அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.
ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.
என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.
வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
நன்றி.
அத்தியாயம் 01
ஐந்து வருடங்களுக்கு முன்
“ஹலோ”
வினாயக்கின் குரல் கேட்டதோ இல்லையோ, ப்ரியம்வதா தன் முன்னே இருந்த கறுப்பு கலர் கண்ணாடி மேஜையில் தெரிந்த அவளுடைய பிம்பத்தை பார்த்து, தன்னை தானே சரி பார்த்துக் கொண்டாள்.
“ஹலோ ப்ரியம்வதா” – ப்ரியம்வதா எதிர்பார்த்தது போலவே அவள் பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்தான் விநாயக்.
“குட் மார்னிங் வினாயக்” – ப்ரியம்வதாவின் கண்கள் ரகசியமாக வினாயக்கை ரசித்தது. வினாயக் எப்போதும் போல ‘லேஸி சைன்டிஸ்ட்’ லுக்குடன் இருந்தான். சரியாக வாரப் படாமல் இருந்த அவனுடைய கேசம் ஏசி காற்றில் படபடத்து ப்ரியம்வதாவின் இதயத்தை தடதடக்க வைத்தது. இரண்டு வருடமாக அவள் மனசுக்குள் பூட்டி வைத்திருக்கும் காதல் எப்போதடா வெளியே வருவோம் என்று தவித்துக் கொண்டிருந்தது.
“இன்னைக்கும் புடவையா? உன் கம்பெனி ஐடி போட்டோல மட்டும் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்க. மத்தபடி நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் வர” – வினாயக் அலுத்துக் கொண்டாலும் அவன் சொன்ன விதத்தில் புகார் இருப்பதாக தெரியவில்லை.
“நான் என்ன செய்ய? எனக்கு புடவை கட்டனும் தோணுறப்போ கரக்ட்டா நீ வர” - ப்ரியம்வதா அவளுடைய மனதிலிருந்த காதலை மறைத்துப் பேசினாள்.
“அப்படி தான் இருக்கும் போலருக்கு. ரொம்ப பிஸியா இருக்கேன் ப்ரியம்வதா. என்னோட சைபோர்க் (cyborg) வேலை மும்முரமா போயிட்டு இருக்கு. இந்த வருஷம் முழுசா வொர்க் செய்ற சைபோர்க் ரெடி செய்திருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் வெயிட் டு ஸீ மை சைபோர்க் பேபி”
ப்ரியம்வதாவிற்கு வினாயக்கின் சைபோர்க் மேல தனி பாசம் இல்லை. ஆனால் அந்த சைபோர்க் பற்றி பேசும் போது அவன் கண்களில் மின்னும் கனவும், ஆர்வமும் பார்க்க பிடித்திருந்தது.
எப்போது தான் இந்த இயந்திர மனிதன் ஆசையை விட்டு விட்டு உயிருள்ள அவளை கண் திறந்துப் பார்ப்பானோ!
வினாயக்கும், ப்ரியம்வதாவும் இருந்த கான்பரன்ஸ் அறைக்குள் மற்றவர்களும் வந்து காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் எனும் அந்த தனியார் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். ப்ரியம்வதா அந்த கம்பெனியின் ப்ரொடக்ஷன் துறையின் தலைமை பொறுப்பில் இருக்கிறாள். வினாயக் ரோபோட்டிக்ஸ் R&D துறையின் தலைவனாக இருப்பவன்.
இருவருடைய அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. அதனால் இதுப்போன்ற மீட்டிங்குகளில் மட்டும் வினாயக்கும் ப்ரியம்வதாவும் சந்தித்துக் கொள்வார்கள்.
கம்பெனியின் எம்.டி சந்திரமௌலி அறைக்குள் வந்த உடன் அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள்.
“எல்லோரும் உட்காருங்க” – சந்திரமௌலி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.
அடுத்த ஒரு மணி நேரம் கம்பெனியின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சி பற்றி அறிக்கைகள், ரிப்போர்ட்கள் என்று பேசினார்கள். விவாதித்தார்கள்.
- Books
- chillzee
- Family
- Romance
- mysteries
- Novel
- KiMo_Only_Specials
- Tamil
- Drama
- from_Chillzee
- Chillzee_Originals
- MathiyoorMysteriesSeries