முன்னுரை.
தாய் பாசத்தில் கட்டுண்டு உலகையே மறந்திருக்கும் நாயகனுக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் என்றாவது ஒருநாள் நாயகன் மாறுவான் தன் காதலை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்வான் அந்த நாளுக்காக காதலுடன் காத்திருக்கும் நாயகியின் கதையிது.
பாகம் 1.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்,
பஞ்சாயத்து தொடங்கியது,
”இதப்பாருல உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கால, நீ செய்றது நல்லாயில்லைல, நம்ம ஊருக்குள்ள அசலூர்காரங்களோட சண்டை போடறது அம்புட்டு நல்லாயில்லைல” என பஞ்சாயத்து தலைவர் எதிரே இருந்த ஜெகவீர பாண்டியனிடம் கோபமாகப் பேசினார்,
”அண்ணாச்சி நான் எதையும் செய்யலை எல்லாம் இவனுங்கதான் செஞ்சாய்ங்க சும்மா நான் வயல் வெளியில வேலை பார்த்துட்டு இருந்தேன். செத்த நேரம் குறுக்க சாய்ச்சி படுத்துக்கிடந்தேன். அந்நேரம் இவனுங்க வேணும்னே வந்து என்னை எழுப்பி உசுப்பேத்தினாங்க அதான் தூக்க கலக்கத்தில கோபம் வந்து அடிச்சிப்புட்டேன் தப்பு என் மேல இல்லீங்களே” என ஜெகவீரனும் தன் முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டே சொன்னான்.
அவனது செயலைக் கண்ட ஊர் பெரியவர்,
”எலே என்னல பெரிய மனுசங்கன்னு மட்டு மரியாதை இல்லாம எங்க முன்னாடியே மீசையை முறுக்கற வேணாம்ல தப்புல”,
“நானும் அதைத்தான் சொல்றேன் அவனுங்க என்னை வம்பிழுத்தாய்ங்க நான் அடிச்சிப்புட்டேன் அதோட சண்டை முடிஞ்சது. இதுக்கு எதுக்கு இப்ப பஞ்சாயத்து எல்லாம்”,
“எதுக்கா எலேய் உன் மேல பிராது வந்திருக்கல போட்டவனுங்க இதோ உன்னால அடிவாங்கி நிக்கறாய்ங்க பாருலே அவனுங்கதான்”,
“என்னவாம் பிராது அதான் நான் சொல்லிட்டேன்ல அவனுங்க வம்பிழுத்தாய்ங்க நான் அடிச்சிப்புட்டேன்னு பிறகென்ன” என்றான் கெத்தாக,
“நீ வேணும்னுட்டே அடிச்சிட்டு மழுப்பி பேசறியோ நீயா அவனுங்களை தேடிப்போய் அடிச்சிருக்கல”,
”அப்படியா சரிங்க அண்ணாச்சி அப்படி நானா தேடிப்போய் அடிச்சது உண்மைன்னா யாரு சாட்சி? பார்த்த சாட்சி யாரு? காட்டுங்க என் மேல கோபத்தில இந்த பயலுக இல்லாததையும் கூட இருக்கறதா சொல்வாய்ங்க அதை நம்பி நீங்களும் என்னை இப்படி நிப்பாட்டுவீங்களா முதல்ல பார்த்த சாட்சியைக் காட்டுங்க அப்ப நான் என் தப்பை ஒத்துக்கறேன்” என ஜெகவீரன் தைரியமாக கூறவும்,
ஜெகவீரனின் தந்தை முரளிபிரசாத் கோபத்தில் உக்கிரமாக ஜெகாவை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் பஞ்சாயத்து தலைவர் பவ்யமாக,
”நீங்க என்ன சொல்றீங்க முடிவு உங்களோடது அடிப்பட்ட பயலுக சொல்றதும் நியாயமா படுது. உங்க மவன் சொல்றதும் நியாயமா படுது நாங்க மேற்கொண்டு என்ன தீர்ப்பு சொல்றது” என கேட்க,
”இது பஞ்சாயத்து இங்க அப்பன் மவன்ங்கற உறவு கிடையாது எல்லாரும் சமம்தான் அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு கவலையில்லை சீக்கிரம் முடிச்சிட்டு அனுப்புங்க” என சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட அவரை கொன்றுவிடும் அளவுக்கு கோபத்துடன் முறைத்த ஜெகவீர பாண்டியன் ஊர் பெரியவரிடம்,