நீயிருந்தால் நானிருப்பேன் - ராசு
அழகான நடையில், நேர்த்தியான குடும்பக் கதை.
அத்தியாயம் – 1
மனதை மயக்கும் மாலை நேரம்.
அந்தத் தெருவில் ஒரு வீடு மட்டும் மிகவும் பரபரப்பாய் இருந்தது.
வீட்டு வாசலில் அரை வட்டமாய் சாணம் தெளித்துப் பெருக்கிய பச்சையும், கருமையும் ஒன்றாய் கலந்திருந்த மண் தரையில் பளிச்சென்ற அரிசி மாவுக்கோலம் பார்ப்பவர் கண்ணைப் பறித்தது.
வீட்டுக்குள்ளிருந்து மெல்லிசை ஒலித்துக்கொண்டிருந்தது.
பூஜையறையின் சாம்பிராணி, ஊதுபத்தி வாசத்துடன் போட்டியிட்டது சமையல் அறையில் இருந்து வந்த கலவையான மணம்.
கொஞ்சம் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தால் தரையில் வண்ணங்கள் நிறைந்த சமுக்காளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது.
சில நாற்காலிகள் வரிசையாய் அமர்வதற்கு வசதியாய் போடப்பட்டிருந்தன.
கதவு பக்கத்திலேயே ஒரு மேசை போடப்பட்டு அழகான விரிப்பொன்றால் போர்த்தப்பட்டிருந்தது.
அதன் மீது ஒரு தாம்பாளத்தில் கல்கண்டு நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு தாம்பாளத்தில் பழங்கள் இருந்தன. இன்னொரு தட்டில் வரும் பெண்களுக்கு கொடுப்பதற்கென்று ரோஜா மலர்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. பன்னீர் சொம்பு நிரப்பி வைக்கப்பட்டு தெளிப்பதற்குத் தயாராய் இருந்தது. இன்னொரு தட்டில் வெள்ளியினாலான சந்தனப் பேழையும், குங்குமச் சிமிழும்.
சமையல் கட்டிற்குள் எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் வாசலுக்கு விரைந்து, அதன் பிறகு யாருக்கோ அலைபேசியில் பேச முயற்சி செய்து கொண்டிருக்கும் அவர்தான் குடும்பத்தலைவர் சந்திரசேகர்.
அவர் இப்போது தரகருக்கு முயன்று கொண்டிருக்கிறார்.
மறுமுனையில் அவரது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அவர் ஏதோ கேட்க மறுமுனையில் இருந்து வந்த பதில் அவரது பரபரப்பை அதிகப்படுத்தியது.
அவரது மகளை இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வருகிறார்கள்.
பெண் பார்க்க வருகிறார்கள் என்பது வெறும் கண்துடைப்புதான்.
ஏற்கனவே இதுதான் மாப்பிள்ளை. இதுதான் பெண். என்று முடிவாகிவிட்டது.
இப்போது சம்பிரதாயத்திற்காகப் பெண் பார்த்துவிட்டு அப்படியே நிச்சயத்தையும் நடத்தி முடித்துவிட இருவீட்டாரும் ஏற்கனவே பேசி முடித்திருந்தனர்.
ஏற்கனவே அவரது சகோதரிகளுக்கு அவர்தான் திருமணம் செய்து வைத்தது எல்லாம். இப்போது வரைக்கும் அவர்களுக்குச் செய்யும் சீர் முதற்கொண்டு சரியாகச் செய்யும் கடமை தவறாத சகோதரன் அவர்.
இருந்தாலும் சகோதரிகளின் திருமண சமயத்தில் எல்லாவற்றையும் பொறுப்பாய் கவனித்தது அவரது தாயார்தான்.
தாயார் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தார் சந்திரசேகர்.
இப்போது அவரது தாயார் உயிருடன் இல்லை.
அவரது மனைவி அவர் பேச்சை என்றுமே தட்டாதவள். அவளாக முடிவெடுத்து எதையுமே செய்ததில்லை.
அதனால் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று அவரே முடிவெடுத்து அதை மற்றவர்களிடம் சொல்லி சரியாக நடக்கிறதா என்று பார்ப்பது அவரது வேலை.
அக்கம் பக்கம் உள்ள பெண்களும், உறவு வகையில் உள்ள பெண்களும் வீட்டிற்குள் உள்ள வேலைகளைப் பார்க்க, மற்ற ஆண்கள் வருபவர்களை வரவேற்க தயாராய் இருந்தனர். அதில் சில பேர் சந்திரசேகர் சொன்ன வேலைகளை முடித்துவிட்டு அப்போதுதான் வந்திருந்தனர்.
சமையல் அறையில் சந்திரசேகரின் தர்மபத்தினி சீ‘தாலெட்சுமி எல்லாம் தயாராகிவிட்டதா என்று ஒரு பார்வை பார்த்தாள்.
இன்னும் பெண் தயாராகிவிட்டாளா என்று வேறு பார்க்க வேண்டும். அவளை அவளது தங்கையும், சில உறவுப்பெண்களும் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.
அழகுநிலையத்தில் இருந்து கூப்பிட வேண்டாம். ஆடம்பரம் தேவையில்லை என்று சந்திரசேகர் சொல்லிவிட்டதால் வீட்டுப் பெண்களே அவர்களுக்குத் தெரிந்த வகையில் பெண்ணைத் தயார் செய்வதாகக் கூறிச் சென்றிருக்கின்றனர்.
என்ன செய்து வைத்திருக்கிறார்களோ?
கிட்டத்தட்ட சமையல் அறையில் எல்லாம் தயாராகிவிட்டது. பரிமாறுவதற்காக எடுத்தும் வைத்தாகிவிட்டது.
அதனால் மகள் இருந்த அறைக்குச் சென்று அவள் தயாராகிவிட்டாளா? என்று பார்த்து வர சென்றாள்.
சகோதரிகளின் பொறுப்பெல்லாம் முடிந்த பிறகுதான் சந்திரசேகர் திருமணம் செய்துகொண்டதே.
சீதாலெட்சுமிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால் சிறந்த உழைப்பாளியான சந்திரசேகருக்கு வயதே தெரியாத உடற்கட்டு.
அவரது நல்ல குணமும் சீதாலெட்சுமியின் பெற்றோர் மனதைக் கவர்ந்து விட்டது. அத்தோடு அதிக சீர் கொடுத்து நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க முடியாத குடும்பச் சூழல்
- நீயிருந்தால்
- நானிருப்பேன்
- ராசு
- neeyirunthaal
- naaniruppen
- RaSu
- Family
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee