மாற்றம் தந்தவள் நீ தானே - அமுதினி
மாற்றம் தந்தவள் நீ தானே...இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஜாலியான காதல் கதை. ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனைகளும் குழப்பங்களும் தீர்ந்து விடும் என்பது புரியாத இரண்டு காதல் உள்ளங்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் குழப்பங்களே இந்த கதை.
அத்தியாயம் – 01
மாமனே உன்னை காங்காம
மத்தியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாறா போனேனே
காகம் தான் கத்தி போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
வெள்ளலூர் கோவை மாவட்டம்
அந்த காலை வேளையில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. தென்னத்தோப்பு சூழ இருந்த மச்சு வீடு என்று சொல்லப்படும் காரைக்குடி ஸ்டைலில் கட்டப்பட்ட வீடு. அது வீடல்ல ஒரு அரண்மனை என்று சொல்லலாம். வீட்டின் வாயிலில் வாழைமரங்கள் கட்டப்பட்டு அந்த தெருவின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கிருந்த ஸ்பீக்கரில் "மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம் தான் " என்று சித்ராவும் எஸ்பிபீயும் பாடிக்கொண்டிருந்தனர்.பலவிதமான சமையல் செய்யும் மணம் அந்த ஊரெல்லாம் வீசியது, கவுண்டர் வீடு என்று அழைக்கப்படும் அந்த இல்லத்திருமணம். திருவிழா போல ஒரு வாரம் முன்பே விருந்தும் மேளதாளமும் என ஊரே களைகட்டியது.
"ஏய்யா இங்க வாயா !!" என்று தன் மகளின் திருமண வேலைகளில் பம்பரமாக சுற்றி கொண்டிருந்த கவுண்டரைய்யா என்று அழைக்கப்படும் கந்தசாமி கவுண்டரை வாஞ்சையுடன் அழைத்தார் அவரின் அம்மா, ஆத்தா என்று அழைக்கப்படும் செல்லம்மா ஆத்தா.
"என்ன ஆத்தா " என்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை பிடித்தபடி அவரின் அருகே தரையில் அமர்ந்தார் கந்தசாமி.
"ஏதாவது சாப்பிட்டியா ? காலைல இருந்து நிக்காம ஓடிட்டு இருக்கியேயா ?" என்றார் அவரின் தலைமுடியை வருடியபடி.
அதற்குள் கையில் காபியோடு வந்த கந்தசாமியின் மனைவி காமாட்சி, தன் மாமியாரிடம் கையில் இருந்த காபி கோப்பையை கொடுத்தவர் "ஏனுங்க அத்த, பொட்டைபுள்ளையை பெத்தா மவராசனா இருந்தாலும் ஒடித்தான ஆகோணும் " என்றார் தன் கணவரை பார்த்தவாறு.
"என்ர பேத்திக்கு என்னடி, ராசகுமாரி. அவளை கொத்திட்டு போக சீமையில் ராசா மாதிரி இல்லை மாப்பிளை வருது! அது என்னயா.. நீ என்ர மவன்… உன்னை நான் செல்லம் கொஞ்சுனா உன்ர பொண்டாட்டிக்கு பொறுக்கறதே இல்ல " என்று வேண்டும் என்றே மருமகளை சீண்டினார் அவர்.
"ஹம்ம்கூம் என்னை வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே. அம்மாவாச்சு மகனாச்சு... எனக்கு அடுப்பங்கரைல ஏகப்பட்ட சோலி கெடக்குது " என்றபடி அவரின் கையில் இருந்த காபி கோப்பையை வாங்கி கொண்டு உள்ளே சென்றார் காமாட்சி.
கந்தசாமி எப்போதும் ரசிக்கும் நிகழ்வுகள் இவை. "அடியே காமாட்சி" என்று ஆத்தா அழைத்தால் "ஏனுங்க அத்த " என்று இருக்கும் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வருவார் காமாட்சி. அதே போல தன் மருமகளுக்கும் பேத்திக்கும் என்று தங்கள் தோட்டத்து மலர்களை நெருங்க கட்டி மாலை வேளை இருவரின் தலையிலும் சூடி அழகு பார்ப்பார் .
"மணியம்மா மணியம்மா " என்று காமாட்சி அழைக்கவும் "வந்துட்டேனுங்க பெரியம்மா " என்றபடி ஓடி வந்தார் அந்த பெண்.
"இந்தா இந்த காபிய கொண்டு போயி செல்லி கிட்ட கொடு. நாலுநாள்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு இன்னும் தூங்கிட்டு இருக்கா" என்று புலம்பியபடி அந்த காபி கப்பை மணியம்மாவிடம் கொடுத்தனுப்பினார்.
"பாப்பா பாப்பா" என்று மணியம்மா அழைத்து பார்க்கவும் எந்த பதிலும் இல்லாமல் போகவே மெல்ல அந்த படுக்கை அறையை எட்டி பார்த்தார்.அந்த வீட்டின் முதல் தளத்தில் இருந்த ஒரு அறை. ஏசியே இல்லாமல் ஜில்லென்று இருந்தது சுற்றி இருந்த தென்னைமரங்களின் உபயத்தில். அந்த அறையில் இருந்த மிகப்பெரிய தேக்கு மரக்கட்டிலில் இருந்த படுக்கை விரிப்பும் போர்வையும் நேர்த்தியாக மடித்து வைத்திருந்தது.
" பாப்பா" என்று மீண்டும் அழைத்தார் மணியம்மா. அப்போது தான் அங்கிருந்த குளியலறையை திறந்து கொண்டு வெளியே வந்தாள் செல்லி என்கிற மஞ்சரி.அவர்களின் குலதெய்வம் செல்லியம்மனின் பெயரை வைக்க வேண்டும் என ஆத்தாவும் மஞ்சரி என்று வைக்கவேண்டும் என காமாட்சியும் மல்லுக்கட்டிய போது கந்தசாமி தான் வீட்டில் செல்லி என்றும் வெளியிடங்களில் மஞ்சரி என்றும் இருக்கட்டுமென சமாதானம் செய்து