Chillzee KiMo Books - பனிப்பாறை - பிந்து வினோத் : Panippaarai - Bindu Vinod

பனிப்பாறை - பிந்து வினோத் : Panippaarai - Bindu Vinod
 

பனிப்பாறை - பிந்து வினோத்

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை! நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.

இந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான்! கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்!

பொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.

ஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

 

அத்தியாயம் 1

ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வெட்கத்துடன் மின்னியப் படி அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

ஒவ்வொரு நாளும் சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.

அவள் தன்னை மறந்து இயற்கையின் எழிலில் மயங்கி இருக்க, பால் குக்கர், ‘ச்சு ச்சு..’ என ஒலி எழுப்பி அவளை அழைத்தது...

பிரிய தோழியிடம் விடை பெறுவது போல் வானத்திடம் பிரியா விடை பெற்று அவசரமாக சமையலறை வந்தவள், சத்தம் போட்டுக் கொண்டிருந்த குக்கர் இருந்த அடுப்பின் தணலை குறைத்தாள்.

“என்ன உனக்கு அப்படி அவசரம்? இப்படியா அலறுறது? உன்னால ஒரு நாள் எனக்கு காது கேட்காமல் போக போகுது, பார்த்துட்டே இரு... நான் தான் டைமுக்கு வந்திருப்பேனே, அப்படி என்ன உனக்கு அவசரம்?”

குக்கருடன் பேசிக் கொண்டே பக்கத்தில் இருந்த அடுப்பில் நான் ஸ்டிக் பேனை வைத்தவளின் கை பால் குக்கரில் இடித்தது... உடனே மீண்டும் சத்தமாக விசில் சத்தம் கேட்டது...

“அடடா, இன்னும் கோபமா? சாரிப்பா வானத்தை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... உனக்கு இருக்க கோபத்தில பால் டேஸ்ட்டை மாத்திராதே! எல்லோரும் காலையில் முதல்ல குடிக்குறது உன்னை தானே?”

கணவனுக்கு ஹார்லிக்ஸ், குழந்தைகளுக்கு பூஸ்ட் தயார் செய்தவள், மதிய உணவிற்காக சாம்பார் தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட துவங்கினாள்.

தாளித்து, காய்கள் சற்று வெந்த உடன், தனியே வேக வைத்து வைத்திருந்த பருப்பை எடுத்து கொட்டி கிளரியவள்,

“வீட்டில் எல்லோருக்கும் சாம்பார் ரொம்ப பிடிக்கும், நல்ல சுவையா இருக்கனும் சரியா?”

காலை உடல் பயிற்சி முடித்து வந்த சரவணன் மும்முரமாக அடுப்பில் இருந்த சாம்பாருடன் பேசிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து நின்றான்.

முகத்தில் புன்னகை மின்ன சமையலறையினுள் சென்றவன், மனைவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.

“என்னங்க இது! விடுங்க... குளிக்காமல்...”

“அது தான் எனக்கு பதில் நீ குளிச்சிட்டல்ல அப்புறம் என்ன? அது எப்படி எப்போதும் இப்படி ப்ரெஷ்ஷா இருக்க?”

“ப்ச்... முதல்ல கையை எடுங்க... தள்ளி நில்லுங்க!”

“ஹு ஹு ம்ம்ம்...”

“ப்ளீஸ்...”

அவளின் கெஞ்சலை ஏற்றுக் கொண்டவனாக சற்று தள்ளி நின்றவன்,

“ம்ம்ம்... சாம்பார், ரசம் கிட்ட எல்லாம் செல்லம் கொஞ்சு, என் கிட்ட மட்டும் எப்போ பாரு எரிஞ்சு விழு...”

“உங்க கிட்ட போய் ஏன் எரிஞ்சு விழுறேன்? நிறைய வேலை இருக்குங்க... பசங்க எழுந்திருப்பதற்குள் சமையல் முடிச்சா தான் அவங்களை கிளப்ப சரியா இருக்கும்... இந்தாங்க ஹார்லிக்ஸ்...”

வாங்கி கொண்டவன்,

“உனக்கு எங்கே?” என்றான்.                                          

“எனக்கு வேண்டாம்... நான் டயட்டில் இருக்கேன், இரண்டு கிலோ ஏறிட்டேன்... அதனால்...”

“வாயை மூடு! டயட்டாவது ஒன்னாவது ஒரு டம்பளர் எடு இரண்டு பேரும் ஹாஃப் ஹாஃப் ஷேர் செய்துப்போம்...”

“இல்லை...”

“கல்ப்ஸ்!”

“சரி சரி...”

“வா தோட்டத்தை பார்த்துட்டே ஹார்லிக்ஸ் குடிப்போம்...”

“டைம் ஆச்சுப்பா...”

சொல்லி சமாளிக்க முயன்றவள், கணவனின் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தை புரிந்துக் கொண்டு, அடுப்பின் தணலை குறைத்து விட்டு அவனுடன் சென்றாள்.

“பசங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குற கல்ப்ஸ்...”

“சின்ன பசங்க தானே?”

“சுமிக்கு ஏழு வயசாகுது, சுனிக்கு அல்மோஸ்ட் அஞ்சாக போகுது இன்னும் என்ன சின்ன பசங்கன்னு சொல்லிட்டு? எல்லாத்தையும் உன் தலையில் தூக்கி போட்டுக்காமல் அவங்களையே கொஞ்சம் கொஞ்சமா அவங்க வேலையை செய்ய சொல்லிக் கொடு...”