Chillzee KiMo Books - தீராக் காதல் - சசிரேகா : Theera kathal - Sasirekha

தீராக் காதல் - சசிரேகா : Theera kathal - Sasirekha
 

சிறு கதை.

 


 

மதுரை.

  

விடியற்காலையில் சூரியனின் கதிர்கள் ஆற்றில் மெதுவாக விழுந்து பல புதிய வர்ணங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க அந்த நிறங்களின் பிரதிபலிப்பில் நீரில் இருந்த மீன்களும் தங்கள் நிறங்களை விடுத்து புதிய நிறங்களில் மாறியது.

  

ஆற்றுக்கருகில் அமர்ந்திருந்தான் விஜயன், அவனது நண்பன் மாறனோ ஆற்றில் இறங்கி மீன்களை பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய சிறிய வலையில் சிக்கும் மீன்கள் அவனுக்கே சொந்தம். இருவரும் ஒரே வயதை சேர்ந்தவர்கள்.

  

”நண்பா பொழுது விடியப் போகுது ஏற்கனவே கூடையில போதுமான மீன்கள் இருக்கு, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மீன்களை பிடிச்சிக்கிட்டா நல்ல வருமானம் வரும், கொஞ்சம் உதவி செய்யேன் வா வா” என மாறன் சொல்ல விஜயனும் அவனுக்கு உதவி செய்ய ஆற்றில் இறங்கி தன் நண்பனுடன் மீன்களை பிடிக்கலானான். இருவரும் சேர்ந்து ஒரு வலையை ஆற்றில் இறக்கி அதன் எடை கூடியதும் உடனே எடுத்து அதிலிருந்த மீன்களை கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

  

அந்நேரம் அங்கு குளிக்க வந்த சில பெண்கள் இவர்களின் செயலைக் கண்டு சிரித்தார்கள்.

  

”அங்க பாருங்கடி மீனை பிடிக்கற லட்சணத்தை இவங்க மீனை எப்ப பிடிக்கறது நாம எப்ப குளிக்கறது இது சரியா வராது வாங்கடி இவங்களை விரட்டலாம்” என ஒருத்தி சொல்ல மற்றொருத்தி,

  

”அதான் சரி பொம்பளைங்க குளிக்கற இடத்தில இவங்களுக்கு என்ன வேலையாம்” என கேட்டுக் கொண்டே விஜயன் மாறனிடம் வந்து நின்றார்கள்.

  

”யோவ் என்னய்யா இது பொம்பளைங்க குளிக்கற இடத்தில வந்து மீனை பிடிக்கறீங்க, நாங்க எப்படி குளிக்கறதாம் போங்கய்யா அந்த பக்கம்” என கத்த மாறனோ,

  

”அந்த பக்கமா மீன்ங்க இல்லைங்க அதான் இந்த பக்கம் வந்தோம்”,

  

”ஏன் ஆறு ஒண்ணுதானே எல்லா பக்கமும்தான் மீன் கிடைக்கும்” என ஒருத்தி சொல்ல,

  

“பொம்பளைங்க குளிக்கற இடத்தில நிறைய மீன்ங்க வரும்னு வதந்தி உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்க வந்தோம்” என விஜயன் சொல்ல அந்த பெண்கள் இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு,

  

”போதும் நல்ல வதந்தி கிளம்புங்க” என கத்த தூரத்தில் ஒரு பெண்ணின் குரல்,

  

”அங்க என்னடி சத்தம் சீக்கிரமா வாங்க குளிச்சிட்டு போலாம் வீட்ல தேடுவாங்க” என கத்த இரு ஆண்களும் சத்தம் வந்த திசையில் பார்த்தார்கள். அங்கு அழகான ஒரு பெண் நின்றுக் கொண்டிருக்கவே அவள் அழகில் இருவரும் மயங்கி சற்று தடுமாறினார்கள். அதில் இருவரும் வலையை தவற விட அது ஆற்றோட ஓட ஆரம்பிக்கவும் மாறன் கத்தினான்,

  

”அய்யோ என் வலை என் வலை போச்சே” என கத்த விஜயனோ,