தொலைந்து போனது என் இதயமடி - ராசு : Tholainthu ponathu en ithayamadi - RaSu
 

தொலைந்து போனது என் இதயமடி - ராசு

கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்

அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.

இளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.

மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.

பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.

இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.

இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை "தொலைந்து போனதுஎன் இதயமடி" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு

 

அத்தியாயம் - 1

"ம்மா. போயிட்டு வர்றேன்மா."

தன் தாய் சாரதாவிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் அமுதநிலா.

போகும் மகளை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.

எந்த வேலையும் செய்யக்கூடாது. அவள் சமைத்து வைத்ததை மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே செல்லும் இளைய மகளை,  அவள் தன் கண்ணில் இருந்து மறையும் வரையில் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.

மகளுக்கு ஒரு நல்லது செய்து பார்க்கும் வரையில் ஆண்டவன் தன்னை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்ற கவலைதான் அவளை சில மாதங்களாக ஆட்டுவித்து வருகிறது.

அவள் உடல்நிலை பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அமுதநிலா அவளை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. அவள் வாங்கி வரும் சம்பளத்தில் பாதி அவள் மருத்துவ செலவிற்கேப் போய்விடுகிறது.

இதில் எங்கிருந்து சேமித்து மகளுக்கு ஒரு நல்லது செய்ய முடியும்?

அவளிடம் சொன்னால் தனக்குத் திருமணமே வேண்டாம் என்கிறாள்.

சரி அவள் உடன் பிறந்த தமக்கைகளிடம் சொன்னாலாவாது அவர்கள் புத்தி சொல்வார்கள் என்று நினைத்து அவர்களிடம் பேசப்போய்தான் மூத்த இரண்டு மகள்களின் சுயநலம் தெரிந்தது.

அதனால்தான் அவள் இப்போதெல்லாம் அதிகமாக கவலை கொள்கிறாள். அந்தக் கவலையே அவள் உடல்நிலையை பாதிக்கிறது.

தனக்குப் பிறகு யார் மகளுக்குத் துணை. இது நாள் வரைக்கும் அவளது சகோதரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் இப்போது அந்த எண்ணம் சுத்தமாக அவள் மனதில் இல்லை.

சுயநலமாய் இருக்கும் மூத்த மகள்கள் இருவரும் தாங்கள், தங்கள் குடும்பம் என்றிருந்தால் பரவாயில்லை.

ஆனால் சின்னவளின் உழைப்பையும் உறிஞ்சுகிறார்களே. அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாயும், தங்கையும் சிரமப்படுகிறார்களே. அவர்களைப் பார்த்துக் கொள்வோம் என்ற அக்கறை அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தாய் வீட்டில் இருந்து என்னத்தை சுருட்டிக் கொண்டு போகலாம் என்பதில் மட்டும் மூத்த மகள்கள் இருவரும் ஒரே குணமாய் இருந்தார்கள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவளது கணவன் இருக்கும் வரையில்.

அவளது கணவன் சந்தானம் மூன்றுமே பெண் குழந்தைகள் என்பதற்காக என்றுமே சலித்துக் கொண்டதில்லை. சாரதாதான் ஒரு ஆண் குழந்தை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. தங்கள் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வானே என்று சொல்வாள்.

"குழந்தையில் என்ன ஆண் பெண்ணுன்னு பேதம்? நாம எதையும் அவர்களிடம் எதிர்பார்க்கும் வரையில்தான் இந்த ஏக்கம் எல்லாம். எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்போம். அவர்களும் நல்லா இருப்பார்கள்.  நம்மையும் நல்லா வச்சுப்பாங்க."

அப்படியும் மனம் கேட்காமல் புலம்பும் சமயங்களில் சில நேரம் அமுதநிலா தான் அவர்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறுவாள்.

"ஆமாம் சாரதா. நீ ஏன் கவலைப்படறே. நம்ம அமுதாதான் இருக்காளே. அவதான் நம்மோட பையன்." என்று அவளை சமாதானப்படுத்துவான்.

மற்ற இரண்டு பெண்களை விட அமுதநிலா  தந்தையிடம் மிக ஒட்டுதலாக இருப்பாள்.

இரவில் படுக்கும்போது கூட அவன் அருகில் தான் படுத்திருப்பாள். அவளைக் குளிப்பாட்டுவது கூட அவன்தான்.

படிப்பில் படுசுட்டி. மற்ற இருவரும் படிப்பில் சோடை போக இளைய மகளை நினைத்து எப்போதுமே அவர்களுக்குப் பெருமைதான். அவர்கள் வசதிக்கு அரசுப்பள்ளியில்தான் படிக்க வைக்க முடிந்தது.

அமுதநிலாவும் தன்னுடைய குடும்ப சூழல் புரிந்து நன்றாகப் படித்தாள். மூத்த இரு பெண்களுக்கும் தங்கள் வசதிக்கேற்ப நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார்கள்.

இனி சின்னப் பெண்தான். அவளை நன்றாகப் படிக்க வைத்துவிட வேண்டும். அவளும் அதைத்தான் விரும்பினாள்.

"அப்பா. என்னை நல்லா படிக்க வச்சிடுங்க. நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சு உங்களையும், அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன். அக்காவுக்கெல்லாம் நல்லா செய்வேன்ப்பா." என்பாள்.

அது நடக்குமோ? நடக்காதோ? ஆனால் சொல்லும்போது ஆசையில் அவள் கண்கள் விரிவதை பெற்றோர் இருவரும் மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பர்.

இந்த வயதில் மகள் இதை சொல்லவாவது செய்கிறாளே என்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.