விடுகதையாய் இந்த வாழ்க்கை - சசிரேகா
தன் காதலனுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் நடந்த அநியாயத்திற்காக தனது வாழ்க்கை கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என நாயகி எடுத்த முடிவால் அக்கிரமம் செய்தவனுக்கு தண்டனை தரமுடிந்ததா அல்லது அவளே தண்டனையில் சிக்கி சூழ்நிலை கைதியாகி வாழ்க்கையை இழந்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.
பாகம் 1.
சென்னை.
காவல் நிலையத்தில் எந்த சலனமும் இன்றி பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஹரிணி. ஐடி நிறுவனத்தில் ஹெச் ஆர் ஆக பணியாற்றுகிறாள், அவளுக்கென்று துணையாக அங்கு ஒருவரும் இல்லை. அவளை பற்றித்தான் அந்த நிலையத்தில் அனைவரும் சலசலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அது அவள் காதில் விழுந்தும் அதற்காக அவள் வருந்தவில்லை. வெகு நேரம் அங்கு அமர்ந்திருந்த காரணத்தால் தண்ணீர் தாகம் எடுக்க மெதுவாக சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளிடம்,
”மேடம்” என ஈனமாக அழைத்தாள் அந்த கான்ஸ்டபிள் பெண்ணோ அவளை பார்த்து முறைக்க ஹரிணியோ,
”தாகமா இருக்கு மேடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ப்ளீஸ் மேடம்” என சோர்வாக கேட்க அதற்கு அவரோ,
”ஆமா நீ கெட்ட கேட்டுக்கு தண்ணி ஒண்ணுதான் குறைச்சல், புருஷனை கொன்னுட்டு எவ்ளோ தைரியமா உட்கார்ந்திருக்க, உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் தண்ணியே கொடுக்காம தவிக்க விடனும்” என சொல்ல ஹரிணியோ மென்மையாக புன்னகைத்துவிட்டு அமைதியாக, அது அவருக்கு பிடிக்கவில்லை கோபத்தில் ஹரிணியை விட்டாள் ஒரு அறை அந்த அறையில் சுருண்டு விழுந்தாள் ஹரிணி.
சில மணி நேரம் கழித்து மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள் ஹரிணி. அதே காவல் நிலையத்தில் பெஞ்சில் படுத்தபடி இருக்க மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அதற்குள் இன்ஸ்பெக்டர் மதியழகி வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஹரிணி மெதுவாக எழுந்து அவரிடம் சென்றாள், அவளின் வருகையைக் கண்ட மதியழகியோ,
”என்ன வேணும் உனக்கு” என கேட்க ஹரிணி பதில் அளிக்கவில்லை சோர்வாக அவரின் முன் நின்றாள்,
”இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட எடுபடாது, எவ்ளோ திமிரு இருந்திருந்தா கல்யாணம் ஆகி 6 மாசம் கூட ஆகலை, அதுக்குள்ள புருஷனை கொன்னுட்டு நிக்கற உன்னையெல்லாம் நாலு சாத்து சாத்தினாதான் என் கோபம் அடங்கும்” என கத்த அதற்கு ஹரிணியோ,
”தண்ணி வேணும் தாகமா இருக்கு மேடம் ப்ளீஸ்” என்றாள் ஈனமாக அதற்காகவே தன் முன் இருந்த டேபிளில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்த மதியழகி கோபத்தில் கீழே ஊற்றினாள், அதற்காக கவலையில்லாமல் ஹரிணி அங்கிருந்து மெதுவாக நடந்து மறுபடியும் அதே பெஞ்சில் சென்று அமர்ந்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த புடவையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டு அந்த புடவையை பார்த்தாள், அவளின் திருமண புடவை அது அதைக்கண்டும் அவள் இளப்பமாகச் சிரித்தாள்.
அதைப் பார்த்த மதியழகி,
“என்னடி நக்கலா சிரிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க எழு எழு நேரா கோர்ட்டுக்குதான் போகனும் அங்கயாவது கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு எழுடி” என அவளின் கையை பிடித்து இழுக்க அவளோ,
”நானே வரேன்” என சொல்ல மதியழகியும் அமைதியாகாமல்,
”ஏன் இங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்க்கறியா வாவா இன்னிக்கு உனக்கு தண்டனை வாங்கித்தராம நான் ஓயமாட்டேன் எழுடி” என அவளது கையை பிடித்து பலமாக இழுத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறி வண்டியில் அவளை ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டதும் வண்டி நகர்ந்தது.
நீதிமன்ற வளாகம் நோக்கி வண்டி செல்ல ஹரிணியோ கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்தாள். அதைக்கண்ட மதியழகி,
”என்னடி எப்படி எஸ்கேப் ஆகறதுன்னு பார்க்கறியா” என கேட்க அதற்கு ஹரிணியோ,