வராமல் வந்த தேவதை..! - பத்மினி செல்வராஜ்
முன்னுரை
அன்பான வாசகர் தோழமைகளே!!!
மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
அத்தியாயம்-1
பெங்களூர்..!
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று விடாமல் அடித்துக் கொண்டிருந்தது அலார்ம்..!
அதன் ஓசை நாராசமாக காதில் ஒலித்தாலும், படுக்கையில் இருந்து எழுந்து, தன் அலைபேசியை எடுத்து, அதில் செட் பண்ணி வைத்திருந்த அலார்ம் ஐ அணைக்க மனம் வரவில்லை அவளுக்கு..!
போர்வைக்குள் இருந்தவள், இன்னுமே இழுத்து போர்த்திக்கொண்டு, பக்கத்தில் கங்காரு குட்டியைப் போல தன் கழுத்தை வளைத்துக் கொண்டு
ஒற்றைக் காலைத் தூக்கி அவள் மீது போட்டுக்கொண்டு அவள் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த, தனது இரண்டரை வயது மகளை, இன்னுமாய் இறுக்கி தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள் அவள்..!
ஆனால் அவளின் மனநிலை புரியாத அந்த அலார்ம், இரண்டு நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று அதன் வேலையை செவ்வனே செய்தது.
இதுவரை கிணற்றுக்குள் இருந்து கேட்ட மாதிரி வந்து கொண்டிருந்த அந்த நாராச ஒலி, இப்பொழுது அவளின் காதருகில்.. வெகு அருகில் கேட்டது.
முன்பு மாதிரி இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முடியாமல், அந்த அலார்ம் ஓசையில் எரிச்சலுடன் கண் விழித்தாள் அவள்.
“சை... இந்த அலார்ம் ஐ யார் கண்டுபிடித்து தொலைத்தார்களோ? அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்...” என்று தனக்குள்ளே திட்டியபடி தன் கண்ணை திறக்க முயன்றாள்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தன் மகளுடன் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக படுக்கையில் விழுந்து இருக்க, அடித்து போட்ட மாதிரி அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவளின் இமைகளோ பிரிய மறுத்தன.
இன்னும் கொஞ்சம் நேரம் என்னை தூங்க விடேன் என்று வேண்டுகோள் விடுத்து கெஞ்சின.
அவளுக்கும் ஆசைதான்... தன் இமைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க...
ஆனால் அதே நேரம் அவளுடைய அன்றைய பணிகளும், கடமைகளும் வரிசையாக அவள் முன்னே வந்து நின்று, இடுப்பில் கைவைத்து அவளை முறைக்க, அதில் முழுவதுமாக திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.
போர்வையை விலக்காமலயே எட்டி அருகில் இருந்த சிறிய டீபாய் மீது இருந்த தன் அலைபேசியை… அந்த நாராச ஓசை வந்த தன் அலைபேசியை எடுத்து, அதில் மணி பார்க்க, மணி எட்டை தாண்டி முப்பது நிமிடம் ஆகி இருப்பதை காட்டியது.
அதைக் கண்டதும்
“ஓ...மை ....காட்...” என்று தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“சை... இந்த அலார்ம் இடியட்... 8 மணிக்கு அலார்ம் வச்சா, எட்டறை மணிக்கு அடிக்குது. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.
இதுக்குத்தான் அம்மா வேணுங்கறது...