ஒரு சிறு கதை.
அரங்கம் ஏற்றும் காதல் காவியம் – சசிரேகா.
பாபு மிகவும் சோகமாக தனிமையில் அமர்ந்திருந்தான், கையில் ஒரு சிகப்பு ரோஜா, அதன் மீது இவனது கண்ணீர் துளிகள் இரண்டு பளபளத்துக் கொண்டிருந்தது, தூரத்தில் அவன் விரும்பிய பெண் சுதா வேறொரு ஆண்மகனுடன் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், அவன் தந்த சிகப்பு ரோஜாவை கையில் வைத்துக் கொண்டும், மகிழ்வாக இருப்பதைக் கண்டு அவனது கண்கள் கலங்கின, இத்தனைக்கும் இவனது காதல் ஒன்றும் சாதாரண காதல் அல்ல. எப்போது அவள் பிறந்தாளோ அப்போதிலிருந்து விரும்பினான்.
எதிரெதிர் வீடு என்பதால் பாபு சின்னபிள்ளையாக இருந்த போதே சுதாவின் தாயார் கர்ப்பமாக இருந்தார், அவனுக்கு சுதாவின் தாயார் என்றால் கொள்ளை பிரியம், அவன் வீட்டில் இருந்த நேரத்தை விட எதிர்வீட்டில்தான் அதிகம் இருப்பான், சில சமயம் அங்கேயே சாப்பிடுவது உறங்குவது என இருப்பான், அதிலும் சுதா தன் தாயின் வயிற்றில் உள்ள போதே பாபு அவரை நன்றாக பார்த்துக் கொண்டான்.
வயிற்றில் குழந்தை வளர வளர அதனுடையே பேசிக் கொண்டிருப்பான், தாயின் பேச்சை விட பாபுவின் பேச்சைத்தான் சுதா அதிகம் கேட்டிருப்பாள், ஒரு நாள் அவள் பிறந்தாள், அன்றும் பாபுதான் உடன் இருந்தான், பார்த்த மாத்திரத்தில் சுதா மீது ஒரு ஈர்ப்பு அந்த வயதில் அவனுக்குள் வந்தது, அது என்னவென்று அவனுக்கு தெரியாது, தன்னுடன் விளையாட ஒரு பாப்பா வந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தான்.
அந்த மகிழ்வுடனே அவளை நன்றாகவும் பார்த்துக் கொண்டான், தனக்கு இல்லை என்றாலும் அவளுக்கு என வந்தால் உடனே செய்து விடுவான், சுதாவும் அப்படித்தான் அவனுடன் நன்றாகவே பழகிவந்தாள், இருவரும் சிறுபிள்ளையில் இருந்தே ஒன்றாக ஒற்றுமையாக இருந்தார்கள்.
வயதில் பாபு சுதாவை விட 2 வயது பெரியவனாக இருந்தாலும் சுதா அவனை பாபு என அழைத்தால் மகிழ்ந்துப் போவான், பாபு சுதா இவ்விருவரின் நட்பைக்கண்டு பலரும் மெய்சிலிர்த்தார்கள், ஒரே நிறத்தில் உடையணிவது, ஒன்று போல சாப்பாடு சாப்பிடுவது, எங்கு சென்றாலும் கைபிடித்துக் கொண்டு சென்று வருவது, பள்ளிக்குச் செல்லும் போது கூட ஒற்றுமையாக சென்றுவருவது என இருவரும் என்றும் பிரியாமல் இருந்தார்கள்.