ராணி... மகாராணி... - ராசு
அனைவருக்கும் வணக்கம்.
முத்தான எனது பத்தாவது கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இது கனவு போலத் தெரிகிறது. இத்தனை கதைகளை நானா எழுதினேன்? ஒரு சில அத்தியாயங்களோடு எழுதுவதற்கு சோம்பேறிப்பட்டுக் கொண்டிருந்த நான் இத்தனை கதைகளை நிறைவு செய்திருந்தால் அப்படி ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
வழக்கம் போல் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இதற்கு எல்லாம் நீங்களும், சில்சீயும்தான் காரணம்.
எப்போதும் போல் இந்த மகாராணிக்கும் உங்கள் ஆதரவை கொடுத்து எனக்கு ஊக்கம் தாருங்கள்.
என்றும் அன்புடன்
ராசு
அத்தியாயம் - 1
அவள் அந்த புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தாள்.
சராசரி பெண்களை விட சற்று உயரம் அதிகம்.
மெல்லிய உடல்வாகு. அவள் இருக்கையில் அமர்ந்திருக்க தரையைத் தொட்டுவிடத் துடித்துக்கொண்டிருந்தது அவள் கூந்தல்.
அவள் அதை லட்சியம் செய்யவில்லை. அவளைக் கடந்து செல்வோர் எல்லாம் அவளை ஒரு நிமிடம் திரும்பிப்பார்த்துவிட்டே சென்றனர்.
அவளை யாரும் கவரவில்லை. அவள் அங்கே அமர்ந்திருந்தாளே தவிர, அவள் கவனம் வேறு எங்கோ இருந்தது.
சுடிதார்தான் அணிந்திருந்தாள். அலங்காரம் இல்லாமலே அத்தனை அழகாக இருந்தாள். அவள் கால்களில் இருந்த மெல்லிய கொலுசு அவள் பாத அழகினால் அழகுடன் மிளிர்ந்தது.
அவள் அழகால் ஈர்க்கப்பட்டவர்கள் அவள் பெற்றோர் அவளுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணியபடி அவளைக் கடந்தனர்.
நமக்கும் ஓர் ஆவல். அவள் பெயர் என்னவாக இருக்கும்? என்று.
இப்போது அவளும் அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறாள்.
தன்னுடைய பெயர் என்ன என்று?
உடனே அவளுக்கு ஏதாவது வியாதியோ? அவள் தன்னையே மறந்துவிட்டாளோ? என்று எண்ணிவிட வேண்டாம்.
இப்போது தற்காலிகமாக தனக்கு என்ன பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் பெற்றோர் ஒரே பெயர்தான் வைத்தனர். ஆனால் அவள் உறவினர்களோ அவளுக்கு வகைவகையாக நிறைய பெயர் வைத்திருக்கிறார்கள்.
தரித்திரம் பிடித்தவள், விளங்காதவள், பீடை.... இன்னும் என்னென்னவோ?
அவளை நேரில் அழைத்திருந்தால் இப்போது அவளே தன்னை உறவினர்கள் இப்படி இப்படி எல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பாள்.
ஆனால் அவள் முன்னே அவர்கள் அவளை கண்ணு, தங்கம், வைரம்.... என்றுதானே அழைக்கிறாரகள். அவர்கள் மனதில் இருப்பது எல்லாம் என்னவென்று அவளுக்குத் தெரியும்.
இப்போது மேற்கொள்ளப் போகும் இந்தப் பயணத்தில் என்ன பெயர் வைத்துக் கொள்ளலாம்? இதுதான் அவளது யோசனையாக இருந்தது.
எங்கே செல்ல வேண்டும்? என்றும் அவள் இன்னும் முடிவு செய்யவில்லை. வீட்டில் இருந்து வெளியில் வந்தால் போதும் என்று கிளம்பி வந்துவிட்டாள்.
அவளைக் காணோம் என்று யாரும் தேடப்போவதில்லை. அவரவர்க்கு என்ன தேவையோ அது கிடைக்கும்போது அவளை எப்படி தேடத்தோன்றும்? ஒரு வகையில் அவள் வீட்டில் இல்லாததே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எனும்போது அவளை எப்படி தேடுவார்கள்?
மனதில் ஒரு வெறுமை தோன்றியது.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஓட்டம்?
காலம் தனக்காக என்ன வைத்திருக்கிறது? என்று தெரியாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறாள்.
எது வரைக்கும் இந்த ஓட்டம் என்று தெரியவில்லை.
அவள் வாழ்வை விதி மாற்ற நினைத்தது போலும். கடவுள் போதும் இந்தப் பெண்ணை சோதித்தது என்று அவள் மீது சிறிதாக கருணை காட்ட முடிவு செய்தார் போன்று அவளுக்கு எங்கே போவது என்று ஒரு வழி கிடைத்தது.
அவள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது ஒரு கடை. அங்கு தொலைபேசியகம் இருந்தது. அந்தக் கடையில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
அவள் கையிலேயே விலையுயர்ந்த ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருந்தாள். இருந்தும் அதில் இருந்து பேசாமல் அவள் அந்த தொலைபேசியை நாடியிருந்தாள்.
தனது பேச்சை யாரும் கேட்பார்களே என்ற கவலை அவளுக்கு துளியும் இல்லை. மறுபக்கத்தில் பேசுபவரின் மீது அந்த அளவிற்கு வெறுப்பு என்பது அவள் பேசும் போது அவள்முகச்சுளிப்பிலிருந்தே அவளுக்குத் தெரிந்தது.
வார்த்தைகளும் சிறு மாற்றமும் இல்லாமல் அந்தப் பெண் பேசுவது அவள் காதுகளில் விழுந்தது.
அதுதான் விதி போல. அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டதும் அவளுக்கு எங்கே போக வேண்டும் என்ற முடிவு தெரிந்தது.
அந்தப் பெண் பேசியதன் சாராம்சம் இதுதான். அவள் காதுகளில் அந்தப் பெண்ணின் பேச்சு ரீங்கரித்துக்கொண்டேயிருந்தது.
"நான்தான் மோனி பேசறேன். என்னது அந்தப் பட்டிக்காட்டுக்கு நான் வரனுமா? உனக்குப் பணம் சம்பாதிக்கனும்னா நான்தான் கிடைத்தேனா? என்னை உங்க வீட்டிற்கு மருமகளா கொண்டு போயிட்டா எங்கப்பா சொத்து உனக்கு கிடைக்கும்னு மனப்பால் குடிக்காதே. பண்ணையம் பார்க்கிற உனக்கே இப்படி தோணுச்சுன்னா, உன் புத்தியை புரிஞ்சிக்க முடியாத அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. எப்படி எப்படி? எங்கப்பாவிற்குத் தெரியாமல் நான் வரவேண்டுமா? என்னை வைத்து எங்கப்பாவை மடக்கலாம்னு நினைத்தீயா? அதுக்கு எங்கம்மா தூது. எங்கம்மாவுக்கு பிறந்த வீட்டு சொந்தம் வேண்டும். எங்கள் தகுதிக்கு உங்கள் வீட்டுப் பொண்ணை