எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??
சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?
நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்
அத்தியாயம் 1
நந்தினி!
நம் கதையின் கதாநாயகி!
இருபத்தி எட்டு வயதாகும் கன்னிகை!
இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அமெரிக்க சார்லட் (Charlotte) நகர கிளையில் ப்ராஜக்ட் மேனேஜராக பணியாற்றுபவள்.
அலட்டலில்லாமல் சாதாரணமாக கிளிப் செய்யப்பட்ட கூந்தல். வேலைக்கு ஏற்ற ப்ரோஃபஷ்னல் பேன்ட் – ஷர்ட்! இது தான் நந்தினியின் ட்ரேட்மார்க் இமேஜ்!
பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிப்பவள் என்றாலும் முகத்தில் பெயருக்கும் மேக்கப் கிடையாது! ஏன் சின்ன பொட்டு கூட கிடையாது!
அவளுக்கு பதிமூன்று வயதான போது, அவளின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிப் பெயர்ந்தார்கள். இங்கே வந்த இரண்டு வருடங்களில் அவளின் அம்மா இறந்து விட, நந்தினியின் வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போனது!
அவளின் அம்மா இறந்த இரண்டு வருடங்களில் அவளின் அப்பா அமெரிக்கக் பெண் ஒருத்தியை திருமணம் செய்துக் கொண்டார். அது முதல் மெல்ல மெல்ல அவளின் அப்பாவும் அவளின் வாழ்வில் இருந்து விலகி செல்ல தொடங்கினார்.
எப்படியோ படித்து பட்டம் பெற்று நல்ல சம்பளத்துடன் வேலையையும் பெற்று விட்டாள்!
ஆனால் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு எப்போதுமே கசக்கும் பாகற்காயாகவே இருந்தது!
அவளுக்கு சுவாசக்காற்று, உணவு, நீர் எல்லாமே அவளின் வேலை மட்டுமே!
க்ளையன்ட்டிடம் இருந்து வந்திருந்த கேள்வி ஒன்றிற்கு அவசர அவசரமாக பதில் ஈமெயில் டைப் செய்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
“நந்தினி, இவர் சதீஷ் குமார். உன் டீமுல புதுசா அனலிஸ்ட்டா ஜாயின் செய்திருக்கார்”
“அண்ட் சதீஷ் இவங்க உன்னோட ப்ராஜக்ட் மேனேஜர். பேரு நந்தினி. அவங்களும் தமிழ் தான்”
வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்த ஈமெயிலை நிறுத்தி விட்டு, சக மேனேஜரான ஆர்த்தி அறிமுகம் செய்தவனை ஆர்வம் இல்லாமல் பார்த்தாள் நந்தினி!
இவனென்ன பனைமரத்தின் குடும்பத்தில் இருந்து வந்தவனா, இவ்வளவு உயரமாக இருக்கிறான்?
“ஹெலோ நந்தினி! நான் 6.2 ஃபீட்” என அவளின் மனதில் ஓடிய கேள்விக்கு தானாகவே பதில் சொன்னான் அந்த சதீஷ்!
எரிச்சலுடன் பார்வையை திருப்பியவள்,
“தேங்க்ஸ் ஆர்த்தி” என்று ஆர்த்திக்கு நன்றி சொல்லி விட்டு, சதீஷை பார்க்காமலே,
“டேக் யுவர் சீட். ஒரு ஈமெயில் அனுப்பிட்டு வரேன்” என்றாள்.
அதற்கு மேல் எதை பற்றியும் கவலைப் படாமல் தன் ஈமெயில் வேலையை தொடர்ந்தாள்.
ஆர்த்தி சென்று விட, சதீஷ் நந்தினி சொன்னது போல அவளின் மேஜையின் மறுப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
ஒருவழியாக ஈமெயிலை அனுப்பி விட்டு நிமிர்ந்த நந்தினியின் காதுகளில் சதீஷ் மிக மிக மெல்லியக் குரலில் பாடிக் கொண்டிருந்த,
தென்றல் தென்றல் தென்றல் வந்து...
பூவுக்குள் சிலிர்க்கிறதே...
என்ற வரிகள் விழுந்தது...
யார் இவன்... இங்கே வந்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறான்... என்ற கடுப்புடனே,
“சாரி, ரொம்ப நேரம் வெயிட் செய்ய வச்சுட்டேனா?” என்றாள்.
“ரொம்ப நேரம் இல்லை. வெறும் பதினஞ்சு நிமிஷம் பதிமூணு செகண்ட் மட்டும் தான்!”
நக்கலாக அவன் சொன்ன பதில் அவளுக்கு மீண்டும் எரிச்சலைக் கொடுத்தது!
‘கஷ்டம்!! இவனுடன் எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்று அவளுக்கு தலை எழுத்து!!!!’ என மனதினுள் புழுங்கியவள்,
“அது ரொம்ப இம்பார்டன்ட் ஈமெயில்! சரி, நாம விஷயத்துக்கு வருவோம். உங்க பேக்ரவுண்ட் பத்தி சொல்லுங்க சதீஷ்!”
“பேக்ரவுண்ட்டா?” எனக் கேட்ட படி திரும்பி பார்த்த சதீஷ்,
“இந்த பச்சை கலர் வால் பேப்பர் ரொம்ப அழகா இருக்கு! டிசைன் இருந்திருந்தா இன்னும் ரொம்ப அழகா இருந்திருக்கும். ஆனால் ப்ரோஃபஷ்னல் லுக் இருந்திருக்காதோ...?” என்றான்.
நந்தினிக்கு அவனின் குறும்புத்தனமான பேச்சு ரசிக்கவில்லை!
“லுக் ஹியர் சதீஷ்! வேலை நேரத்துல இந்த மாதிரி பேசுறது, வழியுறது எல்லாம் எனக்கு பிடிக்காது. நீ வொர்க் செய்ய போறது புது ப்ராஜக்ட். அதுல நிறைய க்ரோத் எதிர்ப்பார்க்கிறோம். நீ இப்படி சின்னப்பிள்ளைதனமா நடந்துக் கிட்டா நான் வேற அனலிஸ்ட் தேட வேண்டி இருக்கும்”
அவளின் கண்டிப்பான குரல் சதீஷின் குறும்புத்தனத்தை கட்டிப் போட்டது.
- Bindu
- Vinod
- பிந்து
- வினோத்
- estm
- NandsSK
- Family
- Romance
- Extra_Romance
- KDR
- OKR
- shortRead
- Tamil
- Drama
- Books