Chillzee KiMo Books - ஹனியே ஹனியே நீயில்லாமல் நானில்லை - சசிரேகா : Honeye honeye neeyillaamal naanillai - Sasirekha

ஹனியே ஹனியே நீயில்லாமல் நானில்லை - சசிரேகா : Honeye honeye neeyillaamal naanillai - Sasirekha
 

புதிய கதை.

 

 

ஹனியே ஹனியே நீயில்லாமல் நானில்லை – சசிரேகா.

  

பாகம் 1.

  

பாண்டிச்சேரி.

  

தனது வீட்டின் இளவரசி என செல்லம் கொண்டாடி அளவுக்கதிகமான அன்பை அள்ளிக் கொடுத்த தங்கை அனிதாவின் இறுதி சடங்கிற்கு வந்திருந்தார் பெருமாள். அவர்தான் அனிதாவின் அண்ணன் என அங்கு இருக்கும் யாவருக்கும் தெரியாது, ஏன் அனிதாவின் கணவர் கிருபாகரனுக்கும் தெரியாது, தன் மனைவியின் அசைவற்ற உடலுக்கு பக்கத்தில் அமர்ந்தபடி வருத்தமுடன் இருந்தார். கிருபாகரனுக்கென சொந்தங்கள் யாருமில்லை, நண்பர்கள் மற்றும் தொழில் முறையில் வந்தவர்கள், தெரிந்தவர்கள் என சிலர் மட்டுமே அங்கிருந்தார்கள்.

  

இதில் பெருமாளை பற்றி யாரும் விசாரிக்கவில்லை, துக்கத்திற்கு வந்த இடத்தில் யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளாமல் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அந்நேரம்,

  

”அம்மா ஹனிமா ஹனி” என ஆறுவயது பிள்ளை தன் தாயை தேடிக் கொண்டு அழுத படி வர அந்தக் குழந்தையை சமாதானப்படுத்த கூட அங்கு யாரும் முன்வரவில்லை, கிருபாகரன் கூட தன் மனைவியின் இழப்பையே பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தபடியால் தன் மகனை கவனியாமல் விட்டார், பாவம் எப்போது உண்டானோ, அவனது நலம் பற்றி விசாரிக்க கூட யாருக்கும் நேரமில்லை. அந்த பிள்ளையின் அழுகுரல் பெருமாளின் காதில் நன்றாக கேட்டது.

  

அனிதாவின் உடல் இருக்கும் இடத்திற்கு வந்த குழந்தையோ தன் தாய் இறந்துவிட்டது கூட அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தாயை எழுப்புவது போல எழுப்பலானான்,

  

”ஹனிமா எழும்மா ம்மா எழும்மா” என அந்த உடலை உலுக்க அதைக் கண்ட கிருபாகரன் வருத்தத்தில் மகனிடம்,

  

”ஹரி அம்மா தூங்கறாங்க அவங்களை எழுப்பாத, அவங்க தூங்கட்டும் நீ போய் விளையாடு போ” என சொல்ல ஹரிச்சந்திரன் கேட்கவில்லை, ஓயாமல் தன் தாயின் உடலை அசைத்து எழு எழும்மா ஹனிமா என ஓயாமல் கத்திக் கொண்டிருக்க வந்திருந்தவர்களுக்கு சங்கடமாகிப் போனது, சூழ்நிலையை புரிந்துக் கொண்ட கிருபாகரன் தன் மகனின் பசியை உணரவில்லை, கோபத்தில் மகனை தள்ளி விட அவனை அள்ளி தூக்கிக் கொண்டது பெருமாளின் கைகள்.

  

பெருமாளின் கைக்குள் பத்திரமாக இருந்தான் ஹரி. அன்று அவரின் கைகளைப் பிடித்தவன் வளர்ந்தபின்னும் அவரை விடவில்லை. குழந்தையின் அழுகையை புரிந்துக் கொண்ட பெருமாள் சட்டென அவனை அழைத்துக் கொண்டு சமையல்கட்டுக்குச் சென்றார். யாரும் சமைக்கவில்லை. அவ்விடமே வெறிச்சோடியிருக்க அவரே களம் இறங்கினார், அவசரத்துக்கு தனக்கு தெரிந்த உணவை சமைத்து முடித்து அதை ஹரிக்கு ஊட்டிவிட அவன் உணவை உண்ண உண்ண அவனின் அழுகை நின்றது. பசியின் காரணமாக வேக வேகமாக சாப்பிடலானான். அவனது நிலைமையைக் கண்ட பெருமாளுக்கு கண்கள் கலங்கிவிட்டது. பாவம் குழந்தையை இப்படி தனியாக விட்டு சென்றுவிட்டாளே தங்கை என நினைத்து வருந்தினார்.

  

மகனை விரட்டியபின் கிருபாகரனுக்கு மனது கேட்கவில்லை, அவனைத் தேடி அலைந்தார். எங்கும் காணாமல் போக பதறிப்போனார் ஒவ்வொரு அறையாக தேடிவிட்டு இறுதியில் கிச்சனுக்கு வர அங்கு பெருமாள் ஹரிக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு கிருபா நிம்மதியானார். கிருபா வந்ததை அறிந்த பெருமாளுக்கு உள்ளுக்குள் கோபம் கொந்தளித்தது. அப்படியே கிருபாவை நான்கு அடி போடலாம் என்று கூட அவரின் கைகள் பரபரத்தது ஆனால் ஹரியோ அவரிடம் ஆஆ என வாய்பிளந்து காட்ட உடனே அவரின் கோபம் தணிந்தது, அவனுக்கு அமைதியாக உணவு ஊட்டிவிடலானார். கிருபாகரணோ மகன் உண்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுவிட்டு பெருமாளிடம்,