ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத் : Rojavai thalattum thendral - Bindu Vinod
 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத்

தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.

திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

 

அத்தியாயம் 01

நிலாவிற்கு சட்டென விழிப்பு வந்தது! கண்களை திறந்து பார்த்தாள். இன்னமும் முழுவதுமாக விடியாததால் இருட்டாக இருந்தது. அதற்கு மேல் படுத்திருக்க விரும்பாமல் எழுந்து அந்த சின்ன அறையின் ஜன்னலோரத்தில் இருந்த சிறிய அலாரம் க்ளாக்கில் நேரம் பார்த்தாள்.

நாலு மணி!

அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாள் விழிக்காத வண்ணம் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

இன்றும் சரியாக அதே நேரத்தில் விழிப்பு வந்து விட்டது!

யோசனையுடனே பல் துலக்கி விட்டு, அன்றைய மெனு என்று மிருதுளா நோட் புக்கில் எழுதி வைத்திருப்பதை பார்த்து விட்டு வேலையை தொடங்கினாள்.

து ஒரு சிறிய உணவு விடுதி. ஆனால் அந்த சிறிய ஊருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக திகழ்ந்தது.

மலையின் மீது அமைந்திருப்பதால் அருகே இருக்கும் மற்ற கிராமங்களை விட்டு விலகி தனியே நின்றது வேரூர். அருகே இருக்கும் மற்ற சுற்றுலா தளங்களை பார்த்து விட்டு வேரூருக்கு வருகை தருபவர்களுக்கு வரமாக இருப்பது அந்த ‘வெற்றி பவன்’.

மெல்ல மெல்ல சமையலறைக்குள்ளும் வெளிச்சம் படர தொடங்கியது. தேங்காய் துருவிக் கொண்டிருந்த நிலா, ஜன்னல் வழியே தெரிந்த வானத்தை எட்டி பார்த்தாள். சூரியன் வர போகும் அறிகுறியாக வானம் வண்ணக் கோலம் கொண்டிருந்தது.

சூரியன் வந்துவிட்டான். புதிய நாள் துவங்க போகிறது!

அவனுக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான். இது போல் மனிதர்களாலும் இருக்க முடியுமா? நேற்றைய வெற்றிகள், தோல்விகள், வருத்தங்கள், கவலைகள், மகிழ்ச்சிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்றைய நாளை மட்டுமே நினைத்து புத்தம் புதிதாக வாழ முடியுமா?

யாரால் முடிகிறதோ இல்லையோ அவள் அப்படி தான் வாழ்கிறாள்...!

அவளுக்கு தெரிந்ததெல்லாம் கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் விஷயங்கள் மட்டுமே!

அவள் யார், அவளின் நிஜ பெயர் என்ன? எங்கிருந்து வந்தாள் எதுவுமே அவளுக்கு நினைவில்லை! அவளுக்கு சொல்லவும் ஆளில்லை...!

வேரூரில் ஓடும் ஆற்றின் கரையில் தலையில் காயத்துடன் கரை ஒதுங்கி இருந்த அவளை முதலில் கண்டுபிடித்தது வெற்றி பவனின் உரிமையாளன் வெற்றி.

ஆற்றின் அருகிலேயே இருந்த சர்ச்சில் இருக்கும் கன்னியாஸ்திரீகள் உதவியுடன் அவளுக்கு முதலுதவி அளித்து டாக்டர் மோகனின் நர்சிங் ஹோமில் அவளை சேர்த்தான் அவன்..

அவளுக்கு நினைவு திரும்பிய போது, எல்லாமே வெறுமையாக இருந்தது...!

அவள் யார், என்ன எதுவும் புரியவில்லை. எப்படி அந்த ஆற்றில் விழுந்தாள்? எதுவும் தெரியவில்லை!

அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவளின் நிலைக்கு பெயர் அம்னீசியா என்றார்! நடந்த விபத்தில் அவளுக்கு அவளுடைய பழைய வாழ்க்கை மொத்தமாக மறந்து போயிருந்தது.

டாக்டரும் அவரின் மனைவி லதாவும் அவளை அன்பாக கவனித்துக் கொண்டனர். அவளின் முகம் வெண்ணிலவு போல அழகாக இருக்கிறதென்று லதா அவளுக்கு நிலா என்று பெயர் வைத்தாள்!

ஆனால் ஒரு அழகிய இளம்பெண் யாரென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி பரவிய உடன் பரிதாபம் மட்டும் பட நாம் என்ன குறையே இல்லாத நல்லவர்கள் நிறைந்த உலகிலா வாழ்கிறோம்?

அந்த ஊரின் மைனர் மாடசாமி துவங்கி ரோட்டோர ரோமியோ குமார் வரை அவள் மீது அக்கறை கொண்டார்கள்.

ஓரளவிற்கு மேல் மோகன் தம்பதியருக்கு அவளை பாதுகாப்பது இயலாத காரியம் என்பது புரிந்தது. அந்த ஊரின் போலீஸ் ஸ்டேஷன் பல மைல்களுக்கு அப்பால் இருந்தது. அங்கே சென்று அவளின் விபரங்களை சொன்னார்கள்.

அவளின் போட்டோ தவிர பகிர்ந்துக் கொள்ள அவர்களிடம் பெரிதாக