முன்னாள் காதலியையும் விட்டுக் கொடுக்க இயலாமல் இன்னாள் மனைவிக்கும் துரோகம் இழைக்க முடியாமல் தன் காதலை தன் மனைவி புரிந்துக் கொள்வாளா தன் மகிழ்ச்சியை காதலி புரிந்துக் கொள்வாளா என ஏங்கும் ஒரு நாயகனின் கதையிது.
பாகம் 1.
சென்னை கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில்,
”கௌசல்யா சுப்ரஜா ராம,
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே,
உத்திஷ்ட நர ஸார்தூல,
கர்த்தவம்யம் தைவமாஹ்நிகம்”,
காலை 6 மணிக்கே ஆனந்தியின் வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்க அந்த பாடலைக் கேட்டபடி எழுந்தான் வெங்கடேசன். சோம்பல் முறித்தபடியே,
”ஆனந்தி ஆனந்தி” என அழைத்துக் கொண்டே வர ஆனந்தியோ அதற்குள் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு கண்கள் மூடி பிரார்த்தனை செய்தபடி இருந்தாள். அவளின் வேண்டுதலைக் கண்டு வெங்கடேசனின் முகம் வாடியது.
”ஆனந்தி வீணா எதுக்காக நீ இப்படி அலட்டிக்கிற, விட்டுத்தள்ளு அது அது நடக்கறப்பதான் நடக்கும் பார்த்துக்கலாம்” என பூஜையறை வாசலில் நின்றபடி சொல்ல அதைக்கேட்டு கண்கள் திறந்த ஆனந்தியோ கடவுளின் போட்டோவைப் பார்த்து கைகூப்பி விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு குங்கும சிமிழுடன் வெங்கடேசனிடம் வந்து நின்றாள்.
புன்னகை மாறாமல் அவனிடம்,
”என் நம்பிக்கையை கேலி செய்யாதீங்க குங்குமம் வைச்சி விடுங்க” என சொல்ல இது தினமும் நடப்பதுதானே என நினைத்தபடியே வெங்கடேசனும் அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துவிட்டு,
”ஆனந்தி கவலைப்படாத எத்தனை வருஷம் ஆனாலும் சரி நமக்குன்னு குழந்தை பாக்கியம் இருந்தா நிச்சயம் பிறக்கும், இதுக்காக விரதம் இருக்கறது, கோயில் குளம்னு சுத்தறது, இதெல்லாம் தேவையா வீணா உன்னோட உடம்பை நீ கெடுத்துக்கிற இதனால உனக்கு ஏதாவது வந்துடப்போகுது”,
”எனக்கு எதுவும் ஆகாதுங்க கல்யாணம் ஆகி 5 வருஷமாச்சி இன்னும் குழந்தையில்லை, அந்த ஏக்கத்தை விடவா எனக்கு ஏதாவது வந்துடப் போகுது”,
”தேவையில்லாம கவலைப்படறதை நிறுத்து, கடவுள் இருக்காரு, நம்பிக்கை வை அதுக்காக பரிகாரம் செய்றது, விரதம் இருக்கறதுன்னு முட்டாள்தனமா இருக்காத இந்த மூடநம்பிக்கைகளை விட்டுடு ஆனந்தி” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு,
”காலையில நீங்க ஒரு சுப்ரபாதம் ஆரம்பிக்காதீங்க, போங்க போய் பால் பாக்கெட் கொண்டு வாங்க சுட சுட காபி போட்டு தரேன், உங்க கவலையெல்லாம் பறந்துடும்” என சொல்ல வெங்கடேசனோ,
”உன்னை திருத்தவே முடியாது, என்னிக்குத்தான் நீ என் பேச்சை கேட்டிருக்க இன்னிக்கு கேட்கறதுக்கு” என சொல்லிக் கொண்டே வாசல் கதவிடம் சென்றான். அங்கு பால் பாக்கெட் வைக்கும் கூடை முன் ஆனந்த் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் முதலில் வியந்த வெங்கடேசன் எதுவும் பேசாமல் கூடையில் இருந்த பால் பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
அவர் ஏதும் பேசாமல் சென்றது ஆனந்துக்கு புதிதல்ல அதனால் அவன் அமைதியாக இருந்தான்.
வெங்கடேசனோ கிச்சனுக்குள் வர ஆனந்தியோ அவரிடம் இருந்து பால் பாக்கெட் வாங்கிக் கொண்டாள்,
”ஆனந்தி”,