Chillzee KiMo Books - யாரவள் யார் அவளோ? - ராசு : Yaaraval yaar avalo? - RaSu

யாரவள் யார் அவளோ? - ராசு : Yaaraval yaar avalo? - RaSu
 

யாரவள் யார் அவளோ? - ராசு

சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் நிறைந்த இனிய காதல் கதை.

 

அத்தியாயம் - 1

பூஜை அறையிலிருந்து நறுமணம் கமழ்ந்து வந்தது. அத்துடன் ஒரு பெண்குரல் பூஜைக்குரிய பாடலை பாடிக்கொண்டிருக்கும் இனிமையான ஒலியும். அந்த ஒலியிலே அவன் கண் விழித்தான்.

அவன் முகிலன்.

பூஜை அறையில் இருந்து வந்த குரலைக் கேட்டுப் புன்னகைத்தான்.

‘ஓ அம்மா பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்களா?’

‘என்ன இன்னிக்கு அம்மாவோட குரல்ல வித்தியாசம் தெரியுது.’

அறையை சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது அறையிலும் வித்தியாசம் தெரிந்தது.

‘என்ன இது? என்னோட அறை போலவே இல்லையே?’

யோசனையுடன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

அவன் நினைத்த மாதிரியே அது அவனது அறை அல்லதான்.

அந்த அறை மட்டுமல்ல. அந்த வீடே அவனது அல்ல.

‘நான் எப்படி இங்கே? இது யார் வீடு?’

யோசனையோடு இருந்தவனை சன்னல் வழியாக தெரிந்த தோட்டம் ஈர்த்தது.

அவன் கால்கள் தானாக அவனை அங்கே இழுத்துச்சென்றன.

அங்கே தோட்டம் நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தது.

வீட்டு ஓரத்தில் மலர்களும் சற்று தள்ளி காய்கறியும் பயிரிடப்பட்டிருந்தது. சுவரை ஒட்டி பலவகை மரங்கள்.

மலர்களின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான். அவனுக்கு புத்துணர்வு கிடைத்தது.

‘ஒரு வேளை நாங்கள் சுற்றுலாவுக்காக வந்திருக்கிறோமோ? அது இன்னும் என் மனதில் பதியவில்லையா?’

‘ஒரு வேளை நேற்று இரவு வந்திருப்போமோ? இன்னிக்கு என் பிறந்த நாள் என்று நேற்று அம்மா கிளம்பி வரச்சொன்னார்கள் என்று கிளம்பி வந்தேனே? இரவு தாமதாகிவிட்டதால் உறக்க கலக்கத்துடனே அம்மா இங்கே அழைத்து வந்துவிட்டார்கள் போல.’

‘இந்த அம்மா இருக்காங்களே? சில நேரம் சின்னப் பிள்ளை மாதிரி இது என்ன அடம்?’

அவன் தன் தாயை எண்ணிச் சிரித்துக்கொண்டான்.

‘நான் வெளிநாடு போகப் போறதால் அம்மா இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. இங்கிருக்கிற சென்னைக்கு நான் போனதையே அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே. நான் அமெரிக்கா போகப்போறதை அம்மாவால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?’

‘எல்லாம் இந்த அப்பாவால் வந்தது. என்னை வெளிநாட்டுக்கு அனுப்புவது அவர் கௌரவம் என்று நினைக்கிறார்.’

‘ஆனால் அம்மாவுக்கு எனக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசை. அப்பாவுக்கும் மாமா மகள் ஸ்ருதியை எனக்கு மணமுடிக்க ஆசைதான். ஆனால் அம்மாவுக்குதான் அதில் விருப்பமில்லை.’

‘அதுவே ஆச்சர்யம்தான். எல்லாப் பெண்களும் தங்கள் புகுந்த வீட்டிலிருந்து மகனுக்கு பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதுவும் தன் கூடப்பிறந்தவனின் மகளை எடுப்பதற்கு அம்மா யோசிக்க என்ன இருக்கிறது? மச்சினன் பொண்ணை எடுக்க அப்பா ஆசைப்படும்போது அம்மாவுக்கு என்ன தடை?’

‘என்ன? ஸ்ருதி கொஞ்சம் நாகரீகமா இருப்பா. அவள் உடை உடுத்தும் விதத்தைப் பார்த்து அம்மா முகம் சுளிப்பார். அதற்கே என்ன அத்தை பட்டிக்காடு மாதிரி பேசுகிறீர்கள்? என்று நேரிடையாகவே அத்தையை பட்டிக்காடு என்று சொல்கிறோமே என்று யோசிக்காமல் சிரித்தபடியே ஸ்ருதி சொல்லிவிடுவாள். அவளிடம் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருக்கிறது. சரிசெய்துவிடலாம்.’

‘வரப்போகிற மனைவியைப் பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. அம்மா அப்பா யாராவது ஒருத்தர் விருப்பத்தைதான் நிறைவேற்ற முடியும். இரத்த சொந்தம் என்பதால் ஸ்ருதி அம்மா அப்பாவை நன்றாக கவனித்துக்கொள்வாள். அதுதானே எனக்கு வேணும்.’

‘நான் வெளியில் வந்து இவ்வளவு நேரமாயிற்று. இன்னுமா அம்மா பூஜை முடித்து வரவில்லை. யார் யார் இங்கே வந்திருக்கிறார்கள். நாங்கள் வருகிறோம் என்று தெரிந்திருந்தால் ஸ்ருதி குதித்துக்கொண்டு வந்திருப்பாள். எங்கே இரவோடு இரவாக அம்மா என்னைக் கடத்திக்கொண்டு வந்திருப்பதை பார்த்தால் ஸ்ருதி வந்திருக்க மாட்டாள் என்றுதான் தெரிகிறது.’

‘இந்த அம்மா இருக்காங்களே!’ அன்னையை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டான்.

‘அவள் மட்டும் வந்திருந்தால் இந்த இடத்தின் அழகை என்னால் நிம்மதியாக ரசித்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா?’

‘தோளில் எப்போதும் தொங்கிக்கொண்டு, ஏதாவது தொணதொணத்தவாறே இருப்பாள். எனக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கும். எப்படித்தான் அவளோடு காலம் பூரா கழிக்கப்போறேனோ? என்ன பண்றது? அவ வந்தா நான் அம்மா அப்பாவைப் பத்தி கவலைப்படாம நிம்மதியா