Chillzee KiMo Books - வித்தியாசமானவன்! - ரவை : Vithiyasamaanavan - RaVai

வித்தியாசமானவன்! - ரவை : Vithiyasamaanavan - RaVai
 

வித்தியாசமானவன்! - ரவை

ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 8

01. கேட்டது நீதானே?

02. யாருக்கு சீட் தருவது?

03. காசை வீசினால், வெற்றி உறுதி!

04. ஆண்மையற்ற ஆண்கள்!

05. இதில் யாருக்கும் வெட்கமில்லை!

06. யாருக்கு உங்கள் ஓட்டு?

07. முழுமையாக ஏற்பாய்!

08. வயதில் சிறியவனாயினும்....!

09. வித்தியாசமானவன்!

10. அழகியைத்தான் மணப்பேன்!

 

கேட்டது நீதானே?

பதினைந்து ஆண்டுகள் முன்பு, கணவன் தனக்கொரு மகள் வேண்டுமென ஆசைப்பட்டான், மனைவியோ மகன் கேட்டாள்!

பிறந்தது, மகள்!

சில ஆண்டுகள் கழித்து, மனைவி இரண்டாவது குழந்தையாவது மகனாகப் பிறக்கவேண்டும் என ஆசைப்பட்டாள்!

இரண்டாவது குழந்தை பிறக்கவேயில்லை!

மனைவிக்கு, தனக்கொரு மகனில்லையே என்ற குறை, தீவிரமாக இருந்ததால், இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்!

பெண் குழந்தைக்கு பதினைந்து வயதானபோது, அது ஆணாக மாறியது! ஆம், அவள் திருநங்கையாகிவிட்டாள்! திருநம்பி என்றும் கூறுவர்!

 இப்போது, கணவன்-மனைவி இருவருமே, கண்ணீர் வடித்தனர்.

 பள்ளிக்குச் சென்ற திருநங்கை மாதுரி, பாதியிலேயே அன்று வீடு திரும்பியதும், தாய் மரகதம் அதிர்ச்சியுற்றாள்.

 வீட்டுக்குள் நுழையும்போதே, புத்தகப்பையை வீசி எறிந்தாள், மாதுரி! காலணிகளை உதறி எறிந்தாள். தொப்பென சோபாவில் விழுந்து இரு கால்களுக்கிடையே முகம் புதைத்து, அழுதாள்.

 பதறிய தாய், அவளருகே ஓடிப்போய், அருகில் அமர்ந்து, முதுகில் தடவிக் கொடுத்து, சிறிதுநேரம் மௌனமாயிருந்தாள்.

 மகளாகப் பிறந்து மகனாக மாறிய மாதுரியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஓய்ந்தது.

 " என்னாச்சு, மாதுரி? யாராவது ஏதாவது தவறாகப் பேசினார்களா?"

 மாதுரி தலையைத் தூக்கி, கோபமாக தாயைப் பார்த்து, " பேசினால்தானே, தவறா, சரியா என்று சொல்லமுடியும்?"

 மரகதம் புரிந்துகொண்டாள். மாதுரியை தன் மடியில் தலை சாய்க்கவைத்து ஆறுதலாக தடவினாள்.

 " அம்மா! பாய்ஸும் என்னை ஒதுக்கறாங்க, கேர்ல்ஸும் ஒதுக்கறாங்கம்மா!..........."

 துக்கம் தாங்காமல், கேவினாள்!

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தாய் மரகதம் விழித்தாள்.

 " அம்மா! என்னை ஆண்கள் கழிப்பறைக்குள்ளேயும் வரக்கூடாதுங்கறாங்க, பெண்கள் கழிப்பறைக்குள்ளும் கூடாதுங்கறாங்க, அப்ப நான் எங்கேம்மா.........?"

 " பிரின்ஸ்பாலிடம் சொன்னியா?"

 " சொன்னதனாலேதான், பாதியிலே, வீடு திரும்பினேன்........."

 " என்னடீ சொல்றே?"

 " பிரின்ஸ்பால் சொல்றாரு, எனக்குன்னு கழிப்பறை கட்டமுடியாதாம், எந்த ஸ்டூடன்ட்ஸையும் என்னோட பேசும்படி கட்டாயப் படுத்தமுடியாதாம், பக்கத்திலே உட்காரவும் உத்தரவு போடமுடியாதாம், என்ன செய்றதுன்னே புரியலே, நீ பேசாம டி.சி. வாங்கிண்டு போயிடுன்னு சொல்றாரும்மா................."

 மாதுரி அவமானப்பட்டு வீடு திரும்பியுள்ளது புரிந்து, பெற்ற வயிறு பற்றி எரிந்தது!

 " அம்மா! எனக்குத் தெரியும்மா! நீயும் அப்பாவும்கூட, என்னை நினைச்சு அழறீங்கன்னு.............அம்மா! நான் வேணுன்னா, தற்கொலை செய்துக்கட்டுமா? யாருக்கும் எந்த தொல்லையுமில்லை..............."

 பெற்ற வயிறு சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது!

 மகளையும் இழுத்துக்கொண்டு, பூஜையறைக்குள் நுழைந்து, கடவுள் படங்களின் முன்நின்று, பதறினாள்.

 " தெய்வமே! நாங்க என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் இப்படி சித்திரவதை பண்றே? எங்களாலே தாங்கமுடியலே, மூணுபேரும் உனக்கு முன்பே உடம்பிலே பெட்ரோலை ஊத்திண்டு நெருப்பு வைச்சிக்கப்போறோம் பாரு, சீக்கிரமே! அப்பத்தான் உனக்கு எங்க வேதனை புரியும்!"

 மாலை, மாதுரியின் தந்தை வீடு வந்ததும், மரகதம் அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவர் உடனே மனைவி, மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு, பிரின்ஸ்பாலை பார்த்தனர்.

 " மரகதம்மா! உங்க கோபம் ரொம்ப நியாயமானது, இத்தனை வருஷமா படித்துக்கொண்டிருந்த மாணவியை திடீர்னு, டி.சி. கொடுத்து விரட்டறது, அநியாயம்தான். ஆனா, என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க! மாதுரியுடன் படிக்கிற பாய்ஸ் கேர்ல்ஸ் எல்லாரும், மாதுரியைக் கண்டு பயப்படறாங்க, அவ ஆணா, பெண்ணா தெரியலியேங்கறாங்க, அதோட தெருவிலே பார்க்கிறாங்க இல்லையா, திருநங்கைங்க கூட்டமா வந்து ஆடிகிட்டு கடைகடையா ஏறியிறங்கி கையை தட்டி, பயமுறுத்தி காசு பறிக்கிறதை, அதை மனசிலே வைச்சிகிட்டு, மாதுரியும் அப்படி ஒருத்தியோன்னு பயப்படறாங்க!"