எங்கேயோ பார்த்த மயக்கம்... - பிந்து வினோத்
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் சத்யாவும், கதாநாயகி தேன்மொழியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
தேன்மொழி சத்யாவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
சத்யாவோ தேன்மொழியைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
அத்தியாயம் 01
அவசர அவசரமாக காலை உணவை விழுங்கிக் கொண்டிருந்த தேன்மொழியை மலர்ந்த கண்களால் பார்த்தாள் மஞ்சரி.
தேன்மொழிக்கு அழகான வட்டமான முகம். நெற்றி மீது வந்து விழும் சுருண்ட முடி அவளின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது...
திரடசைப் பழங்களை நினைவுப் படுத்தும் கண்கள்.
எடுப்பான நாசி! நேர்த்தியான உதடுகள்!
வெளீர் நிறமில்லாமல் மாநிறமாக இருந்தது அவளின் அழகை மேம்படுத்திக் காட்டியது...!
அடர்த்தியான நீளமான கூந்தலை பின்னி முன்னே எடுத்து விட்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆரஞ்சும், தங்க நிறமும் கலந்த சுரிதாருக்கு அது எடுப்பாக தெரிந்தது.
“பையனா பிறக்க வேண்டியவங்க அண்ணி நீங்க! தப்பா பொண்ண பிறந்துட்டீங்க!!! ஹப்பப் பப்பா... என்னம்மா சைட் அடிக்குறீங்க! அண்ணனுக்கு இந்த வேலையையும் விட்டு வைக்க மாட்டீங்க போலருக்கு...”
தேன்மொழியின் கேலியை இயல்பாக எடுத்துக் கொண்டதன் அடையாளமாக புன்னகைத்த மஞ்சரி,
“இந்த பேச்சுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை... கல்யாணம் பத்தி பேசினா மட்டும் வாயை திறக்க மாட்டேங்குற...” என்று கிடைத்த சின்ன ‘கேப்பில்’ மனதில் இருந்ததை சொன்னாள்.
கல்யாணம் என்று காதில் விழுந்த உடனேயே... ‘அவனின்’ உருவம் தேன்மொழியின் கண் முன் பளிச்சிட்டு சென்றது...!
ஆனாலும்,
“இப்போ எதுக்கு அண்ணி இந்த பேச்சு...” என்று அவளின் உதடுகள் மெல்ல மெல்ல முனுமுனுத்தது.
“இப்படியே இன்னும் எவ்வளவு நாள் சொல்லிட்டு இருக்க போற? எல்லாத்தையும் காலா காலத்துல செய்றது தான் நல்லது. உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைச்சு கொடுப்பேன்னு அத்தைக்கு ப்ராமிஸ் செய்துக் கொடுத்திருக்கேன்”
“அது எனக்கும் தெரியும் அண்ணி... நடக்க வேண்டிய காலம் வரும் போது எல்லாம் தானா நடக்கும்... இப்போ நான் கிளம்புறேன்... பை பை...”
“கவனமா பார்த்து ஸ்கூட்டியை ஓட்டிட்டுப் போ... பை...”
✽✽✽
அன்று அலுவலகத்தை அடைந்தப் போது ஏனோ என்றும் இல்லாத விதமாக தேன்மொழியின் மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏதோ நடக்க போவதாக உள்ளுணர்வு கூறியது!
ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு அன்றைய வேலைகளை பற்றி யோசித்தப் படி நடந்தாள்...
மனம் வேறு சிந்தனையில் இருந்தப் போதும், பழக்க தோஷத்தில் கால்கள் தானாக அவளை லிஃப்ட் பக்கம் அழைத்து வந்தது...
அங்கிருந்த கூட்டத்தை கவனிக்காமல் என்னவோ நடக்கப் போகிறது என்று சொன்ன உள்ளுணர்வை பற்றி யோசித்தவள், லிஃப்ட் கீழே வந்து விடவும், மற்றவர்களோடு ஏறி நான்காம் மாடியை அடைய காத்திருந்தாள்.
அவளின் கண்கள் ஆர்வமின்றி லிஃப்ட்டில் அருகில் இருந்தவர்கள் பக்கம் சென்றது.
அலுவலகம் தொடங்கும் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. தெரிந்தவர்கள் அவளை பார்த்து புன்னகைத்தனர். பதிலுக்கு புன்னகைத்தப் படி பார்வையை திருப்பியவளின் கண்களில் அவன் தெரிந்தான்.
இது அவனே தானா???
கண்கள் தெறித்து விடுவதுப் போல உற்றுப் பார்த்தாள்!
சந்தேகமே இல்லாமல் அவனே தான்!
அவனுக்கு அவளை நினைவிருக்குமா????
அவள் திகைத்துப் போய் கேள்வியோடு அவனையே பார்த்தபடி இருந்தாள்...
அவள் பார்வை அவன் மீதே இருந்ததை உணர்ந்து தானோ என்னவோ அவனும் அவள் பக்கம் திரும்பினான்.
இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன!!!!
அவன் முகத்திலும் வியப்பும், திகைப்பும் ஒன்றாக தோன்றியது.
அவனுக்கும் அவளை நினைவிருக்கிறது!!!!!
அத்தியாயம் 02