காதல் கள்வனே
வாசகர்களுக்கு வணக்கம்.காதல் கள்வனே கிராமத்து பின்னனியில் அமைந்த குடும்ப கதை.திருநெல்வேலி தமிழில் என்னுடைய முதல் முயற்சி.கதையை படிக்கும் வாசகர்களுக்கு தமிழ் பாடல்களையும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் குறுந்தொகை பாடல்களை விளக்கவுரையோடு அளித்திருக்கிறேன்.
அத்தியாயம்-1
குறிஞ்சி - தோழி கூற்று (குறுந்தொகை)
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
என்பது தோழி கையுறை மறுத்தது.
-திப்புத் தோளார்
தலைவன் தலைவிக்காக அவளது தோழியிடம் பூ தருகிறான். அதனை அவள் வாங்க மறுத்துச் சொல்லும் சொற்கள் இவை. தலைவியின் இருப்பிடம் குன்றம். அதில் குருதிநிறச் செங்காந்தள் மலர்கள் மிகுதியாக உள்ளன. நாங்கள் அதனைச் சூடிக்கொள்வோம். உன் பூ வேண்டாம் என்கிறாள்.
அழகிய காலை வேளை சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பி அந்த நாளின் விடியலை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தான். சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாளோடு அருள்பாலிக்கும் சிவசைலம். தாமிரபரணி கொஞ்சி விளையாடும் தென்காசியின் அருகிலிருக்கும் சிறு கிராமம்.
திருநெல்வேலி மாநகரின் சிறப்பே இவை போன்ற சுற்றுலா தலங்களே. . பாபநாசம்,மணிமுத்தாறு,அம்பாசமுத்திரம்,இன்னும் அதை சுற்றியுள்ள சிறு சிறு ஊர்களும் கூட இயற்கை எழில் கொஞ்சுவதாய் இருக்கும்.
இப்படியான அந்த ஊரின் மக்களால் பெரிய வீட்டு ஐயா என்றழைக்கப்டும் மகேந்திரநாதன் தன் துணைவி பாக்கியத்தோடு கோவிலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
“ஏலேய் யாரு இவுக?அத்தனை பேரும் பேசுறாவ?”
“ம்ம் இவுக தான் பெரிய வீட்டு ஐயாவும் அம்மாவும். . இந்த ஊர்லயே மதிப்பான குடும்பம். தென்காசியில ஆண்டவன் ஜவுளிக்கடல் இருக்கே அது இவுகளோடது தான். அது மட்டுமில்லாம சொந்தமா நெசவு கைத்தறினு நடத்தி அதுலயும் நிறைய பேருக்கு வேலை கொடுத்துருக்காக. . போன வாரந்தான் இரண்டு பேருக்கும் எண்பதாங் கல்யாணம் கூட முடிஞ்சுது. ஊரையே கூட்டி திருவிழா மாதிரி நடத்தி போட்டாகனா பாத்துக்கோயேன்.
காசு பணம் இருந்தாலும் குணம் எல்லாருக்கும் வருமா சொல்லு. . அம்புட்டு பரிவா பேசுவாக எல்லார்ட்டையும். . உதவினு போனா முடியாதுங்கிற வார்த்தையே வராது. . அவுக குணத்துக்கு ஏத்த மாதிரியே மூணு புள்ளைங்க. . அதைவிட பவுசா மூணு மருமவள்களும் அத்தனை சாமர்த்தியம். . இந்த காலத்துலயும் எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல சேர்ந்து இருக்காகனா பாத்துக்கோ. .
அதுமட்டுமில்லாம பேரன் பேத்தினு அம்புட்டும் கல்யாண வயசுல. . என்ன தான் நம்ம பெரிய ஐயா மாதிரி பசங்க பகுமானமா இருந்தலும், அவுகளோட மூத்த பேரன் எழிலமுதன் இருக்கான் பாரு. இந்த வயசுலயே அத்தனை கம்பீரம்.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு தான் இருக்கும் பேச்சு. நம்மூரு சல்லிப் பயலுக எல்லாம் பயப்படுற ஒரே ஆளு அவந்தேன். . யாரும் நின்னு பேசவே பயப்படுவாக. . கோபம் இருக்குற இடத்துல தான் குணமிருக்கும்னு சொல்லுவோமே அது இந்த புள்ளைக்கு நல்லாவே பொருந்தும். உதவினு யாரு வந்து நின்னாலும் யோசிக்காம செஞ்சு கொடுக்கும். ”
“அட என்னப்பா யாருனு கேட்டதுக்கே இந்தா பேச்சு பேசுதியே. . ”
“இதெல்லாம் ரொம்வே கம்மி லே. . என் பொண்ணுக்கு படிப்பு செலவுகூட இவுக தான் பர்த்துக்குறாக. . அப்பறம் பேச மட்டேனா…வந்துட்டான். . போ போ போய் பொலப்ப பாருவே. . ”
கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அந்த பெரிய வீட்டின் வராந்தாவிலேயே அமர குரல் கொடுப்பதற்குள் கையில் சொம்பு தண்ணீரோடு வந்து நின்றார் வெற்றிச் செல்வி.
பெரிய வீட்டின் மூத்த மருமகள். மூத்த மருமகள் என்பதற்கான கர்வமோ மிடுக்கோ இல்லாத சாந்த சொரூபிணி என்று தான் கூற வேண்டும். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர். ஆனாலும் யாரிடம் எந்த வேலையை எப்படி வாங்க வேண்டுமென நன்றாகத் தெரிந்தவர்.
அதுவும் அவரது கணவர் அதியமான் உட்பட. அதியமான் சற்றே கோபகாரர் எதற்கெடுத்தாலும் சட்டென பொறுமை இழக்கும் சுபாவம். இவர்களின் ஒரே புதல்வன் தான் எழிலமுதன்.
அதியமானிற்கு பிறகு நான்கு வருட இடைவேளியில் பிறந்தவர் அகத்தியன் அப்பாவும் அண்ணணுமே உலகம் அவருக்கு. அண்ணணும் மதினியும் காட்டும் பெண்ணைத் தான் திருமணம் செய்வதாய் உறுதியாய் கூறிவிட வெற்றிச் செல்வியின் தேர்வு தான் மலரொளி அகத்தியனின் சரிபாதி.
அவர் தேர்வு செய்ததினாலோ என்னவோ அவர்கள் இருவருக்கும் எந்தவித மன கசப்புகளும் இல்லாமல் போனது. அக்கா தங்கையாகவே இருந்தனர். அகத்தியன் மலரொளிக்கு ஒரு ஆண் மகவு பெயர் தமிழமுதன். எழிலை விட ஐந்து வயது இளையவன். ஓர் தாய் வயிற்றுப் பிள்ளை இல்லையெனினும் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு இடையில் எந்த பாகுபாடும் பார்த்ததில்லை.
இவர்களைத் தொடர்ந்து கிட்டதட்ட ஆறு வருடம் கழித்து பிறந்தவர் அதியன். பெரிய வீட்டின் கடைக்குட்டி. அந்த பெயருக்கு மிகவுமே பொறுத்தமானவர். அத்தனை வானர வேலைகளையும் செய்வார் சிறு வயது தொடங்கி வாலிப வயது வரையுமே. .
அனைவருக்கும் இளையவர் என்பதால் யாராலும் அவரின் குறும்புகளை ஓரளவுக்கு மேல்