நீ தானா...! - பிந்து வினோத்
ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.
பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.
சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.
உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???
சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!
01. நீ தானா...!
Don't depend too much on anyone in this world because even your own shadow leaves you when you are in darkness - Ibn Taymiyyah
நெக்ஸ்ட் ஜென் கம்பெனியின் லாப அறிக்கையை அந்த பெரிய திரையில் புள்ளி விவரங்களுடன் விவரித்துக் கொண்டிருந்தனர். சென்ற ஆண்டை விட இந்த வருடம் நிகர லாபம் அதிகமாகி இருந்தது. எதிர்பார்த்ததை விட கம்பெனியின் லாபம் பத்து சதவிகிதம் அதிகமாகி இருந்தது...
அந்த பெரிய திரையின் மீது கண்கள் பதித்திருந்த அந்த நிறுவனத்தின் தலைவன் அரவிந்தின் கவனம் அந்த அறிக்கையில் இல்லை... அவன் மனம் கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்தது... இந்நேரம் அவளுக்கு விஷயம் தெரிந்திருக்கும்... அவளுடைய உண்மையான முகம் வெளிவர போகிறதா, இல்லை இப்போதும்...?
அதற்கு மேல் சிந்திக்க விருப்பமில்லாமல் கண்களை மூடி திறந்தான். ஆனால் என்ன முயன்ற போதும் அவனால் அவனுடைய கவனத்தை திசை திருப்ப இயலவில்லை. ஒருவழியாக அந்த மீட்டிங் முடிவுக்கு வரவும், பெயருக்காக கூட யாருடனும் பேசாது வெளியே வந்தவன் நேராக தன்னுடைய கேபினுக்குள் சென்றான். அவனை பின் தொடர்ந்து வந்த சந்தோஷ், அவனின் மனநிலை புரிந்துக் கொண்டவன் போல்,
“ரிலாக்ஸ் அரவிந்த்...” என்றான்.
“ப்ச்... எப்படி முடியும் சந்தோஷ்?”
“கம் ஆன் மச்சான்... அஞ்சு வருஷம் கழித்து அவளின் முகமூடி கிழிந்தது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு... சும்மாவா சொல்றாங்க நல்ல குடும்பத்து பொண்ணான்னு தெரிஞ்சு கல்யாணம் செய்யனும்னு... அவங்க அப்பா ஒரு திருடன் அந்த புத்தி அவளுக்கு இருக்காதா என்ன?”
மனைவியின் மீது அவனுக்கு கோபம் இருந்த போதும், தங்கையின் கணவனும், அவனுடைய நண்பனுமான சந்தோஷ் அவளை பற்றி பேசிய விதம் அவனுக்கு பிடிக்கவில்லை... நண்பன் சொன்னது அவனுடைய மனதில் இருக்கும் அதே எண்ணம் என்ற போதும் கூட...!
பொறுமை இல்லாமல் மேஜையின் மீதிருந்த தொலைபேசியை எடுத்து எண்ணை தட்டியவன், அந்த பக்கம் அழைப்பை ஏற்க பொறுமையின்றி காத்திருந்தான். ஒரு வழியாக அழைப்பு ஏற்கப்பட்டு,
“ஹலோ அரவிந்த்!” என்ற வக்கீல் பவானியின் குரல் கேட்டது.
“எங்கே இருக்கீங்க பவானி? இன்னும் வேலை முடியலையா?”
“நீங்க சொன்ன வேலை காலையிலேயே முடிஞ்சிருச்சு மிஸ்டர் அரவிந்த்... ஒரு மணி நேரம் கூட ஆகலை... நீங்க ஈவ்னிங் மூணு மணிக்கு மேல போன் செய்ய சொன்னதால தான் நான் கால் செய்து இன்பார்ம் செய்யலை...”
“அப்போ சாந்தி சைன் போட்டு கொடுத்துட்டாளா?”
“யெஸ்...”
“ஓ! ஏதாவது சேஞ்சஸ்... ?”
“யெஸ், சில டேர்ம்ஸ் மாத்த சொன்னாங்க... அதை எல்லாம் மாத்தி புது வெர்ஷன்ல சைன் வாங்கியாச்சு...”
ஸ்பீக்கரில் அந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ்,
“அது தானே பார்த்தேன்! உனக்கு எப்படியும் ஒரு பத்து லட்சமாவது எக்ஸ்ட்ரா செலவாக போகுது...” என்றான்.
அவனை அமைதியாக இருக்குமாறு சைகை செய்த அரவிந்த், சிந்தனையுடனே, பவானியுடன் பேச்சை தொடர்ந்தான்.
“என்ன சேஞ்சஸ்?”
பவானியின் பதில் ஒலிக்கும் முன்பே அவன் மனதில் ஒரு விதமான எதிர்பார்ப்பு தோன்றியது... இன்று வரை சாந்தி அவனின் எதிர்பார்ப்பை ஏமாற்றியதில்லை...
“விவாகரத்துக்கு சம்மதிச்ச சாந்தி மேடம், குழந்தையை அவங்க கஸ்டடியில விடனும்னு கேட்டாங்க...”
“ஓகே”
“நீங்க தருவதா சொல்லி இருந்த ஒன் டைம் செட்டில்மென்ட் இரண்டு கோடி ப்ளஸ் மாத செலவுக்கான பணம் அதை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க...”
“ம்ம்ம்...”
“உங்களுடைய அண்ணா நகர் பங்களாவில் உங்க மகனோடு தங்க விரும்புறாங்க, ஆனால்...“
“அது தானே பார்த்தேன்...” என்றான் சந்தோஷ் நக்கலாக.
“ப்ச் சந்தோஷ் அமைதியா இரு..” என்று சந்தோஷிடம் சொன்ன அரவிந்த்,
“சாரி பவானி, யூ ப்ளீஸ் கேரி ஆன்...” என்றான்.
“சாரி சார், நான் சரியா சொல்லலை, மேடம் அந்த வீட்டில் வாடகைக்கு தங்க விரும்புறாங்க... உங்க மகனுக்கு ரொம்ப மாற்றம் தெரியாமல் இருக்கன்னு சொன்னாங்க... கொஞ்சம் கன்சஷன் ரேட்டில்... மாதம் ஒரு பதினைந்தாயிரம் வரை வாடகையா தர முடியும்னு சொன்னாங்க...”
“ஓ!”
- NeeThanaa
- Bindu
- Vinod
- பிந்து
- வினோத்
- Romance
- Family
- Thriller
- mysteries
- Novel
- Books
- Tamil
- Drama
- from_Chillzee