Chillzee KiMo Books - உன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா சுப்பையா : Unnil tholainthavan naanadi - Prama Subbiah

உன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா சுப்பையா : Unnil tholainthavan naanadi - Prama Subbiah
 

உன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா சுப்பையா

பிரேமாவின் எழுத்தில் இன்னுமொரு அழகிய காதல் கதை!

 

 

நேரம் : இரவு 10

இடம் : பள்ளியறை

நபர்கள் : மணப்பெண், அவளின் தாய்

சூழ்நிலை : பிரளயத்தில் சிக்கிய சிட்டுக்குருவியாய் மணப்பெண், அதில் சிக்கவைத்த நிலையில் அவள் அன்னை

"ராசாத்தி “, நா எழவில்லை அந்த தாய்க்கு, என்ன சொல்வதாம் அவள்? , "நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில இங்க இருக்கன்னு உனக்கு புரியுதா..? பார்த்து நடந்துக்கோ மா", சற்றே மனம் தளர்ந்து தான் பேசினார் அந்த தாய்.

"மா, என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடேன் ப்ளீஸ் எனக்கு மூச்சே விட முடியல மா, என் கழுத்தை இறுக்கி பிடிச்ச மாதிரி இருக்குமா" என்று தான் இருக்கும் நிலையை மறந்து மகள்  பேச, அவள் அன்னையோ இதற்கு மேல் தான் அங்கே இருந்தால்  எங்கே அவள் சொன்னவாறே செய்துவிடுவோமோ என்ற அச்சத்தில்

 “ராசாத்தி , என்ன பேசுற நீ ? ஏதோ நம்ம பொண்ணை புகுந்த வீட்டில் விட்டுட்டு போகிறோமேன்னு பேசினா ? இங்க பாரு நான், உன் அப்பா, உன் தங்கை, நம்ம நிலைமை எல்லாம் நீ வாழப்போற வாழ்க்கையில் தான் இருக்கு புரியுதா..? இல்லை என்னால் இங்க இருக்க முடியல, மூச்சு முட்டுது அது முட்டுதுன்னு சொன்னால் வா நாம எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துக்கலாம்என்று சோகத்தை அகத்தே மறைத்து கோபத்தை புறத்தே அம்பலப்படுத்த

மகளோ  மௌனத்தை மட்டும் தன் தாய்க்கு பரிசளித்துவிட்டு எதையோ தீவிரமாய் யோசித்த பின்

மா எனக்கு ஒரு சத்தியம் செய்து தருவீங்களா ? என்று  மௌன விரதத்தை முடித்தாள்.

ஏற்கனவே மனம் உடைந்திருந்த அவள் தாயோஎன்ன கேட்க போறாளோ..? என்று எண்ணியவண்ணம்சொல்லுமா என்ன வேணும் உனக்கு?”என்று பரிவாக கேட்டாள்.

 எவ்வளவு தான் போலியான கோபத்தை  காட்ட நினைத்தாலும் அந்த தாயால் பரிவான வார்த்தைகளை தவிர்க்க இயலவில்லை போலும்

இந்த நிமிஷத்துக்கு அப்புறம் என் கண் முன்னாடி யாரும் எப்பவும் வந்துடாதீங்க ப்ளீஸ்என்று எங்கோ வெறித்தபடி  உதடுகள் துடிக்க  மகள் வேண்ட,  “ராசாத்தி!!” என்று அதிர்ந்தாள் அவள் அன்னை .

கேட்கிறேன் இல்லமா சத்தியம் பண்ணுங்க இனிமே என்னை யாரும் இங்க பார்க்க வர வேண்டாம் இங்கன்னு இல்லமா எங்கும் என்னை பார்க்க வேண்டாம் கல்யாணம் செய்துகொடுத்துட்ட உங்க பொண்ணு விரும்பி கேட்கிற சீதனமா இருக்கட்டும்”  என்று கசந்த மனதோடு கேட்டாள்.

வீம்புக்காரியின் அன்னையாய் அத்தாயும்  அவள் உள்ளங்கையில் சத்தியம் செய்தபடி தாங்காத மனபாரத்தோடு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

 எந்த தாயும் செய்ய இயலாத காரியத்தை செய்தவள் ஆயிற்றே தாங்கவில்லை அவளுக்கு. தன் சுயநலத்திற்காக தன் மகளின் வாழ்வை சூறையாடிவிட்டு?

தன் மேல் அவளுக்கு மூண்ட கோபம், தன் நிலையை எண்ணி மருகியவள் அவளால் செய்ய இயன்ற அழுதல் பணியை மட்டும் செவ்வனே செய்த வண்ணம்வாசலைதன் மகளின்  புகுந்த வீட்டு   வாசலை கடக்க  அங்கு இருந்த அனைவரும் அவளை ஆறா துயரோடு கண்டனர் என்றாலும் யாரும் அவளை தேற்ற முன் வரவில்லை.

எவ்வாறு வருவர் இதற்கெல்லாம் மூல காரணமே அவர்கள் எனும் போது எவ்வாறு வருவார்களாம் ஆறுதல் சொல்ல? என்னவென்று ஆறுதல் சொல்வார்களாம்?

திருமணம் முடித்த பெண்ணின் தாய், அவள் புகுந்த இல்லத்தாரிடம் கூறும் மொழிகளானஇனி அவள் உங்கள் இல்லத்து பெண் அவளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவள் வயதில் சிறியவள் ஏதேனும் தவறு செய்தாலும் பெரியவர்கள் நீங்கள்  அதை பெரிய மனம் கொண்டு பொறுத்து அவளை நல்வழிப்படுத்துவது உங்கள் கடமை என்பன போன்ற மொழிகள் இல்லை, ஏன் எனில் அங்கே அந்த பெரிய மனதுடன் யாருமே இருந்திருக்கவில்லை.

தன் நலனுக்காக, தன் மக்கள் நலனுக்காக, தன் சந்ததியின் நலனுக்காக பிறர் நலன் சூறையாடப்படுவதை என்னவென்று குறிப்பிடுவது?

அங்கே அந்த ராசாத்தி ஒரே நாளில் சில மணி துளிகளில் மாறியிருந்த தன் விதியை எண்ணி விரக்தியில் நின்றிருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவள் கணவன், அவளவன்.

கணவன் ஆம் அவள் கணவன், அலங்கோலமாய் இருந்த அவன் தலை முடியும் எப்போது வேண்டுமானாலும் நான் அவிழ்ந்து விடுவேன் என்று எச்சரித்த அவன் பட்டு வேட்டியும், தாறுமாறாய் பூட்டப்பட்டிருந்த அவன் பட்டு சட்டையின் பட்டனும், கையில் மது பாட்டிலும் தட்டு தடுமாறி வந்து கட்டில் காலில் மோதியவன் மெத்தையில் விழுந்துவிட

கையில் இருந்த மது பாட்டில் தரையில் விழுந்தது ஆனால் நொறுங்கவில்லை கட்டிய அவன் மனைவியை போல் தான் கட்டிக்கொண்டு வந்த மது பாட்டிலும் திடமானது தான் போலும் .அவனிடம் இருந்து வந்த  மதுவின் நாற்றம்  அவ்வறையை நிரப்பியது