என்றென்றும் உன்னுடன்... - பிந்து வினோத்
கணவன் மனைவி உறவுக்கு பல விதமான பரிமாணங்கள் உண்டு.
அதில் ஒரு பரிமாணத்தை சொல்லும் நாவல் 'என்றென்றும் உன்னுடன்...'
நேர்த்தியான குடும்பக் கதை.
01. என்றென்றும் உன்னுடன்...
“இந்தாங்க அத்தை பிரசாதம்....”
சுமியின் கையில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்ட பூங்கோதை, அருகே இருந்த செந்தாமரையை பார்த்தாள்.
சுமியும் செந்தாமரையை பார்த்து,
“நீங்களும் எடுத்துக்கோங்க ஆன்ட்டி...” என்றாள்.
குங்குமத்தை வேகமாக எடுத்து வைத்த செந்தாமரை,
“சரி, பூங்கோதை... அப்புறமா பேசலாம்... என் மருமக வர நேரமாச்சு... வேலையை முடிச்சு வைக்கனும்... வரேன்ம்மா சுமி....” என்று சொல்லி விட்டு சென்றாள்.
செந்தாமரை செல்வதை பார்த்து விட்டு வீட்டின் சமையலறைக்குள் புகுந்தாள் சுமி.
சில வினாடிகளில் பூங்கோதையும் அங்கே வந்து சேர்ந்தாள்....
“என்ன அத்தை என்ன சொல்றாங்க உங்க பிரென்ட்....”
“எப்போவும் சொல்ற கதை தான்... வேறென்ன....”
“புதுசா ஒன்னுமேவா சொல்லலை???”
“உனக்கு பொறுப்பு கம்மியா இருக்காம்.... மாடியில மழை தூரல் போடும் போது காஞ்ச துணியை எடுக்காமல் வானத்தை வேடிக்கை பார்த்துட்டு நிக்குறீயாம்....”
“அட என்னமா கண்டுபிடிச்சுருக்காங்க.... நீங்க என்ன சொன்னீங்க?”
“நான் என்ன சொல்வேன்... ஆமாம் அப்படி தான்னு சொன்னேன்....”
சுமி எதுவும் சொல்லாமல் பூங்கோதையை பார்த்தாள்...
“அவக் கிட்ட எல்லாம் அப்படி தான் பேசனும் சுமி.... உனக்கு சப்போர்ட் செய்து பேசி நாம ஒத்துமையா இருக்கோம்னு காமிச்சேன்னு வை அவ்வளவு தான், கண்ணு போட்டுடுவா...”
“ப்ச் விடுங்க அத்தை....’
“இப்போ கூட திருஷ்டி சுத்தி போடனும், அவ உன்னை பார்த்த பார்வையிலயே கண்ணு பட்டிருக்கும்....”
சுமி, கையில் இருந்த பளிச்சிடும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரத்தை எடுத்து அதில் பிம்பமாக தெரிந்த தன் முகத்தை பார்த்தாள். அதுவும் பளிச்சென்று தான் இருந்தது....
நல்லவேளை கவிதா இல்லை, இருந்திருந்தால், கிண்டல் செய்திருப்பாள் என்ற சிந்தனையுடன் அங்கே இருந்த சின்ன கடிகாரத்தை பார்த்தாள்.
அது நேரம் ஐந்தரை என்றது....
“அவங்க கதையை விடுங்க அத்தை, கவிதா எங்கே? இன்னுமா காலேஜ்ல இருந்து வரலை?”
“கவிதாவா? இதோ இருக்காளே, நீ கவனிக்கலையா??? ஹேய் கவி... கவி என்னடி செய்ற?”
பூங்கோதை பார்த்த திக்கில் திரும்பி பார்த்தாள் சுமி.
எப்போதும் வாயாடிக் கொண்டிருக்கும் கவிதா, கப்பல் கவிழ்ந்து விட்டதை போல கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஹேய் கவி கவி....”
பூங்கோதை அழைப்பது அவளின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை...
சமையலறையை விட்டு வெளியே சென்று கவிதாவை மெல்ல தட்டினாள் சுமி.
“என்ன ஆச்சு கவி??? எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு???”
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த கவிதா, சுமியை பார்த்து திருதிருவென விழித்தாள்.
“என்ன முழிக்குற??’
“அண்ணி நல்லா மாட்டிக் கிட்டேன்....’
“மாட்டிக் கிட்டீயா யார் கிட்ட மாட்டின? காலேஜ்ல ஏதாவது தப்பு செய்தீயா???”
“ஐயோ, அதுக்கு எல்லாம் யாராவது கவலை பாடுவாங்களா.... நான் நம்ம வீட்டு ஹிட்லர் கிட்ட மாட்டிக் கிட்டேன்....”
“ஹிட்லர் கிட்டேயா??? என்னடி சொல்ற???” என்றபடி அவர்களின் அங்கே வந்தாள் பூங்கோதை.
“ஆமாம்மா, இன்னைக்கு ஜெய்யோட பர்த்டே... ட்ரீட் தரேன்னு காபி டேக்கு அழைச்சிட்டு போனான்....”
“உன்னை மட்டுமா இன்வைட் செய்தான்???”
“இல்லை இல்லை, எங்க செட் முழுக்க தான்..... அங்கே போய் அரட்டை அடிச்சு, கலாட்டா செஞ்சுட்டு கிளம்பி வரும் போது, என்னோட சப்பல் பிஞ்சு போச்சு....”
“அப்புறம்?”
“மத்தவங்க எல்லாம் முன்னாடி நடந்துட்டு இருந்தாங்க... சோ என் கூட வந்துட்டு இருந்த ஜெய் எனக்கு ஹெல்ப் செய்ய என் சப்பல் எடுத்தப்போ....”
“உன் அண்ணன் பார்த்துட்டாரா???”
“ஆமாம் சரியா அந்த நேரத்துல எங்கே இருந்து தான் வந்தானோ... சும்மாவே குரங்கு மாதிரி உர்ருன்னு இருப்பான்.... அப்போ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்தான்... அவன் பார்த்த பார்வையில நான் பஸ்மம் ஆகாமல் இருந்தது தான் அதிசயம்.....”
சுமியும் பூங்கோதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்....
“நல்ல வேளையா அவன் கூட கோட் சூட் போட்ட ஒரு யானை குட்டி மாதிரி ஒருத்தர் இருந்தாரா, ஒன்னும் சொல்லாமல் அவர் கூட போயிட்டான்... ஆனால் அவன் பார்த்த அந்த