புதிய கதை.
”இன்று மிக முக்கியமான நாள், நம்ம கம்பெனியில் 3 வருடங்களாக மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் பணிபுரிந்து வரும் மிஸ்.காயத்ரிக்கு மரியாதை தரும்படி அவருக்கு இருப்பதிலேயே உயரிய பதவியான சிஇஓ பதவியை அவருக்கு தந்து பெருமைப்படுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், இன்றிலிருந்து நம் கம்பெனிக்கு புது சிஇஓவாக பதவியேற்கும் காயத்ரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என சொல்லி முடித்தார் சந்திரசேகர்,
உடனே அங்கு கூடியிருந்த கம்பெனி ஊழியர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள், அவர்களின் கைதட்டல்களை கேட்டு நெகிழ்ந்து போனாள் காயத்ரி, முகம் பரவசத்தில் பூவாய் மலர்ந்தது, பல நாள் கனவு இன்று நிறைவேறவும் அவளால் அந்த நிகழ்வை விட்டு வெளியேற இயலவில்லை, அனைவரின் கைதட்டல்களை கேட்டு பதிலுக்கு அவள் நன்றி நன்றி என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது, அந்தளவிற்கு உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.
”நன்றி ரொம்ப நன்றி, தாங்ஸ், ஓ தாங்க்யூ ஸோமச்” என அவளாக தூக்கத்தில் பினாத்திக் கொண்டிருக்க அவனது அண்ணன் அருணோ உறக்கம் கலைந்து விழித்தெழிந்து அவளை பார்த்து கோபத்தில்,
”ஆரம்பிச்சிட்டா, இவளோட தொல்லை தாங்க முடியலை” என கோபத்தில் அவள் மீது பாட்டில் நீரை ஊற்ற அதில் அரண்டு எழுந்தாள் காயத்ரி.
”யாரு என்னாச்சி நான் எங்க இருக்கேன்” என உளற அருணோ,
”சந்திர மண்டலத்தில இருக்க” என சொல்ல அவள் சுதாரித்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தவள் அருணைக்கண்டு கொதித்தாள்,
”டேய் அறிவில்லை உனக்கு, இப்படியா தண்ணி ஊத்தி எழுப்புவ, முட்டாள்”,
”ஆமா நீ கனவு கண்டு உளறிக்கிட்டு இருந்த, உன்னால என் தூக்கம் கெட்டது அதான் தண்ணி ஊத்தினேன்”,
”சே நல்ல கனவு, அதை போய் கெடுத்துட்டியே, நீ எல்லாம் என்ன ஜென்மமோ”,
”எல்லாம் நல்ல ஜென்மம்தான், உன்னை போல பைத்தியம் கிடையாது”,
”சே வாயை மூடு, என் கனவு என்னிக்கு நிறைவேறுமோ அன்னிக்கு உன் முன்னாடி கெத்தா வந்து நின்னு காட்டறேன், அப்ப உன் முகத்தை எங்க கொண்டு போய் வைச்சிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்”,
”நீ எப்படி வந்து நின்னாலும் நான்லாம் அவமானப்பட மாட்டேன்”,
”அதானே பார்த்தேன், உனக்குதான் சூடு சுரணை எதுவும் இல்லையே”,
”ஏய் என்ன வாய் நீளுது“,
”அப்படிதான் நீளும் என்ன செய்வ”,
”பல்லை உடைப்பேன்”,
”அப்படியா எங்க உடை உடை பார்க்கலாம்” என அண்ணனும் தங்கையும் தர்க்கத்தில் இருக்க அது கைகலப்பாவதற்குள் வந்து விட்டார்கள் அவர்களது பெற்றோர்,
”அடடா, எப்ப பாரு சண்டையா, நீங்க இரண்டு பேரும் என்ன சின்ன குழந்தையா, 7 கழுதை வயசாயிடுச்சி, இன்னும் எதுக்கு இப்படி சின்ன புள்ளத்தனமா சண்டை போடறீங்க” என காயத்ரியின் தாய் சாந்தி கோபத்தில் வெடிக்க அவளோ,
”உனக்கு யார் சாந்தின்னு பேர் வைச்சது எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்க ஒரு நாளாவது சாந்தமா இருக்கியா”,