மாலையில் யாரோ மனதோடு பேச...! - பிந்து வினோத்
Chillzeeயில் என்றென்றும் உன்னுடன் - 01 என்ற பெயரில் தொடராக வந்த கதை இது.
சிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.
எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.
மூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.
சிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.
இது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.
சரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...!
சரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது? மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன? மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன?
தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள் :-)
01. மாலையில் யாரோ மனதோடு பேச...
காலிங் பெல் ஓசைக் கேட்டு செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அவசரமாக சென்று கதவை திறந்தாள் சரண்யா.
அங்கே அவள் எதிர்பார்த்தது போன்றே சின்ன புன்னகையுடன் கோபி நின்றிருந்தான். அவனை பார்த்த உடன் அவள் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் ஒன்றாக தோன்றின....
“சரண், எத்தனை தடவை சொல்லி இருக்கேன், யாருன்னு பார்த்துட்டு கதவை திறன்னு.... காலம் கெட்டு கிடக்குது. நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும்.”
“ப்ச்.... நீங்க தான்னு எனக்கு தெரியும்....”
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பாவின் குரல் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் ஒன்றரை வயதான நிஷா.
“ப்பா ப்பா.....” என்று மழலையில் அவள் பேச, குனிந்து அவளை தூக்கிய கோபி, மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சிரித்தான்.
“என்ன சரண் குழந்தையை தூக்கினா கூட முகம் இப்படி போகுது? நீயும் வா உன்னையும் தூக்குறேன்...”
“ஹையோ நினைப்பு தான்.... ஓமக்குச்சி மாதிரி இருந்துட்டு பேசுறதை பாரு....”
“யாரு ஓமக்குச்சி...” என்றபடி குழந்தையுடன் அவளின் அருகே வந்தவன், ஒரு கையாலே அவளை அலேக்காக தூக்கினான்...
“ஹையோ... விடுங்க....”
“நீ தானே தூக்க சொன்ன, அதெல்லாம் விட முடியாது....” என்று சொல்லி விட்டு, ராசாவின் மனசிலே ராஜ்கிரண் ரேஞ்சிற்கு மனைவியையும், குழந்தையையும் கையில் வைத்து சுற்றினான் கோபி....
“விடுங்க.... மணி ஏழாக போகுது... இன்னைக்கு பெங்களூரு போகணும்னு சொன்னீங்களே கிளம்பலையா??”
“ஏழா??? கிளம்பனும் கிளம்பனும்.... பெட்டி எடுத்து வச்சுட்டீயா சரண்?
“ம்ம்ம்... எல்லாம் ரெடியா இருக்கு....”
“தேங்க்ஸ் டா செல்லம்...”
மனைவியையும், மகளையும் கீழே இறக்கி விட்டவன், அவசர அவசரமாக கிளம்ப தயாராக தொடங்கினான்.
சரண்யா நிஷாவை கையில் தூக்கிக் கொண்டு, ஒரு ஓரமாக நின்று கணவனையே பார்த்திருந்தாள்.
மூன்று வருட உறவு என்றாலும் பல பல வருடங்களாக தொடர்ந்து வந்ததை போல கோபியுடன் அவளுக்கு ஒரு இனிமையான பந்தம் ஏற்பட்டிருந்தது.
பெற்றவர்கள் பார்த்து நடந்த திருமணம் என்ற போதும், திருமணத்திற்கு பின் தருவதாக அவளின் அப்பா சொல்லி இருந்த பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட சச்சரவில், மனைவியின் பக்கம் நின்று வீட்டை விட்டு வெளியே வந்தவன் கோபி....
இப்படி ஒரு நல்லவன் இருப்பானா என்பது போன்ற குணம்.... அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்.... அவன் கிடைத்தது அவளின் அதிர்ஷ்டம்....
அவள் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்க, சட்டை பாக்கெட்டை காலி செய்த கோபி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து தனியே வைத்தான்.
“மைத்ரேயி மேடம் போல ஒரு நேர்மையானவங்களை பார்க்கவே முடியாது சரண்....”
“யாரு அது மைத்ரேயி மேடம்???”
“ஓ! உன் கிட்ட நான் சொல்லலையா? சேகர் சார் அறிமுகப் படுத்தி வச்சார்.... ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி ஆனால் நம்ம ‘ஜி.எஸ்’ விட பெரிசா தனியா நடத்திட்டு இருக்காங்க....”
“ஓ...! அவங்க மட்டும் தனியாவா நடத்துறாங்க?”
“ஆமாம் சரண்... செம போல்ட் லேடி... டேலன்ட் ஆனவங்களும் கூட.... வாய்ப்பு கிடைச்சா உன்னையும் அறிமுக படுத்தி வைக்கிறேன்... உன்னை அவங்களுக்கு பிடிக்கும்... உனக்கும் அவங்களை பிடிக்கும்...”
“ம்ம்ம்.... அவங்க கம்பெனிக்கு ஏதாவது ஆர்டர் கொடுத்தாங்களா??”
“இல்லை டா.... அவங்க கம்பெனி ரிலேட்டடா இப்போ நாம எதுவும் செய்யலை... ஆனாலும் பெங்களூருல இருந்து வந்த உடனே அதை பத்தி யோசிக்கனும்... அவங்களை போல இருக்கவங்க கூட பிஸ்னஸ் கிடைச்சா நம்ம லக்....”
“சரி சரி... அதெல்லாம் அப்புறம் பேசலாம்... இப்போ சாப்பிடுட்டுட்டு கிளம்புங்க.... ரொம்ப லேட் ஆச்சு...! இப்போ கிளம்பினா கூட நீங்க விகாஸ் வீட்டுக்கு போக ஒரு மணி மேல ஆகிடும்....”
“ஆமாம்... நாளைக்கு பத்து மணிக்கு அந்த கம்பெனில இருக்கனும்.....” என்ற கோபி அதன் பின் சுறுசுறுப்பாக கிளம்பினான்....
மனைவி பரிமாறிய உணவை அவசரமாக முடித்தவன், பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப தயார் ஆனான்...
“கதவை நல்லா பூட்டிட்டு தூங்கு சரண்.... தெரியாதவங்களுக்கு கதவை திறந்து விடாதே... பத்திரம்....”
இது கிட்டத்தட்ட தினம் தினம் அவன் அவளிடம் சொல்வது தான்....
- பிந்து
- வினோத்
- Bindu
- Vinod
- Romance
- Family
- SoftRomance
- mymp
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee
- KiMo_Only_Specials