நீ என் அம்மா இல்லையா? - ரவை : Nee en amma illaiyaa? - RaVai
ரவை எழுதிய சிறுகதை தொகுப்பு - 4
உனக்கென்ன மேலே நின்றாய்.....!
தமிழகத்தின் தலைநகரம், சீர்மிகு சென்னையில், ஹோலிப் பண்டிகை கோலாகலமாக இளைஞர்களாலும் சிறுவர்களாலும், ஒருவர்மீது ஒருவர், வண்ணச்சாயம் பூசியும், பலூனில் நீர்நிரப்பி பீய்ச்சியும் கொண்டாடப்பட்ட இளங்காலை நேரத்தில், மக்கள் நிரம்பி வழியும் நெடுஞ்சாலையில், பத்துவயது சிறுவன் ஒருவனை இரண்டு ரௌடிகள் மூர்க்கத்தனமாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததை மனித உருவில் வலம்வரும் சதைப் பிண்டங்கள் ஆயிரம் கண்டும் காணாமலும் போய்க்கொண்டிருக்கலாம், என்னால் முடியவில்லையே!
விசாரித்ததில், சிறுவன் அந்த ரௌடிகள் முகத்திலே ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்திலே, பலூன் தண்ணியை பீய்ச்சியடிச்சுட்டான், ரௌடிகளுக்கு கோபம்!
அடி தாங்காமல் சிறுவன் செத்துவிடுவான் போலிருந்தது!
கையில் கிடைத்த இரும்புக் கம்பியினால் ரௌடிகளை தலையிலேயே அடித்து விரட்டினேன்.
இருவரும் ஓடும்போது, என்னை நன்றாக முறைத்துப் பார்த்து "இரு, இரு, கொஞ்ச நேரத்தில் என்ன நடக்கப் போகிறதென்று பார்!" என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
"இப்படித்தான் இந்த ரௌடிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை! உன்னைப் போல எல்லாரும் அவங்களை எதிர்த்து இன்னாத்தான், அட்டூழியம் அடங்கும்...."
"போலீஸ் என்ன பண்ணுது? கடைத்தெருவிலே கடைக்குக் கடை மாமூல் வாங்கறதுக்கே அவங்களுக்கு நேரம் போதாது....."
என்னைப் பாராட்டிய கூட்டம் ஆதவனைக் கண்ட பனிக்கட்டிபோல அடுத்த நிமிடமே கரைந்துபோனது!
ஒரே ஒரு நல்லவர் மட்டும் என் காதருகே ரகசியமாக, " தம்பி! இளங்கன்று பயமறியாது, என்பது போல நீ ரௌடிகளை அடிச்சுவிரட்டிட்டே! அவங்க, உன்னை எச்சரித்துவிட்டு போயிருக்காங்க, அவங்க எந்த நேரமும் படையா வந்துடுவாங்க! தம்பி! உன்னைப் பார்த்தா, வெளியூர்மாதிரி தெரியுது! இந்த ஊர்க்காரங்க, ஏன் எதிலும் தலையிடாம அவங்க அவங்க வேலையை பார்த்துண்டு போறாங்கன்னு சொல்றேன்! ஒருத்தரும் ஒத்துக்காட்டாலும், எல்லார்க்கும் தெரிந்த உண்மை என்ன தெரியுமா? ரௌடிகளுக்கும் போலீஸுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறதாலே, ரௌடிகள் பயமில்லாம நடமாடறாங்க! போலீஸ் ஆளும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஊழல்லே கூட்டாளியாயிருக்கிறதாலே, பயமில்லாம இருக்காங்க! சட்டமும் கோர்ட்டும் வழக்கை விசாரிச்சு தண்டனை கொடுக்க இருபது முப்பது வருஷம் ஆகிறதாலே, அவங்களும் பயமில்லாம ஊழல் பண்றாங்க! தேர்தல்லே, மக்கள் காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போடறதனாலே, பணம் வைச்சிருக்கிறவன் அரசாங்கத்தை தன் கைக்குள்ளே வைச்சிருக்கான், நியாயம், தர்மம் எல்லாம் செத்துப்போயிடுத்துப்பா! சரி சரி, நீ உடனே இங்கிருந்து கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய்விடு!" என்று கிசுகிசுத்துவிட்டு, அவரும் கரைந்து போனார்!
எனக்கு ஏற்கெனவே வாழ்க்கையின்மீது வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டுவிட்டதால், நான் அங்கேயே நின்றுகொண்டு, எனக்குள் புலம்பினேன்!
புலம்பல் பாட்டாக வெளிவந்தது.
"உனக்கென்ன மேலே நின்றாய், ஓ!......"
"நிறுத்து! நிறுத்து!"
"நிறுத்தச் சொல்கிற நீ யார், முதலில் சொல்லு!"
"'ஓ'ன்னு யாரை நீ கூப்பிட்டாயோ, அந்த இறைவன்தான்!"
"இறைவா! உன்னை நம்பித்தானே, சொந்த ஊரைவிட்டு தன்னந்தனியாக இந்த புதிய ஊருக்கு வந்தேன், ஒன்றல்ல, ரெண்டல்ல, ஆறுமாதம் ஓடிப்போயிடுத்து! பாவம், அப்பா! மாதாமாதம், எனக்கு பணம் அனுப்ப என்னென்ன கஷ்டப்படறாரோ! பழைய வீடு ஒண்ணைத்தவிர, வேற சொத்து எதுவுமில்லே, அக்கா வேற, கல்யாணமாகாம வீட்டிலே இருக்கா, அம்மாவோ முட்டிவலியினாலே நடக்க முடியாம படுத்த படுக்கையாயிட்டா! என்னை இன்னும் என்னென்ன கொடுமைக்கெல்லாம் ஆளாக்கப்போகிறாயோ, சொல்லித் தொலையேன் இப்போதே! கொடுமைகளைவிட எந்த நேரத்தில் எது நடக்குமோ என்கிற பயமே என்னை பலி வாங்கிவிடும்போல் இருக்கு!"
இறைவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
"இதப்பாரு! என்னை வெறுப்பேத்தாதே! எனக்கு வர்ற கோபத்திலே உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, ஆமாம், சொல்லிட்டேன்..."
"எனக்குத் தெரியுமே,..."
"எப்படி?"