ஒரு சிறு கதை.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.
”சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே” என அற்புதமான ஸ்வரத்தில் தாலாட்டு பாடி மகளை தூங்க வைத்தார் மஞ்சுளா. தாயின் தாலாட்டில் லயித்தபடியே கண்கள் மூடியபடி இருந்த துர்காவின் முகத்தில் அப்படியொரு நிம்மதி அடுத்த நொடியே பட்டென அவளின் கண்கள் திறந்தது, பயத்தில் விரிந்தது, கண் இமைகளே வலிக்கும் அளவிற்கு அகலமாக திறந்து வைத்தாள் கை கால்கள் வெடுவெடுக்க துடித்துக் கொண்டிருந்தாள், அவளின் கழுத்தில் இறுக்கப்பட்ட சேலை அவளை மூச்சு விட முடியாமல் செய்தது உடலோ அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க சில நொடிகள் உயிர் உடலை விட்டு பிரிந்தது, மெல்ல அவளின் கண்கள் சொருகியது அந்த அறையின் மூலையின் ஓரத்தில் இருந்த அவளின் செல்போன் வழியாக ஏற்கனவே பதிவு செய்திருந்த அவளின் தாயின் தாலாட்டு இன்னும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. துர்காவின் ஆத்மாவும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றது. ஏன் இப்படி நடக்க வேண்டும் பள்ளி படிக்கும் வயதில் தற்கொலை எதற்கு, இந்த முடிவு எதனால் வந்தது, இதற்கான பதில்கள் அனைத்தும் டேபிள் மீது வைத்திருந்த துர்காவின் டைரியில் இருந்தது, அதில் உள்ள காகிதங்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க அதில் ஒரு பக்கத்தில்…
”குட்டிம்மா, அம்மாவை விட்டு போறோம்னு பயப்படக்கூடாது, எல்லாம் உன் நல்லதுக்குத்தான் நீ மட்டும் படிச்சி பெரியாளாகி வந்தா ஊரே மதிக்கும், அப்பாவுக்கு அடுத்து இந்த குடும்பத்தை நீதானே வழிநடத்தனும்” என தாய் சொல்ல சொல்ல துர்காவிற்கு அழுகை அழுகையாக வந்தது. படிப்பதற்காக ஹாஸ்டலுக்கு சென்றாக வேண்டும், இத்தனை நாளும் வீட்டு சூழலில் தாயின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தில் இருந்தவளுக்கு வெளி உலகம் புதிது, அதிலும் தனியாளாக ஹாஸ்டலில் தங்குவது ஏதோ நரகத்திற்கு செல்வது போல உணர்ந்தாள். விம்மி விம்மி அழும் மகளைக் கண்டு தாய்க்கும் கண்ணீர் வர இவர்களின் அழுகையைக் கண்ட தந்தைக்கும் நெஞ்சடைத்தது ஆனாலும் மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தனது கவலையை அடக்கி வைத்துக் கொண்டு,
”துர்கா ஏன் அழற பாரு, உன்னால உன் அம்மா அழறா பாரு அவளை நல்லபடியா பார்த்துக்கறேன்னு என்கிட்ட சொன்ன இதுதானா அது” என சொல்லவும் துர்கா சட்டென அழுகையை நிப்பாட்டிவிட்டு தன் தாயின் கண்ணீரை தனது விரலால் துடைத்து விட்டபடியே,