காதல் நதியென வந்தாய்...
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
காதல் நதியென வந்தாய்...!!!!
இனிய எளிய காதல் கதை :-)
01.
சூரியனின் ஒளி முகத்தில் மேல் வந்து விழவும், அந்த வெப்பத்தில் கண் விழித்தாள் பிரியா. அன்று ஞாயிறு என்பதால் அவசரமாக எழுந்து பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. கண்களை சுழற்றி பார்த்தவள் அவளுடன் தங்கி இருக்கும் சாதனா ஜாகிங் முடித்து வந்து அதே ஜாகிங் உடையுடன் பேப்பர் படித்து கொண்டிருப்பதை கவனித்தாள். சப் இன்ஸ்பெக்டராக பணி புரியும் சாதனாவிற்கு வார நாட்கள் வார இறுதி நாட்கள் என்று பேதம் எதுவும் இல்லை.
சென்னையில் புகழ்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் மேல்நிலை பள்ளி கணித ஆசிரியையாக பணி புரியும் இருபத்தியேழு வயதான பிரியாவிற்கு பார்த்த உடனே மனதில் பதியும் பளிச்சென்ற முகம்... எப்போதும் அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த புன்னகை தானாகவே மற்றவர் முகத்திலும் ஒரு புன்னகையை வரவழைக்கும்... ஆனால் ரோஜா பூவின் மீது மெல்லிய திரையை போட்டு மறைத்ததுப் போல், அவளின் அழகிய முகத்திலும் ஏதோ ஒருவிதமான திரை இருந்தது...
படுக்கையில் இருந்து பிரியா எழுந்திருக்கும் அரவம் கேட்டு திரும்பிய சாதனா,
“குட் மார்னிங் பிரியா...” என்றாள்.
பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்த பிரியா வேறு எதுவும் சொல்லாது அமைதியாக பாத்ரூம் நோக்கி சென்றாள்.
சாதனாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது. பிரியா எப்போதும் இப்படி தான்... ஒரு புரியாத புதிர்!
அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற தம்பதியினர் சென்னையில் முகப்பேர் அருகே இருந்த தங்களின் வீட்டை நான்கு பிரிவுகளாக பிரித்து வாடகைக்கு விட்டிருந்தனர்... ஒரு போர்ஷனில் அவர்கள் இருக்க மற்ற மூன்று போர்ஷனிலும், சாதனா, பிரியா போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கி இருந்தனர். ஹாஸ்டலும், ஷேர்ட் அக்கமடேஷனும் கலந்து உருவான இந்த இருப்பிடம் அவர்களை போல் தனியே பணி புரியும் பெண்களுக்கு வர பிரசாதமாக இருந்தது.
சாதனாவும், பிரியாவும் ஒன்றாக இதே போர்ஷனில் ஒன்றரை ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். ஆனாலும், இருவருக்குள்ளும் சாதாரண பரிச்சயம் இருந்ததே தவிர, நட்பு என்று ஏதுமில்லை... சாதனாவின் வேலைக்கு இது மிகவும் ஏதுவானதாக இருந்ததால் அவள் அதை கண்டுக்கொள்ளவில்லை... பிரியாவும் அதற்காக வருந்தியதாக தெரியவில்லை...
இருவரும் தனி தனியே தங்களுக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வார்கள். அப்படி சமைத்ததை இது போன்ற விடுமுறை நாட்களில் கொஞ்சமாக பகிர்ந்துக் கொள்வார்கள்! மற்றபடி, கரண்ட் பில், வாடகை இத்தியாதி இத்தியாதி செலவுகளை எந்த கணக்கும் பார்க்காது இரண்டாக பிரித்து வீட்டு ஓனரிடம் கொடுத்து விடுவார்கள்...
மற்ற ஞாயிறுகளை போலவே அன்றும் சோம்பலுடன் நாள் நகர்ந்தது... பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி நிறைவு பெறவும், தொலைக்காட்சி பெட்டியை அணைத்த சாதனாவின் காதில் அடுத்த அறையில் மெல்லிய ஒலியில் பிரியா கேட்டுக் கொண்டிருந்த பாடல் விழுந்தது...
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை - வேதனை தீரவும் வழியில்லை
“பிரியா, உங்களுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா? நிறைய தடவை இதையே கேட்குறீங்க?”
“ஆமாம் சாதனா பிடிக்கும்...”
“ம்ம்ம்... நல்ல பாட்டு தான்... ஆனால் வெளியே சொல்ல முடியாவிட்டால் மனசிலேயே ஏன் வச்சிருக்கனும்? எழுதி வென்ட் அவுட் செய்திடலாமே?”
“செய்யலாம் தான்...” என்ற பிரியாவின் பார்வை தன்னிச்சையாக மேஜையின் ஒரு மூலையில் இருந்த அந்த டைரியின் மீது விழுந்தது.
அதை கவனித்த போதும் கண்டுக்கொள்ளாமல் தன் பேச்சை தொடர்ந்தாள் சாதனா.
“இன்னைக்கு என்ன ப்ளான் உங்களுக்கு? நான் பிரெண்ட்ஸ் கூட மூவி போகலாம்னு இருக்கேன்...”
“என்ஜாய் செய்ங்க... நான் கொஞ்சம் நோட்ஸ் எடுக்கனும்... வர போகும் மன்த்லி டெஸ்டுக்கு க்வெஸ்ட்டியன் பேப்பர் செட் செய்யனும்...”
“என்னங்க நீங்க இப்படி இருக்கீங்க? ஆனால் உங்க ஸ்கூல் மேனேஜ்மென்ட் லக்கி தான், இப்படி ஒரு டெடிகேட்டட் ஸ்டாஃப் கிடைச்சதுக்கு...”
“அப்படி எல்லாம் இல்லை சாதனா, மத்த டீச்சர்ஸ் எல்லாம் என்னை விட ஒரு படி மேல்... இப்போ எல்லாம் டீச்சர்ஸ் மேல தானே ப்ரெஷர் அதிகம்... பசங்களை திட்ட கூடாது, மிரட்ட கூடாது, ஆனால் நல்ல மார்க்ஸ் வாங்க வைக்கணும்... இட்ஸ் வெரி சாலேன்ஜிங்...”
“ம்ம்ம்... புரியுது... சரி டைம் ஆச்சு நான் ரெடி ஆகுறேன்...”
அடுத்த ஒரு மணி நேரத்தை அலங்காரத்தில் கழித்த சாதனா, பிரியாவின் முன் வந்து நின்றாள்.
“இந்த புது ட்ரஸ்ஸில் எப்படி இருக்கேன்?”
“எப்போதும் போலவே அழகாக தான் இருக்கீங்க...” என்றாள் பிரியா அதே ரெடிமேட் புன்னகையுடன்.
- காதல்
- நதியென
- வந்தாய்
- பிந்து
- வினோத்
- Kadhal
- nathiyena
- vanthaai
- Bindu
- Vinod
- Romance
- Family
- SoftRomance
- women
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee