கனாக் கண்டேன் தோழி நான்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kanaa kanden thozhi naan... - Srija Venkatesh
 

கனாக் கண்டேன் தோழி நான்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். இரு உயிர்கள் மனங்கள் இணைந்து கவி பாடும் காலம் காதல் காலம். ஆனால் இரு உள்ளமும் திருமண வானில் இணைப்பறவைகளாய் சிறகடித்துப்பறந்தால் ஆனந்தம் தான்.

ஆசை ஆசையாக் காதலித்த இரு இளம் உள்ளங்கள் பெற்றோர்களின் கௌரவத்துக்கு மரியாதை கொடுத்துப் பிரிய முடிவெடுத்தால்...?

இருவரின் வாழ்க்கையும் என்ன ஆகும்?

காலம் அவர்களை ஒன்றாகச் சேர்க்குமா?

அப்படியே சேர்த்தாலும் இருவரின் மன நிலை எப்படி இருக்கும்?

தெரிந்து கொள்ளப் படியுங்கள் கனாக் கண்டேன் தோழி நான்.....

 
Srija Venkatesh
Srija Venkatesh

அத்தியாயம் 1 :

ஆபீசில் வேலையில் ஆழ்ந்திருந்த ரேவதியை ஃபோன் உலுப்பியது. அது கண்டிப்பாக காதலன் பிரஷாந்தின் அழைப்பாகத்தான் இருக்கும். ஏனெனில் அவன் அழைக்கும் போது தான் எனதுயிரே எனதுயிரே பாட்டு வரும். எடுத்துப் பேசினாள்.

"என்ன பிரஷ்? எதுக்கு வேலை நேரத்துல தொந்தரவு பண்ற? "

"ஒரு குட் நியூஸ் ஹனி! அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்"

"என்ன சொல்லேன்? உங்க வீட்டுல நம்ம காதலைப் பத்தி சொல்லிட்டியா? "

"இல்லை இது வேற! இன்னிக்கு சாயங்காலம் நீ மாலுக்கு வா! அப்பத்தான் சொல்லுவேன்"

"ஹேய்! சஸ்பென்ஸ் வைக்காதேடா! எனக்கு வேலையே ஓடாது. அதுவும் ஆடிட்டிங்க் சமயம். பிளீஸ் சொல்லுடா"

"எனக்கு ஆபீஸ்ல பிரமோஷன் கெடச்சிருக்கு. நான் இன்னிலருந்து மேனேஜர். தெரியுமா? சம்பளம் 10,000 ரூவா கூடியிருக்கு."

"வாவ்! சூப்பர் நியூஸ்டா! நான் கண்டிப்பா வந்துடறேன். இன்னிக்கு நீ எனக்கு டிரீட் தரணும். கூட சரவணனும் வருவானா?"

"அவன் இல்லாமயா? உன்னைப் பாக்கணும்னு அவனும் சொல்லிக்கிட்டு இருந்தான். நான் கூட்டிக்கிட்டு வந்துடறேன். வெச்சிடுறேன்" என்று வைத்து விட்டான்.

மனம் சிறகடித்துப் பறந்தது ரேவதிக்கு. கல்லூரி படிக்கும் நாட்களிலிருந்தே காதல். இவர்களது விஷயம் தெரிந்த ஒரே ஜீவன் பிரஷாந்தின் தம்பி சரவணன் மட்டும் தான். கோயம்புத்தூரில் பி எஸ் ஜி கல்லூரியில் தான் இருவரும் படித்தார்கள் பிறகு பிரஷாந்த் எம் பி ஏவும், ரேவதி சி ஏவும் படித்து முடித்தார்கள். காதலித்தார்கள் என்றாலும் அதன் புனிதம் கெடாமல் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் படிப்பை முடித்த இருவரும் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு அமர்ந்தனர். இன்னும் பெற்றோரிடம் காதலைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இப்போது சொல்லலாம்.

நினைவுகளைக் கலைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினாள். சரியாக ஐந்து மணிக்கு பெர்மிஷன் போட்டு விட்டுக் கிளம்பினாள். ஆபீசிலிருந்து டூ வீலரில் 20 நிமிடப் பயணம். மகிழ்ச்சியில் மிதந்ததாலோ என்னவோ சீக்கிரமே போய் விட்டாள். வாசலில் அண்ணனும் தம்பியும் நின்றிருந்தனர்.

"என்ன அண்ணி? பிரஷாந்துக்கு பிரமோஷன் கெடச்சதுல அவனை விட உங்களுக்கு சந்தோஷம் அதிகம் போல இருக்கு? அப்ப எனக்கு ரெண்டு டிரீட்டா?"

"போடா! வாயரட்டை! காலேஜ் வந்தப்புறமும் நீ இன்னமும் சின்னப் பிள்ளையாவே இருக்கியே? சரி படிப்பெல்லாம் எப்படிப் போகுது?"

"ஒரு காலேஜ் பையன் கிட்ட கேக்க வேண்டிய கேள்வியா இது? கடலை போடுறது எப்படி இருக்கு? எனக்குன்னு ஏதாவது பொண்ணு சிக்குனாளான்னு கேக்கத் தெரியல்ல! அண்ணனுக்கு ஏத்த ஜோடி தான்"

"போடா லூசு! உங்க அண்ணனை மாதிரியே நீயும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்! அப்பத்தான் எங்களுக்குப் பெருமை! "

"சரி அண்ணிப்பாட்டி"

இடை மறித்தான் பிரஷாந்த்.

"ஹலோ! ஹலோ! நான் ஒருத்தன் இங்க இருக்கேன். நீ என்ன எங்கிட்டப் பேசவே மாட்டேங்குற?"

"சோ சாரி பிரஷ்! இந்தப் பையன் பிடிச்சுக்கிட்டான். கங்கிராட்ஸ்! மேலும் மேலும் நிறைய பிரமோஷன் கெடைக்க என் வாழ்த்துக்கள்"

"சரி வா! இப்படி வாசல்ல நின்னே பேச வேண்டாம். ஏதாவது ஒரு ரெஸ்டாரடுக்குள்ள நுழைஞ்சு சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்" என்றான் பிரஷாந்த்.

மூவரும் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட ரெஸ்ட்டாரன்டுக்குச் சென்று தனியான ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டனர். பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சரவணன் போய் விட்டான்.

"ஹேய்! என்ன இவ்வளவு நல்ல நியூஸ் சொல்லியிருக்கேன்? கன்னத்துல ஒண்ணே ஒண்ணு தரக் கூடாதா?"

"ஆங்க்! உதை தான் கிடைக்கும். பப்ளிக் பிளேஸ்ல வெச்சு என்ன பேசற நீ?"

"போ! ரேவதி! இது தான் எனக்கு உங்கிட்ட பிடிக்கவே இல்ல! இந்த