நீ தான் என் சந்தோசம் - ராசு
ராசுவின் கைவண்ணத்தில் இன்னுமொரு அழகிய குடும்ப - காதல் கதை.
அத்தியாயம் – 1
அவர்கள் ஒரு நான்கைந்து பேர் கலகலத்தவாறு பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் தோழிகள். ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள்.
இப்போது பணியை விட்டுத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
பட்டாம் பூச்சிகளாய் சுற்றித்திரிந்த கல்லூரிக்காலத்தை விட்டு வெளியில் வந்து சில காலங்களே ஆனவர்கள்.
அதனால் இன்னும் அந்த குறும்பு அவர்களை விட்டு விலகவில்லை.
அவர்களில் ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் இன்னும் குடும்பப்பொறுப்பை உணராதவர்கள்.
“ஏய்! இங்க பாருங்கடி.”
ஒருத்தி திடீரென்று கூவினாள்.
“என்னடி ஆச்சு?” மற்றவர்கள் பரபரத்தனர்.
இதுவரை தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவரின் தலையை உருட்டிக்கொண்டிருந்தவர்கள் சற்றுநேரம் அதற்கு இடைவெளியிட்டு தங்கள் கவனத்தை தோழி கைகாட்டிய பக்கம் திருப்பினர்.
அவர்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆயாம்மாவின் மகன் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டு அங்கே வைக்கப்பட்டிருந்தது.
“இதில் என்னடி இருக்கு? நம்ம ஆயாம்மாவோட பையன் கல்யாணத்திற்காக வச்சிருக்காங்க. ஆயாம்மா கூட நமக்கும் பத்திரிக்கை வச்சிருக்காங்கள்ல. அவங்க வீடு இங்கேதான் இருக்கு.”
ஒருத்தி விளக்கமாக சொல்ல முதலில் கூவியவள் முறைத்தாள்.
“அது எனக்கு தெரியாதா? அங்கே நல்லா பாருங்கடி.”
அவள் கண்கள் மினுமினுக்க ஆவலுடன் கூற மற்றவர்கள் மீண்டும் அந்த திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த பலகையை பார்த்தனர்.
அவர்கள் விழிகளிலும் மின்னலடித்தன.
“ஏய்! யாருடி இவன்? செம ஹேன்ட்சம்மா இருக்கான்.”
அந்தப் பலகையில் அவனது ஒய்யாரமாய் நிற்கும் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்தது.
வசீகரப் புன்னகையுடன் வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.
“ஏன்டி? இவன் எந்த கட்சியிலாவது இருக்கானா? எந்த பேப்பரிலும் பார்த்த மாதிரியே தெரியலையே!”
“அப்படி எல்லாம் இல்லைடி. ஆயாம்மா அடிக்கடி சொல்வாங்களே. அவங்க பையன் வேலை பார்க்கிற இடத்தோட முதலாளி ரொம்ப நல்லவர்னு. அவரா இருப்பார்.”
“அவங்க சொல்லும்போது ரொம்ப வயதான முதலாளியா இருப்பார்னு நினைச்சேன். முன்னாடியே தெரிஞ்சிருந்தா...”
ஒருத்தி பெருமூச்சுடன் இழுத்தாள்.
“முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்னடி பண்ணியிருப்பே?”
இன்னொருத்தி இடையிட்டாள்.
“எனக்கும் அங்கேயே வேலை கிடைக்குமான்னு முயற்சி செஞ்சிருப்பேன்.”
“உனக்கு இங்கேயே எப்படி வேலை கிடைச்சதுன்னு நானே என் தலையை சுவற்றில் முட்டிக்கிட்டு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்.”
ஒருத்தி அவள் காலை வார
“ஏய் அந்த சுவத்துக்கு ஒன்னும் ஆகலையே?”
இன்னொருவள் அவளை வாரினாள்.
இத்தனை களேபரத்துக்கு இடையிலும் அவள் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
“என்னடி நீ ஒன்னும் சொல்லாம இருக்கே?”
ஒருத்தி அவளை இடித்தாள்.
“நீ ஒருத்திடி. அவ சரியான சாமியார்டி. அவளுக்கு அம்மா அம்மான்னுதான் பேச்சுக்கு முன்னூறு தரம் வரும். அதான் தெரிஞ்ச கதையாச்சே. இவ சரியான வீட்டுக்கோண்டு. எனக்கு என்னவோ இவ வீட்டை விட்டு வெளியே போகனுமேங்கிறதுக்காக கல்யாணம் பண்ணிப்பாளான்னே சந்தேகமா இருக்கு. அப்படியே பண்ணிக்கிட்டாலும அவங்க வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையைதான் பண்ணிப்பாள்.”
தன்னைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவள் பேசாமல் இருந்தாள். அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே. அவள் சரியான வீட்டுக் கோண்டுதான்.
இருந்தும் அவளை அசைத்துப் பார்த்திருக்கிறான் அந்த பலகையில் உள்ளவன்.
அவன் திருமணம் ஆனவனா? இல்லையா?
எதுவுமே அவளுக்குத் தெரியாது. இருந்தும் அவளது மனதில் ஆழப்பதிந்துவிட்டான்.
மற்றவர்கள் அவனைப் பற்றி பொழுது போக்காக பேசுகிறார்கள். பேருந்தில் ஏறி வீடு சென்றுவிட்டால் அவர்களது கவனம் வேறுபக்கம் சென்றுவிடும்.
அவர்கள் இன்றுதான் அந்த பலகையைப் பார்க்கிறார்கள். அவள் இரண்டு தினங்கள் முன்பே கவனித்துவிட்டாள்.