ஒரு சிறு கதை.
பெண் அன்பால் பிரமாண்டமாக்கப்பட்டவள்.
”ஏங்க இந்த புடவை எனக்கு எப்படியிருக்கு” என ஆசையாக கேட்டாள் பல்லவி அதற்கு அவளது கணவரோ ஏதோ ஒரு பதிலை சொல்ல வேண்டுமே இல்லையென்றால் விடாமல் நச்சரிப்பாளே என நினைத்து ஒரு முறை அவளை ஏனோதானோவென்று பார்த்துவிட்டு,
”ம்ம்” என்றான் அந்த ம் என்பதில் இருந்து என்ன சொல்ல வருகிறான் என பல்லவி புரிந்துக் கொள்ள போராடினாள்,
அதற்காக மறுபடியும் அவனிடம் கேட்பதில் ஆர்வம் இல்லை, அமைதியாக தன் அறைக்குத் திரும்பியவள் கண்ணாடியில் அவளையே பார்த்தாள், புதுப்புடவை, விலையோ 3000 ரூபாய் அது கூட அவளுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை, வீட்டில் நல்ல நாள் அதுவுமாக புது துணி உடுத்த வேண்டுமே என்ற ஆசையில் பார்த்து பார்த்து அதிலும் தன் கணவருக்கு பிடித்த நிறத்தில் வாங்கிக் கொண்டு வந்தாள்.
அது ஏன் அவளுக்கு பிடித்த நிறத்திலேயே வாங்கி வந்திருக்கலாம் ஆனால் பல்லவியோ தான் இவ்வாறு அலங்காரம் செய்துக் கொள்வது தன் கணவர் பார்ப்பதற்காகத்தானே அதனால் கணவனுக்கு பிடித்தவாறே வாங்கினாள்.
அந்த புடவைக்கு ஏற்ப நகைகள் வேறு புதிதாக எடுத்திருந்தாள், அந்த புடவையை எப்போதும் போல் அணியாமல் சில சின்ன சின்ன விசயங்களை புகுத்தி அணிந்துக் கொண்டாள், உதாரணத்திற்கு புடவை மடிப்புகளை சற்று சின்னதாக வைத்து அதிகமாக மடிப்புகள் வரும்படி செய்தாள், இடைப்பகுதியிலும் அவ்வாறு சிக்கென இருக்க வேண்டுமென சேப்டி பின் உதவியுடன் ஆங்காங்கு சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து பொம்மைக்கு புடவை உடுத்துவது போல தன்னையே பொம்மையாக்கி நேர்த்தியாக புடவை உடுத்திக் கொண்டு அதற்காக வாங்கி வைத்த நகைகளை அணிந்துக் கொண்டு கூந்தலை கூட வழக்கமாக இல்லாமல் புதுவிதமான ஸ்டைலில் வாரிக் கொண்டு கண்ணாடி முன் 10 முறையாவது தன்னையே பார்த்து பரவசம் கொண்டு யாரும் பார்ப்பதற்கு முன் ஓடோடி சென்று கணவர் முன் நின்றவளுக்கு அவனிடம் கிடைத்த பாராட்டு வெறும் ம்ம் அவ்வளவுதான்,