Chillzee KiMo Books - மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத் : Malaiyoram veesum kaatru - Bindu Vinod

மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத் : Malaiyoram veesum kaatru - Bindu Vinod
 
 

அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...

மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!

நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.

 

 

1.

  

பத்து வருடங்களுக்கு முன்...

  

சௌந்தரபாண்டியபுரம், திருநெல்வேலி.

  

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வாழும் அந்த கிராமத்தின் சுவர்களில் எங்கெங்கு நோக்கினும் சுவரொட்டிகள்! விஜய், விக்ரம், சூர்யா என திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்புக்கு இடையே, திருமண வாழ்த்து என கொட்டை எழுத்துக்கள் மின்னின.

  

“இவனுங்க கல்யாணம் செய்ததும் போதும் நம்ம சுவரை எல்லாம் நாசம் செய்ததும் போதும்,” என பலர் புலம்பிக் கொண்டிருந்தனர்.

  

ஆனால் திருமண கோஷ்டியினர் அது எதையும் கவனிக்கவில்லை.

  

அன்று ஹரிக்கும், விசாலினிக்கும் திருமணம்.

  

ஹரி மேகமலை கிராமத்தில் மின்சார துறையில் டெக்னிஷியனாக பணி புரிபவன்.

  

ஊரெங்கும் இந்த திருமணத்தைப் பற்றிய பேச்சு இருந்தது!

  

“இவளுக்கு அடிச்ச யோகத்தை பார்த்தீயா, கவர்ன்மன்ட் மாப்பிளை. அது இதுன்னு பெருசா எதுவும் கேக்கவும் இல்லையாம். இவ என்னவோ பெரிய ரம்பைன்ல அவன் மயங்கி போய் ஒத்தை கால்ல நின்னு கட்டிக்குறான்!”

  

“யாருக்கும் தெரியும் அக்கா, எல்லாம் இவங்க சொல்றது தானே. அவன் ஊருல அவன் எப்படி இருக்கானோ என்னவோ?”

  

இப்படி பொறாமை பிடித்த பெண்கள் ஒரு பக்கம் பேசி தங்களின் வயிற்றெரிச்சலை குறைத்துக் கொண்டிருக்க, விசாலினி மணமகள் அலங்காரத்தில் நடந்து வந்தாள்.

  

கிராமத்து பெண்ணுக்கு உரிய நாணம் அவளிடம் இருந்த போதும், அதையும் மீறி அவளின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

  

யாருமில்லாமல் உறவினரோட ஒட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா! அவளால் நம்பவே முடியவில்லை.

  

கணவனாக போகும் ஹரியின் மீது காதல், நன்றி, அன்பு என எல்லாம் பிரவாகமாக அவளின் மனதினுள் பொங்கிக் கொண்டிருந்தது.

  

ஆனாலும் சில நிமிடங்களில் அவளுக்கு கணவனாக போகும் ஹரியை நிமிர்ந்து நேராகப் பார்க்கவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.

  

ஹரியின் பாட்டி பொன்னம்மாள் மேடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தாள். சிறு குழந்தை முதல் அவள் எடுத்து வளர்த்த அவளின் பேரன் தான் எவ்வளவு வளர்ந்து விட்டான்.

  

விசாலினி அவனுக்கு சரியான ஜோடி தான்.

  

இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என பிரார்த்திட்டபடி பொன்னம்மாள் இருக்க, சுபமுகூர்த்த நேரத்தில் விசாலினிக்கு தாலி அணிவித்து தன் திருமதியாக்கினான் ஹரி.