Chillzee KiMo Books - தூறல் போல காதல் தீண்ட - சசிரேகா : Thooral pola kathal theenda - Sasirekha

தூறல் போல காதல் தீண்ட  - சசிரேகா : Thooral pola kathal theenda - Sasirekha
 

காதலிக்காக காதலனும் காதலனுக்காக காதலியும் தங்களுக்கு வந்த பரிட்சையில் வெற்றி பெற்று இணைந்தார்களா இல்லையா என்பதே கதையாகும்.

 


 

பாகம் 1.

  

சென்னை கப்பல் துறைமுகம்.

  

”அண்ணா ரிஷிண்ணா கீழே பாருங்க” என உரக்க கத்தினான் அர்ஜூன் அந்த குரலைக் கேட்டு,

  

”எதுக்குடா கத்தற” என மேலிருந்த வண்ணமே கேட்டான் ரிஷிகேசன்,

  

”நீ கீழே வந்து பாரு, இங்க ஒரு பஞ்சாயத்து” என கத்தவும் பொறுமையிழந்த ரிஷி கப்பல் கிரேனிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தான்.

  

அவன் இறங்கிய பின் அவனிடம் வந்த அர்ஜூன்,

  

”அண்ணா நம்ம சரக்கை எடுக்க விடமாட்டேங்கறாங்க”,

  

”யாரு” என சந்தேகமாக கேட்டான் ரிஷி,

  

”மாணிக்கவேல்”,

  

”சரி நான் போய் அவனை என்னன்னு பார்க்கறேன், நீ மிச்ச மீதி வேலையை முடி சீக்கிரம்”,

  

”சரிண்ணா” என அவன் கிரேனில் ஏறி மிச்ச வேலைகளை செய்து முடிக்கலானான்.

  

ரிஷிகேசன்- 6 அடி உயரம் கம்பீரமான தோற்றம், எளிமையான உடையலங்காரம், உடற்பயிற்சி செய்த கட்டுமஸ்தான தேகம். வெண்மை நிறம், தன் தாத்தாவின் ஆட்டோ மொபைல் பிசினசில் அவனும் தன் பங்கிற்கு வேலை செய்துக்கொண்டிருந்தான்.

  

வெளிநாடுகளிலிருந்து வரும் உதிரிபாகங்கள் மற்றும் மிஷின்களை இறக்குவது அவனது பேக்டரியில் உருவான வண்டிகளை ஏற்றுமதி செய்வது, ஏதாவது மீட்டிங், டீலிங் என்றால் மட்டும்தான் அவன் கம்பெனிக்கு செல்வான், மற்றபடி ஒரு நாளைக்கு 3 மணி நேரம்கூட வேலையிருக்காது.

  

முக்கியமான வேலைகளை செய்வதே அவனது வழக்கமாகி விட்டது. தாத்தா செல்வகணபதிக்கு அடுத்து டீலிங் பேசி ஆர்டர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் திறமை என அனைத்திலும் தாத்தாவை மிஞ்சிய பேரனாக இருந்தான்.

  

அதனால் யாரும் அவனை நாள் முழுவதும் வேலை செய்ய வற்புறுத்தியதில்லை, முதல் பேரன் என்பதால் வீட்டில் செல்லம் அதிகம், அவனுக்கு சித்தப்பா கேசவமூர்த்தி பையன்களான கருணாகரன் தினகரன் என இரு தம்பிகள் இருக்கிறார்கள், ரிஷியின் அப்பா மோகனசுந்தரமும் கேசவமூர்த்தியும் சேர்ந்தே கம்பெனியை பார்த்துக்கொள்கிறார்கள்.

  

அதிலும் மோகனசுந்தரம் கம்பெனிக்குச் சென்றால் துணைக்கு கருணாகரனை அழைத்துச்செல்வார். கேசவமூர்த்தி தன் இன்னொரு மகன் தினகரனுடன் ஒன்றாக வேலை செய்வார்.

  

கருணா மட்டும் தன் பெரியப்பா மோகனசுந்தரத்தின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பான். ஆனால் தினகரனோ மற்றவர்களை பார்த்து அவர்கள் போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

  

சொல்பேச்சு கேளாதவன், செல்வகணபதி தன் வாரிசாக ரிஷியை சிறுவயதிலிருந்தே தன்னைப்போலவே வளர்த்து வந்தார், அதன் காரணமாக அவன் மற்றவர்களிடம் இருப்பதை விட தன் தாத்தாவிடம்தான் அதிகமாக இருந்தான்.

  

அவர் சொல்படி நடந்தான், அவரும் தனக்கு தெரிந்த வியாபார ரகசியங்கள் அனைத்தையும் ரிஷிக்கு மட்டும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல தொழிலதிபராக உருவாக்கினார். தாத்தாவின் திறமையான யோசனைகள் மோகனசுந்தரத்திற்கும் சரி கேசவமூர்த்திக்கும் வரவில்லை. மாறாக ரிஷிக்கு மட்டுமே அவரின் திறமை, யோசனை, புத்திசாலித்தனம் அனைத்தும் வந்தது. அவனை அடுத்த செல்வகணபதியாகவே கம்பெனியில் இருப்பவர்களும் பிற தொழிலதிபர்களும் நினைத்து அவனை மரியாதையோடு மதித்தனர்.