Chillzee KiMo Books - சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு : Sinthai mayanguthadi unnale - RaSu

 

சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு : Sinthai mayanguthadi unnale - RaSu
 

சிந்தை மயங்குதடி உன்னாலே

அழகிய காட்சி அமைப்புகளும், இனிய கதாபாத்திரங்களும் நிறைந்த குடும்ப நாவல்!

 

01

காற்றோட்டம் நிறைந்த சூழலில் அந்த தனியார் பள்ளி கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது

“அந்த கணீரென்ற குரல் உங்களை கவர்ந்து இழுக்கிறதா? வாங்க போய் யாருன்னு பார்ப்போம். ”

அது பத்தாம் வகுப்பு சி பிரிவு

“அட! இது நம்ம நாயகி மதுமதியோட வகுப்பாச்சே! அதான் ஒரு பயபுள்ள கூட ஆடாம அசையாம அப்படியே கவனிக்குதுங்க.”

“ஹும்! நமக்கும் இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தா கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்போமே! நீங்க பெருமூச்சு விடுவது எனக்கு நல்லா புரியுது. ஆனால் என்ன செய்யறது? நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான். சரி விடுங்க. வகுப்பு முடிய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு. இந்த மதுமதி என்ன செய்யறான்னு பார்ப்போமா?”

மதுமதியின் கணீரென்ற குரலில் அனைவரும் கட்டுண்டு அவளை விட்டு விழி விலக்காமல் அவளின் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்

மதுமதி கணக்குப் பாடத்தை விருப்பமாக எடுத்துப் படித்தவள். கணக்கு என்றால் பிணக்கு என்று நினைப்பவர்கள் மதுமதியிடம் வந்துவிட்டால் பிரியமான பாடமே கணக்குதான் என்று சொல்வார்கள்.

ஒரு முக்கியமான கணக்கிற்கு எப்படி தீர்வு கொண்டு வருவது என்று படிப்படியாக விளக்கிக் கொண்டிருந்தாள். அது மாணவர்களின் செவி வழி புகுந்து சிந்தையில் நுழைந்தது அவர்களின் பிரகாசமான கண்களில் தெரிந்தது கண்டு திருப்தியுற்றாள் மதுமதி

இன்னும் பாட வேளை முடிய பத்து நிமிடங்கள் இருந்தன. அவளின் குறிப்பறிந்து நோட்டை மூடி வைத்துவிட்டு ஆவலுடன் அவளை நோக்கினர். அவளும் அவர்களின் ஆவல் புரிந்து வழக்கமாக தான் மாணவர்களுக்கு சொல்வதற்காக தயார் செய்து வந்திருந்ததை சொல்வதற்கு ஆயத்தமானாள்

முழு பாட வேளைக்கும் அவள் எப்போதுமே பாடம் நடத்துவதில்லை. பாட வேளை முடியும் தருவாயில் அவர்கள் அடுத்த பாட வேளைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஈடுபாடு வரும் வகையில் பொதுவானதாக பேசுவாள். அது அவர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக அமையும்.

“மாணவ மணிகளே! உங்களில் எத்தனை பேருக்கு அரசு உத்தியோகத்துக்கு போக வேண்டுமென்று ஆசை உள்ளது?”

அவள் கேட்டதுதான் தாமதம், ஏறத்தாழ முக்கால்வாசி மாணவ மாணவியர் கை தூக்கினர்

“குட்! ஆனால் இப்போதெல்லாம் அரசு வேலை எளிதில் கிடைப்பதில்லை. நீங்கள் பட்டப்படிப்பு படித்துவிட்டால் வேலை வீடு தேடி வந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் வந்துவிட்டன. அதில் தேர்ச்சி பெற்றால்தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். என்ன புரிகிறதா?”

“புரிகிறது மிஸ். நீங்கள் கூட ’டெட் எக்ஸாம்;’ பாஸ் செய்தீர்களே அது மாதிரிதானே மிஸ்? ” கலெக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட தாமரை கேட்டாள்

“ஆமாம். அதே போல வேலைக்குத் தகுந்த மாதிரி போட்டித் தேர்வுகள் நடைபெறும். இப்போது அது சம்பந்தமாகத்தான் உங்களிடம் பேசப் போகிறேன்”

“மிஸ்! சொல்லுங்க மிஸ் ”

“இப்போதெல்லாம் போட்டித் தேர்வுகளில் ’திறனறிவுத் தேர்வு’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களின் காலம் முடிவுக்கு வந்து விட்டது. போட்டியாளர்களின் திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். ”

“மிஸ்! அது மாதிரி கேள்விகள் எங்களுக்கும் சொல்லுங்கள் மிஸ். ” ஆவலுடன் கேட்டனர்

“அது சொல்லத்தான் இப்போது ஆரம்பித்தேன். உதாரணமாக இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். டிசம்பர் 26, 2004 என்ன கிழமை என்று சொல்லுங்கள்?”

“ஞாயிற்றுக்கிழமை மிஸ். ” தாமரைதான் பதில் சொன்னாள்

“வெரிகுட்! எப்படி சரியாகச் சொன்னாய் தாமரை?”

“நீங்கள்தானே மிஸ் சொன்னீங்க. கலெக்டருக்குப் படிக்கனும்னா உன்னோட பொது அறிவை வளர்த்துக்கோன்னு. அதற்காக நான் தயார் செய்துகிட்டிருக்கேன். நீங்க சொன்ன தேதி சுனாமி வந்து பேரழிவு தந்த நாள்னு நான் படிச்சேன்.” தாமரை விளக்கமாக கூறினாள்

“குட்! இப்படித்தான் காரண காரியத்தோடு படிக்க வேண்டும். எந்த தேதி சொன்னாலும் அன்றைக்கு என்ன கிழமை என்று கூறுவதற்கு வழிமுறை இருக்கு.” என்று சொன்னவள் அதற்கான வழிமுறையைக் கூற ஆரம்பித்தாள். எல்லோரும் ஆவலுடன் கேட்டனர்

“ஓ.கே. புரியுதா?”

“புரியுது மிஸ். நாங்களே இனி தேதி சொல்லி கண்டு பிடிச்சு பார்க்கறோம் மிஸ்.”

“குட்! இப்படித்தான் இருக்கனும். இப்ப நான் ஒரு கேள்வி கேட்கப்போறேன். நீங்க ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடறீங்க. இரண்டாவது ஆளை முந்திட்டீங்க. அப்ப உங்க இடம் எத்தனையாவது இடம்?”

“முதல் இடம்.” ஒரு சில பேர் கோரஸ் பாடினர். சிலர் இதில் ஏதோ விவரம் இருப்பதாக யோசித்தனர்