என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்!!!
இனிய காதல் கதை.
அத்தியாயம் – 1
சென்னையில் பிரம்மாண்டமான அந்த மண்டபத்தில் கூட்டம் வழிந்தது. வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் வந்தவர்கள் திண்டாடினர். வரவேற்பில் நின்றிருந்தவர்கள் வந்திருந்த கூட்டத்தை வரவேற்று களைத்துப் போய் நின்றார்கள். இருந்தும் இன்னும் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது.
வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதே ஏதோ பெரிய இடத்து கல்யாணம் நடக்கிறது என்று நீங்கள் எண்ணுவது சரிதான். அதுவும் திருமணத்திற்கு வந்திருப்போரின் பகட்டை பார்க்கையில் அவர்கள் எவ்வளவு பெரிய இடம் என்று தெரிகிறது. பகட்டான மனிதர்கள் மட்டுமல்ல சாதாரணப்பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் இருந்த பொய் கலக்காத சந்தோசம் பார்க்கும் போது இந்த திருமணம் நடத்துபவர்கள் பணக்காரர்கள் மட்டுமல்ல மிகவும் நல்லவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது.
‘ஆதீபன் வெட்ஸ் சாதன்யா’ என்ற அறிவிப்பு அலங்காரத்துடன் வரவேற்கும் இடத்தில் இருந்து பார்ப்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது.
ஆதீபன் சென்னையில் மிகப் பிரபலமான பிசினஸ் மேன் நீலகண்டனின் ஒரே வாரிசு. இப்போது நீலகண்டன் இந்த உலகத்தில் இல்லையென்றாலும் அவரின் வற்புறுத்தலால் உலகத்தை மட்டுமல்ல பிசினஸ் பற்றியும் தெரிந்துகொண்ட மனைவி கற்பகத்தின் திறமையால் அவரின் தொழில் தொடர்ந்து நலிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது. கற்பகத்தின் திறமையால் எண்ணற்ற குடும்பங்கள் வறுமையின் நிறம் தெரியாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதோ இப்போது தங்கள் வீட்டு விழா போன்று அவர்கள் சந்தோசமுடன் நடமாடுவதைப் பார்க்கும் போதே கற்பகத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு தெரிகிறது.
ஆதீபன் இப்போதுதான் பிசினஸில் தாய்க்கு உதவியாக நுழைந்திருந்தான். அதற்கு முன் கட்டுக்கடங்காத காளையாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
பிசினஸை கட்டிக் காப்பாற்றிய கற்பகத்திற்கு தன் மகனை கண்டிக்க வழியில்லாமல் போய்விட்டது. அப்பா இல்லாத பிள்ளை என்ற சலுகை வேறு. அப்பாவின் துணை அவனுக்கு தேவைப்பட்ட நேரத்தில் திடீரென்று அவர் மறைவு நேர்ந்துவிட்டது. கணவனின் மறைவு ஒருபுறம். அவரது தொழிலை நலிய விடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒருபுறம் என்று கற்பகத்தை இழுக்க தன் மகன் தவறு செய்ய மாட்டான் என்ற அந்த தாயின் எண்ணம் தவறாகிப் போனதற்காக இதோ இப்போது அழுது கொண்டிருக்கிறார்.
சும்மா இல்லை. தன்னை ஒரு சாதனைப் பெண்மணியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் தன் கணவனின் புகைப்படத்தில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டானே என்று மகனின் மேல் தீராத கோபத்தில் இருக்கிறார். நீலகண்டன் மற்றவர் நலன் கருதுபவர். தொழில் போட்டியில் கூட அடுத்தவரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர். வேலையில் மட்டுமே கண்டிப்பை காட்டுபவர். தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கென அவர் செய்திருந்தது ஏராளம். அவரைத் தொடர்ந்து கற்பகமும் அதையேதான் செய்து கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட தங்களுக்கு இப்படி ஓர் மகன் பிறந்திருக்கிறானே என்று வெட்கப்பட்டார்.
எப்படிப்பட்ட தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டான்.
“அத்தை இப்படி அழறதால எதுவும் மாறப் போறதில்லை. ப்ளீஸ் அழாதீங்க. முகூர்த்த நேரம் நெருங்குது.” அவரை சமாதனப்படுத்தினாள் மணப்பெண்ணின் தங்கை சிநேகா.
அவர்கள் இருந்தது மணப்பெண்ணின் அறை. கற்பகம் நிமிர்ந்து மணமகள் சாதன்யாவை பார்த்தார். அவள் பொம்மை போன்று அமர்ந்திருந்தாள். அவள் எப்போதுமே அழகு தேவதைதான். இன்றைய அலங்காரத்தில் அவள் பொம்மை போன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்கள்தான்.
எந்த உணர்வும் இன்றி சொன்னதை செய்து கொண்டு இருந்த சாதன்யாவின் கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று கூட யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் எந்த மாற்றமும் தெரியவில்லை.
இதே சாதன்யா ஒரு வாரத்திற்கு முன்பு வரைக்கும் இப்படி இல்லை. அவள் கண்கள் கவி பேசும். அவளின் கலகலவென்ற பேச்சு மற்றவரைக் கவர்ந்திழுக்கும். அறிமுகமான நாளில் இருந்து அவள் ஒரு இடத்தில் சோம்பி நின்று கற்பகம் பார்த்ததேயில்லை. அவளின் துறுதுறுப்பு பார்த்து அவளை தனக்கு மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்ததுதான்.
ஆனால் இப்போது வேறு வழியில்லாத இக்கட்டில் தன் மருமகளாக்கிக் கொள்வதுதான் வேதனையைத் தந்தது. அதுவும் சாதன்யா தன் சுயநினைவை மறந்திருக்கும் போது இந்த திருமணம் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தன் மகன் கொண்டு வந்து நிறுத்திவிட்டானே என்று மீண்டும் தன் மகன் மேல் அவருக்கு கோபம் பொங்கியெழுந்தது.
சாதன்யா கற்பகத்தின் ஒன்றுவிட்ட தம்பி கந்தசாமியின் மகள். கிராமத்திலிருந்து பட்டணத்தில் வாழ்க்கைப்பட்ட பிறகு கொஞ்சம் தள்ளிப்போன உறவு நீலகண்டனின் மறைவுக்குப் பிறகு கற்பகத்தின் வேலைப் பளு உறவுகளிடம் இருந்து அவரைப் பிரித்து வைத்தது.