உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - சசிரேகா
தன் காதலுக்காக அண்ணன் தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புயல் வீச செய்த நாயகியின் காதலை எவர் ஏற்றுக் கொண்டார் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1
சென்னை
புதிதாக திறக்கப்படப்போகும் ஐடி நிறுவனத்தின் முன் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. நிறுவனத்தை திறக்க போவது யார் என்பதுதான் அனைவரின் ஆர்வமும். இந்த ஐடி நிறுவனத்தை பற்றி மிகவும் ரகசியமாகவே வைத்திருந்த நிலையில் இப்போது இதன் திறப்பு விழாவுக்கு பெரிய பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்ல கலைதுறையை சேர்ந்தவர்களும் வருவார்கள் என்ற யூகத்தில் பொதுமக்களும் காத்திருந்தனர்.
5 அடுக்கு கட்டிடம் புத்தம் புதிதாக அதுவும் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாடர்னாக கட்டப்பட்டிருந்தது அதை யாரும் பார்க்கக் கூடாதென கட்டிடத்தை துணியால் போர்த்தியிருந்தார்கள், முழு கட்டிடத்தையும் அப்படி துணியால் போர்த்தவே எத்தனை மீட்டர் துணி தேவைப்பட்டிருக்குமோ, அதை விட அப்படி அந்த கட்டிடம் எந்தளவு அழகு வாய்ந்தது என தெரிந்துக் கொள்ள அனைவருக்குள்ளும் எதிர்பார்ப்பு இருந்தது.
மக்களின் ஆர்வமும் எதிர்பார்ப்பும் வீணாகும் முன்பே விலை உயர்ந்த 20 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்து வந்து நின்றது இதைக் கண்டதும் மக்களின் ஆரவாரம் அதிகரித்தது
இதில் மீடியாக்காரர்கள் வேறு ஒரு பக்கம் சுறுசுறுப்பாக நடப்பதை படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். 20 கார்களும் வந்ததும் எதில் இருந்து யார் இறங்குவார், அவர்களிடம் என்னென்ன கேள்வி கேட்கலாம் என மீடியாக்காரர்கள் காத்திருக்க முதல் காரில் இருந்து மிடுக்கான தோற்றத்துடனும் பணக்கார களையுடன் தயாசாகர் இறங்கி நின்றார். அவரைக் கண்டதும் மீடியாக்காரர்கள் மகிழ்ந்தார்கள், அவரை போட்டோ எடுக்கலானார்கள், போட்டோக்களின் ப்ளாஷ் லைட் ஒளியில் தயாசாகர் பொலிவுடன் தெரிந்தார். ப்ளாஷ் லைட்கள் பழக்கப்பட்டனவோ என்னவோ அவருக்கு அது பெரிதாக கஷ்டத்தை தராமல் அங்கிருந்தவர்களை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு தனது வலது கையை காருக்குள் நீட்ட அவரின் கையை பற்றியபடி தயாசாகரின் மனைவி கிருபாஷினி நளினமாக இறங்கி நின்றார். முகம் அப்படியொரு தேஜஸ், பரம்பரை பணக்கார குடும்பம் நெய்யும் பாலும் ஊறிய உடல் வனப்பில் ஆளை அசத்திடும் அளவு தயாசாகருக்கே சவால் விடும் அளவு கிருபாஷினி இருக்க பார்க்கும் அனைவருக்கும் செம ஜோடி என வாயார சொல்லும் அளவு சிறந்த ஜோடியாக நின்று சிரித்தபடி போஸ் தந்தார்கள்.
அவர்கள் இறங்கி நின்றதும் அவர்கள் வந்த கார் அங்கிருந்து நகர்ந்து பார்க்கிங் ஏரியாவுக்குள் செல்ல அடுத்த கார் வந்து நின்றது.
இம்முறை கிருபாஷினி அந்த காரின் கதவை திறக்க அதில் இருந்து அகிலேஷ் பாலிவுட் ஹீரோ போல ஜம்மென இறங்கி நின்றான். நீட்டாக ஷேவ் செய்யப்பட்ட முகம் பளபளவென ஆறடி உயரத்தில் அட்டகாசமாக இருந்தான், அவனது நிறத்துக்கு ஈடாக எதை சொல்வதென தெரியாத அளவு பால் போன்ற நிறத்தில் மிளர்ந்தான். தாயின் கையை பற்றியபடி
”ஹாய் ஸ்வீட்டி” என தன் தாயையே செல்லமாக அழைக்க அதில் கிருபாஷினி மென்மையாக சிரித்து
”யூ நாட்டி பாய்” என கலகலவென சிரிக்க இதை வேடிக்கையாக கூட கருதாமல் தனது கோபத்தை முகத்தில் சொடுக்கு போடும் நேரத்தில் காட்டினார் தயாசாகர். அவரின் கோபத்தைக் கண்டதும் அடங்கி போனான் அகிலேஷ். கிருபாஷினியும் சட்டென தன் இரண்டாம் மகனை தன் பக்கம் நிறுத்திக் கொண்டு போட்டோக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க அடுத்தடுத்த கார்களில் இருந்து வரிசையாக ஆட்கள் இறங்கினார்கள்
அனைவரும் எதிர்பார்த்தது போல பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் சினிமாவில் கலக்கி வரும் நடிகைகள் நடிகர்கள் வரை இறங்கி நின்றார்கள். மக்களை கண்டும் மீடியாக்காரர்களை கண்டும் அவர்கள் கையாட்டி சிரித்து வைக்க மக்களின் ஆரவாரம் வானை எட்டியது. கூட்டத்தை கட்டுப்படுத்தவே தனி போலீஸ் படை வேறு. அவர்களும் வந்திருக்கும் சினிமாக்காரர்களை கண்டு மகிழ்ந்தார்கள், வாயப்பு கிடைத்தால் ஒரு செல்பி எடுக்கலாம் என காத்திருந்தார்கள். தயாசாகர் கிருபாஷினி அகிலேஷ் இம்மூவருடன் வந்திருக்கும் தொழிலதிபர்களும் சினிமாக்காரர்களும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள் என்னவோ அவர்களுடன் போட்டோ எடுப்பது பெரிய பாக்கியம் என நினைத்துக் கொண்டார்கள் அனைத்தும் சரியாக போய்க் கொண்டிருந்தது எந்த பிரச்சனையும் இல்லாமல்.
தயாசாகர் துணியால் மூடியிருந்த கட்டிடத்தைக் கண்டு பெருமூச்சுவிட்டார் காரணம் இதைக் கட்ட 4 வருடங்கள் எடுத்துக் கொண்டார், அதை விட அந்தக் கட்டிடத்தில் நடக்கவிருக்கும் ஐடி நிறுவனத்துக்காக 5 வருடங்களாக போராடி பலகட்ட முயற்சிகள் கடந்து இப்போது தொடங்கப்போவதால் அவருக்கே ஒரு தனி ஆர்வம் பெருகியது, இத்தனைக்கும் அவருக்கு இது ஒன்று மட்டுமே பிசினஸ் கிடையாது, ஏகப்பட்ட பிசினஸ், அள்ள அள்ள குறையாத பணம், பேர், புகழ் எல்லாமே அவரின் தனி உழைப்பு மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாக வந்த உழைப்பு ஆனால் இந்த ஐடி நிறுவனம் மட்டும் அனைத்தையும் விட தனி இடம் பிடித்தது காரணம் இதை அவரின் இரண்டு மகன்களும் தன் சொந்த செலவில் சொந்த முயற்சியில் உருவாக்கியது, அந்த ஒரு காரணத்துக்கே தயாசாகருக்கு தன்னிடம் இருக்கும் பிசினஸ் விட இந்த ஐடி நிறுவனம்தான் முக்கியமாக பட்டது.