மௌனம் எதற்கு? - ராசு
காதல், செண்டிமெண்ட் கலந்த முழு நீளக் குடும்ப நாவல்.
அத்தியாயம் – 1
ராசாவின் மனசிலே…
“ராசா… ராசா…” இந்த அழைப்பு என்னை வெறுப்பேத்தியது ஒரு காலத்தில். இப்படி என்னை அழைப்பவள் என் தாய்.
நான் கோபத்தில் முகம் சிணுங்குவேன்.
“அம்மா எத்தனை தடவை சொல்றது என்னை ராசான்னு கூப்பிடாதேன்னு. எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க.” நான் கோபப்படுவது கூட என் தாய்க்கு அழகாக தெரிந்து தொலைத்தது.
“ஐயோ என் ராசாவுக்கு கோபத்தை பாருங்களேன்.” என்று என் கன்னத்தில் வழித்து முத்தமிட்டு வெகுளியாய் சிரிப்பாள்.
என் தந்தையோ ‘தம்பி’ என்றுதான் அழைப்பார்.
‘நான் என்ன உங்களுக்கு தம்பியா?’ அவரிடம் கோபத்தை காட்ட முடியாது. மனதிற்குள் மறுகுவேன்.
ஆனால் இப்போது அந்த அழைப்புகளுக்கு என் மனம் ஏங்குகிறது. ஒருவர் நம்முடன் இருக்கும்போது அர்களின் அருமை தெரியாது. ஆனால் அவர்கள் நம்மை விட்டு பிரிந்துபோய் விட்டால் அதுவும் திரும்ப வர முடியாத இடத்திற்கு சென்றுவிட்டால் அவர்களைப் பற்றிய ஏக்கங்கள் மட்டுமே நம்மிடம் மிஞ்சும்.
எனக்கும் அப்படித்தான்.
என் தாயின் அழைப்புக்கு மனம் ஏங்குகிறது.
அவள் மடி தேடி தஞ்சமடைய தோன்றுகிறது. அவள் என் கன்னம் தொட்டு கொஞ்சிய அந்த கைவிரலகளைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொள்ள இதயம் துடிக்கிறது.
தாயின் அருகாமை நாடாத வயதுதான் ஏது? எந்த வயதிலும் நம்மை குழந்தையாய் பார்க்கும் மனது அவளுக்குத்தான் இருக்கும்.
அப்போது அந்த ஊருக்கு நாங்கள் சென்ற போதும் எனக்கு பிடிக்கவில்லை.
அப்பா அரசு வங்கி ஒன்றில் மேலாளர். அவருக்கு கிடைத்த வேலை மாற்றத்தினால்தான் அந்த கிராமத்திற்கு போக வேண்டி வந்தது.
நகர வாழ்க்கையில் இருந்த எனக்கு அப்பா அழைத்துச் சென்ற அந்த கிராமம் பிடிக்கவில்லை.
வழக்கம்போல் அம்மாவிடம்தான் முரண்டு பிடித்தேன்.
“நான் வரமாட்டேன். நான் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன்.” நிர்தாட்சண்யமாக மறுக்கும் என்னை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் என் தாய்.
“நீ குழந்தைடா செல்லம். உன்னை எப்படி ஹாஸ்டலில் விட முடியும்?”
“நான் ஒன்றும் குழந்தையில்லை”
மறுக்கும் என் குரலில் அம்மா குழந்தைத்தனத்தைதான் கண்டாள்.
அந்த அம்மாவின் மனது என்னை எப்போதுமே குழந்தையாகத்தான் பார்த்தது. அதனாலேயே என்னை தன் கைப்பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால் அப்பாவோ என்னை பெரிய மனிதனாகப் பார்த்தார். அதனால் அவர் என்னிடம் இருந்து விலகி இருந்தார். தேவையான போது கட்டுப்பாடுகள் விதிப்பார். மற்ற நேரங்களில் வழிகாட்டுவதோடு சரி.
இருவருமே என் வயதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களுக்கு என் மனத் தாங்கல் புரியவில்லை.
எனக்கு அந்த ஊர் பிடிக்காமல்தான் இருந்தது அவளைப் பார்க்கும் வரையில்.
அவளை நான் சந்தித்தது ஒரு விபத்துதான்.
கட்டிட வேலைக்காக கருங்கல், ஜல்லிகளை கொட்டிவைத்திருந்தார்கள்.
அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பசங்களுக்குள் கைகலப்பு வந்தது. அந்த நேரத்தில் அவர்கள் வீசிய கல் ஒன்று என்னை நோக்கி பறந்து வந்தது. எதிர்பார்க்காத நான் திகைத்து நிற்கும்போதே என் நெற்றிப்பொட்டில் அந்தக் கல் பட்டு இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அதைக் கண்டதும் பசங்க கூட்டம் கல்லெறியப்பட்ட காக்கா கூட்டம்போல் காணாமல் போனது.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன்.
பதறி என்னை நோக்கி ஓடி வந்தவள் என் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அந்த நேரத்திலும் நான் அவளைக் கவனித்தேன்.
குண்டு கன்னங்களுடன் வண்டு விழிகளுடன் (ஒரு ஃப்ளோவுல வந்துருச்சு. ஹி..ஹி..ஹி) என்னை பார்த்தவளை நானும் பார்க்க முயன்றேன்.
என் வயதா எதுவென்று தெரியவில்லை. அவள் என்னை அழைத்தவிதம் கேட்டு என் மனம் மயங்கியது.
அவளின் இனிய குரலை கேட்டு என் மனம் மயங்க நெற்றிப் பொட்டில் பட்ட காயம் என் உடலில் மயக்கம் வர வைக்க அவளை பார்த்தவாறே மயக்கத்திற்கு போனேன்.
«««««
மாநகரப் பேருந்து மிகுந்த சிரமத்துடனும் படபடப்புடனும் விரைந்து கொண்டிருந்தது.
அதை விடவும் வேகமாக ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின் மனது ஓடிக்கொண்டிருந்தது.
ஒலி ஒளியின் வேகத்தைவிட மனதின் வேகம் பன்மடங்கு அதிகம் என்று அவள் படித்திருந்தாள். அந்த வேகத்தை இன்றுதான் உணர்கிறாள்.