Chillzee KiMo Books - சண்டை - பிந்து வினோத் : Sandai - Bindu Vinod

சண்டை - பிந்து வினோத் : Sandai - Bindu Vinod
 

சிறு கதை.

 

 

எப்போதும் போல் சுவாரசியம் இல்லாமல் சோம்பலுடன் துவங்கிய அந்த சனிக்கிழமை காலையில், பேருக்காக என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை திறந்துப் பார்த்தேன். சுவாரசியமில்லாமல் பார்த்த எனக்கு அங்கே நான் படித்த விஷயம் திகைக்க வைத்தது.

  

"லேட்டஸ்ட் செய்தி... சரஸ்வதிக்கும், சுந்தரிக்கும் சண்டை!!!!!!!!!"

  

என் கண்களையே நம்ப முடியாமல் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தேன், நிஜமாகவே அது தான் செய்தி! கல்லூரி தோழி ஒருத்தி போட்டிருந்த அந்த செய்திக்கு கீழ் பல பல கருத்துக்களும் இருந்தது. எனக்கு அது எதையும் படிக்க தோன்றவில்லை. சரஸ்வதியும், சுந்தரியும் எனக்கும் பொதுவான தோழிகள். அவர்கள் இருவர் அளவிற்கு எனக்கு நெருக்கமான தோழிகள் இல்லையென்றாலும், எனக்கும் சற்றே நெருங்கிய தோழிகள் தான். கல்லூரி என்றில்லாமல் பள்ளி நாள் முதலே இருவரும் என்னுடைய நட்புகள் தான். அவர்கள் இருவரும் உயிர் தோழிகள்!!! கதைகளில், திரைப்படங்களில், கற்பனைகளில் என எங்கோ படித்த, பார்த்த, கேள்விப்பட்ட நட்புகள் அனைத்தையும் விட பல படிகள் மேலே இருக்கும் தோழிகள்!!! இருபது வருடங்களுக்கும் மேலாக நட்பை தொடர்பவர்கள்!!!

  

மற்றவர்கள் என்றில்லாமல், என்னையும் மீறி எனக்கே சில முறை அவர்களின் நட்பின் ஆழத்தில் பொறாமை ஏற்பட்டது உண்டு. பள்ளி முடித்து, கல்லூரி நாட்களிலும் தொடர்ந்த அவர்களின் நட்பு, அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்தது. அதுவும் அதே பலத்துடன்.... கல்லூரி முடிந்து, வேலை, திருமணம், குடும்பம் என்று எந்த காரணத்திற்காகவும் விட்டு போகாத நட்பில் தான் இன்று சச்சரவு! நம்ப கடினமாக இருந்தது....