கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத் : Kanavugal mattum enathe enathu... - Bindu Vinod
 

கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்

எஸ்.கே - நந்தினி’ஸ் லவ் ஸ்டோரி.....!

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

 

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

 

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!

 

1

இரு விழி உனது...

அப்ரூவ்ட்!

“யுவர் விசா இஸ் அப்ரூவ்ட்!”

(உங்கள் விசா அப்ரூவ் ஆகி விட்டது!)

நன்றி சொல்லிவிட்டு, தன் எதிரே இருந்த காகித தாள்களை ஒன்றாகத் திரட்டிக் கையில் இருந்த ஃபைலில் வைத்த நந்தினியின் முகத்தில் பல சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல் ஒளி வீசியது. கண்கள் நட்சத்திரங்களாய் மின்னியது.

அவளின் பல வருடக் கனவு நனவாகப் போகிறது.

அமெரிக்கா... அவளின் கனவு தேசம்... அங்கே சென்று படிக்க, சொர்க்கத்திற்குச் செல்லும் சாவியாக விசா கிடைத்து விட்டது.

மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீடு சென்றாள்.

நந்தினி - இருபத்தி நான்கு வயது இளநங்கை. நம் கதையின் கதாநாயகி.

கதைகளில் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளின் உருவத் தோற்றம் எதுவுமே இவளிடம் இல்லை.

மாநிறம்... இயல்புக்குச் சற்றே குறைந்த உயரம்.

அவளின் தம்பியும், தங்கையும் அவளைச் செல்லமாக, ‘குஷ்பூ’ என்று அழைக்கும் விதத்தில் சற்றே பூசினார் போன்ற உடல் வாகு.

மொத்தத்தில் கூட்டத்தில் நாம் தினமும் பார்த்துக் கவனிக்காமல் செல்லும் பல சராசரி பெண்களில் ஒருத்தி.

நந்தினியின் தோற்றம் அப்படி இருந்தாலும், குணத்திலும், அறிவிலும் அவள் மற்ற பல கதாநாயகிகளைவிட வெகுசிறந்தவள். சென்னையில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலை இருந்தது. மாதந்தோறும் கணிசமான சம்பளம் வந்தது.

நந்தினி வீட்டின் கேட்டை திறந்த சத்தம் கேட்டு உள்ளே இருந்து அவளின் தங்கை சுனந்தினியும், தம்பி நந்துவும் எட்டிப் பார்த்தார்கள்.

“அக்கா என்னக்கா ஆச்சு? எத்தனை தடவை போன் செய்றோம், நீ எடுக்கவே இல்லை. சொல்லுக்கா...”

சுனந்தினியின் ஆர்வமான கேள்விக்குப் பதில் சொல்லாமல் சின்னப் புன்னகையுடன் ஹாலில் சென்று அமர்ந்தவள்,

“கன்சலேட் உள்ள போறப்போ செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து செக்யூரிட்டி கிட்ட கொடுத்துட்டு போனேன். திரும்ப ஆன் செய்ய மறந்துட்டேன்” என்றாள்.

“அது இருக்கட்டும், விசா என்ன ஆச்சு அதைச் சொல்லு”

“ப்ச்...”

“என்னக்கா இப்படிப் பதில் சொல்ற?”

“ஏன் நந்தினி சின்னப் பசங்களை இப்படித் தவிக்க விடுற? விசா கிடைச்சிடுச்சுன்னு பொசுக்குனு சொல்ல வேண்டியது தானே?”

சமையலறையிலிருந்து அம்மா சரஸ்வதியின் குரல் ஒலித்தது.

“அம்மா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஹை, அப்போ விசா கிடைச்சிடுச்சா? கங்கிராட்ஸ் அக்கா”

“எனக்கு கிடைக்காமல் என்ன? இந்த மாதிரி ஒரு ஹை இன்ட்டலேக்சுவல் ஆளை யாராவது பார்த்திருக்க முடியுமா?”

“ஆமாம் ஆமாம், அதான் உன்னை ஏலியன் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க!”

தம்பியின் கேலியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவள், அவனின் தோரணையிலேயே,

“வாலு...” என்றபடி வாங்கி வந்திருந்த இனிப்புகளை அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாள்.

பின் சமையலறைக்குச் சென்று சரஸ்வதியை அன்புடன் அணைத்துக் கொண்டு,

“சூப்பர்மா... ஆனால் விசா கிடைச்சிடுச்சுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” எனக் கேட்டாள்.

“உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? இந்நேரம் விசா ஃப்ளாப் ஆகி இருந்தா ஒரு பத்து பன்னிரண்டு கால் போட்டுப் புலம்பி இருப்ப. கிடைச்சா தான் இப்படி அமைதியா, அமுக்கமா இருப்ப...”

“போங்கம்மா... எப்போ பாரு என்னை இப்படியே ஏதாவது சொல்லிட்டு இருங்க”

“என்னை வேற எப்படிச் சொல்லச் சொல்ற? உனக்கு இருபத்திநாலு வயசாகுது. கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள வருஷம் ஓடிடும். உனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு செய்தா தானே அடுத்து இருக்கிறவளை பத்தி நான் யோசிக்க முடியும். நீ என்னடான்னா இருக்க நல்ல வேலையை விட்டுட்டு அமெரிக்கா போறேன்னு சொல்ற...!”

“அம்மா, அங்க போய்ப் படிக்கிற சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்குறதில்லை... எனக்கே படிப்பு தவிர, மூணு வருஷ வேலை அனுபவம் எல்லாம் வச்சு தான் இந்த அட்மிஷன் கிடைச்சிருக்கு. அப்போ கூட விசா கிடைக்குமான்னு பயமா தான் இருந்தது. நல்லவேளை