கண்கள் சொல்கின்ற கவிதை... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kangal solgindra kavithai... - Srija Venkatesh
கண்கள் சொல்கின்ற கவிதை... - ஸ்ரீஜா வெங்கடேஷ்
கண்கள் சொல்கின்ற கவிதை என்பது முற்றிலும் புதிய தளத்தில் சொல்லப்பட்ட காதல் கதை.
அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதல் மனதில் பூத்திருக்கும். அதனை நினைவு படுத்தும் இந்தக் கதை.
காதல் ஒருவனை அழிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பல கதைகளிலிருந்து சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் காதல் ஒருவனை எந்த அளவு உயர்த்தியது என்பதே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படி உயர்த்திய காதலியின் நிலை என்ன?
அவன் நிலை உயர்ந்ததும் காதல் என்ன ஆனது? வீட்டாரின் எண்ணங்கள் மாறினவா? காதல் தோற்று விட்டதா? நாயகி என்ன செய்தாள்? இருவரும் இணைந்தார்களா?
தெரிந்து கொள்ள வேண்டுமானால் கட்டாயம் படியுங்கள் "கண்கள் சொல்கின்ற கவிதை..."
அத்தியாயம் 1.
ஜீவா கலெக்டர்களுக்கான மாநாட்டு வேலையில் மிகவும் பிசியாக இருந்தான். அவனும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தான். போன வாரம் தான் ஒரிஸ்ஸாவிலிருந்து மாற்றலாகி வந்திருந்தான். திட்டக் கமிஷன் உதவித் தலைவராக அவனுக்கு புரமோஷன் கொடுத்து அவனை சென்னைக்கு மாற்றியிருந்தது அரசாங்கம். பல வருடங்களுக்குப்பின் அவன் தமிழக மண்ணை மிதிக்கிறான். ஆறடி உருவம். கொஞ்சம் கருத்த நிறம் என்றாலும் களையான புத்திசாலித்தனமான முகம். யோகா உடற்பயிற்சி எல்லாம் செய்வதால் உடல் குண்டாகவில்லை. முப்பது வயதிலும் பார்ப்பவர்களை 25 வயது மதிப்பிடும்படி இருந்தான் அவன்.
ஜீவா ஏற்பாடு செய்திருக்கும் மாநாடு மிக முக்கியமானது என்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அன்றே சர்க்குலர் அனுப்பி விட்டான். நாளை மாநாடு துவங்குகிறது. ஆட்கள் இங்குமங்கும் ஓடியாடி வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 32 மாவட்டங்கள் அதற்கு 32 கலெக்டர்கள். ஆக மொத்தம் 32 பேர் கலந்து கொள்வார்கள்.
சற்று தொலைவில் யாரோ "கயல்விழி கொஞ்சம் இங்க வாங்க" எனக் கூப்பிடும் குரல் கேட்டுப் பதறித்திரும்பியவன் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்ன என்று கேட்பதை ஏம்மாற்றத்துடன் கவனித்தான்.
"கயல்! இப்போது எங்கே இருப்பாள்? எப்படி இருப்பாள்? யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருப்பாள் கட்டாயம். ஆனால் ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தாள்? விழுந்து விழுந்து மூன்று வருடம் காதலித்து விட்டு என்னைத் தூக்கி எறிய எப்படி மனம் வந்தது அவளுக்கு? ஹூம்!" என்று தன்னையறியாமல் பெருமூச்சு விட்டான் ஜீவா. அவனது செக்கரட்டரி ராஜ சேகர் அருகில் வந்தார்.
"சார்! எல்லா ஏற்பாடுகளும் நல்லா நடந்துக்கிட்டிருக்கு சார்! "
"கலெக்டர்கள் எல்லாரும் என்னிக்கு வராங்க?"
"நாளைக்குத்தான் மாநாடு ஆனா எல்லாரும் இன்னிக்கே வந்துட்டாங்க சார். அவங்க தங்கறதுக்கு அரசாங்க விருந்தினர் மாளிகையில ஏற்பாடு செஞ்சாச்சி ! சமையலுக்கு ஆள் , டிரைவர் என எல்லா ஆட்களும் போயிட்டாங்க."
"வெரி குட்! எத்தனை பேர் வந்துருக்காங்க? "
"எல்லா மாவட்டக் கலெக்டர்களும் வந்துட்டாங்க சார்! அதுல திருநெல்வேலி கலக்டர் தன்னொட அம்மாவையும் கூட கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க. அதனால அவங்களை வேற எடத்துல தங்கிக்க சொல்லிடட்டுமா?"
"வாட் நான்சென்ஸ்? வயசான அம்மா நமக்கு பாரமா? அவங்களையும் நம்ம விடுதியிலயே தங்கச் சொல்லுங்க. பாருங்க மாநாட்டுல கலந்துக்கறவங்க எல்லாருமே வி ஐ பிஸ் . அதனால பாதுகாப்பு ஏற்பாடுகள் கன கச்சிதமா இருக்கணும். அதிலும் பத்தாவது நாள் மநாட்டுல கலந்துக்க முதல்வர் வந்தாலும் வருலாம்னு செயலகத்துல இருந்து செய்தி வந்துருக்கு"
"அப்படியா சார்! ரொம்ப சந்தோஷம்"
"நீங்க சந்தோஷப்படறதுக்காக நான் இதைச் சொல்லல்ல! பாதுக்காப்புல கொஞ்சம் கூட கவனக்குறைவு இருக்கக் கூடாது அதுக்குச் சொல்றேன். போங்க போயி வேலையை கவனிங்க"
போகத் திரும்பியவர் கொஞ்சம் தயங்கினார்.
"சார்! உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?"
"என்ன சொல்லுங்க?"
"நீங்க ஒரிஸ்ஸாவிலருந்து வந்துருக்கீங்கன்னு சொன்னாங்க . ஆனா நீங்க தமிழ் நல்லாப் பேசறீங்களே? அது எப்படி சார்?"
சிரித்து விட்டான் ஜீவா.
"இதைத் தெரிஞ்சுக்காட்டா உங்களால நிம்மதியா வேலை செய்ய முடியாது இல்ல ராஜ சேகர்? என்றவன் தொடர்ந்தான். "எனக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டத்துல இருக்கற ஆழ்வார்குறிச்சி தான். தமிழ்நாட்டுல பொறந்து தாமிரபரணி தண்ணி குடிச்சி வளந்த பச்சைத் தமிழன் நான். போதுமா?"
"ஓ! நீங்க திருநெவேலிப் பக்கமா? அதான் தமிழ் விளையாடுது" என்று சொல்லியவர் சல்யூட் அடித்து விட்டு வேலைகளை கவனிக்க ஓடினார்.
தனித்து விடப்பட்ட மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.
"அது தான் எத்தனை மகிழ்ச்சியான காலகட்டம். மனதில் உயரிய நோக்கங்களும் , அதை நிறைவேற்றத் துடிக்கும் வெறியுமாக அலைந்த காலங்கள் அவை. கல்லூரிக் காலத்திலிருந்தே ஐ ஏ எஸ் அதிகாரியாவதே ஜீவாவின் நோக்கமாக இருந்தது. அதற்குத்தான் எத்தனை இடையூறுகள்? எத்தனை சோதனைகள்?