"பரவாயில்லியேம்மா! நீ நல்ல வேலையெல்லாம் செய்யற?"

"இதுல என்ன இருக்கு அங்கிள் ? அவரு கிட்டத் தொழில் திறமை இருக்கு. நான் ஜஸ்ட் கை காட்டறேன் அவ்ள தான்."

"நிஷா கொஞ்சம் அவரைக் கூப்பிடறியாம்மா? நான் இங்கயே பேசிடறேன்"

"ஒரு நிமிஷம் அங்கிள்" என்றவள் தன் கைப்பேசியை சுழற்றினாள்.

"ஹலோ! விஜி அங்கிள் இங்க ஒருத்தரு உங்களுக்கு ஃபர்தரா ஆர்டர் குடுக்கறதுக்காக பேசணும்கறாரு வரீங்களா? நாங்க ஹால்ல முருகர் படத்துக்கிட்ட நின்னுக்கிட்டு இருக்கோம். வாங்க" என்று கூறி ஃபோனைக் கட் செய்தாள்.

"சும்மா சொல்லக் கூடாது ஜெயக்குமார் உன் பொண்ணு அழகுக்கு அழகு , குணத்துக்கு குணம்னு நல்லாவே இருக்கா. "