நால்வரின் காதல் பிரிவால் உருவான இரண்டு அழகான ஆழமான காதல் கதையிது.
பாகம் 1.
இன்று சுபமுகூர்த்த நாள்.
இரு வெவ்வேறு இடங்களில் இரு திருமணங்கள் ஏற்பாடானது, ஒன்று பிரித்விக்கும் அமுதாவிற்குமான திருமணம் அமுதாவின் ஊரான அலங்காநல்லூரில் மிக விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே மகள் என்பதால் அமுதாவின் பெற்றோர் திருமணத்தை ஏதோ ஊர் திருவிழா போல நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு திருமணம் வீரையனுக்கும் சுரபிக்குமான திருமணம், அதை சுரபியின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் மிகவும் எளிமையாக மண்டபத்தில் கூட வைக்காமல் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தார்கள் அவளது பெற்றோர்கள்,
இரு திருமணங்களும் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என வந்தவர்கள் வாயார புகழ்பாடும் அளவுக்கு இரு திருமணங்களும் களை கட்டியிருந்தது,
உண்மையில் இரு திருமணங்களும் சொர்க்கத்தில் அல்ல பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே நடந்துக் கொண்டிருக்கிறது என்ற விசயம் இரு தரப்பு மணமக்களை தவிர மற்ற எவருக்கும் தெரியாது, இரு பக்க பெற்றோர்களும் மிகவும் சந்தோஷமாக கல்யாண வேலைகளில் மூழ்கியிருக்க சம்பந்தப்பட்ட இரு திருமண ஜோடிகளின் நிலைமைதான் பரிதாபமே,
காஞ்சிபுரத்தில் சுரபியோ படித்தவள், நாகரிகம் அறிந்தவள், அதனால் மற்றவர்கள் முன்பு தனது வருத்தத்தை கூட வெளிப்படுத்த முடியாமல் நாசுக்காக தன் மனதுக்குள் அழுதபடி இருக்க அவளுக்காக பேசி வைத்த வீரையனோ கிராமவாசி, கள்ளம் கபடம் இல்லாத மனது படைத்தவன், அதனாலேயே பெண் பிள்ளை போல கோயிலில் இருந்த நிறைய தூண்களில் ஒரு தூணுக்கு பின்புறம் நின்றுக் கொண்டு யாரும் பார்த்திராத வண்ணம் கேவி கேவி அழுதுக் கொண்டிருந்தான்.
அலங்காநல்லூரிலும் அதே கதைதான், கிராம பின்னணியில் வளர்க்கப்பட்டாலும் திருமணத்தின் மீது விருப்பம் இல்லாத அமுதாவோ கண்கள் கலங்கியபடியே மணமகள் அறையில் இருந்தாள், அவளை சமாதானம் செய்ய அவளின் தாய் போராடிக் கொண்டிருக்க அவளுக்காக பேசப்பட்ட இன்றைய தலைமுறை நகர்புறத்தில் வாழ்ந்த பிரித்வியோ தனது இயலாமையை கண்ணீராக வெளிகாட்டாமல் மற்றவர்களின் முன்பு ஜெண்டிலாக நடந்துக் கொண்டு தனது துயரத்தை முடிந்தவரை மனதுள் அடக்கி அடக்கி அடக்கியே நேரத்தை கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டிருந்தான்.
இரு திருமணங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை ஆனால் ஒற்றுமை நிறைய உண்டு, இரு தரப்பு மணபெண்களும் தங்கள் மனதில் தாங்கள் விரும்பியவனையே நினைத்துக் கொண்டிருக்க அதே போல் மணமகன்களும் தாங்கள் காதலித்த பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்க, வந்திருக்கும் சொந்த பந்தங்கள் எல்லாம் ஜோடி பொருத்தம் பிரமாதம் என சொல்லும் போது இரண்டு ஜோடிகளும் கடுப்பானதுதான் மிச்சம், வேறு என்ன செய்வார்கள், திருமணத்தை நிறுத்த பலமுறை முயற்சி செய்தும் பலனில்லாமல் இதோ ஜயரே அழைப்பு விடுத்துவிட்டார்,
”மணமக்களை மேடைக்கு வர சொல்லுங்கோ” என சத்தமாக அழைத்ததும் உடனே அங்கு ஒரே பரபரப்பு, ஐயர் குரலைக் கேட்டதும் கேவி கேவி அழுதுக் கொண்டிருந்த வீரையன் திடுக்கிட்டு இனி அவ்வளவுதானா என நினைத்து நொந்து கண்கள் மூடி ஒரு முறை தான் உயிருக்கு உயிராக விரும்பிய காதலியை நினைத்துப் பார்த்து,
”என்னை மன்னிச்சிடு எனக்கு வேற வழி தெரியலை” என வாய்விட்டு சொல்லி முடித்தவன் துக்க பெருமூச்சுவிட்டு கண்கள் திறந்து அவசர அவசரமாக குளத்திற்கு சென்று தண்ணீரால் தன் முகத்தை அலம்பிவிட்டு மேடைக்கு வரவும் அவனது பெற்றோர்கள் அவனை தேடிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது,