Chillzee KiMo Books - நீ கண்ணானால் நான் இமையாவேன் - சசிரேகா : Ni kannanal nan imaiyaven - Sasirekha

நீ கண்ணானால் நான் இமையாவேன் - சசிரேகா : Ni kannanal nan imaiyaven - Sasirekha
 

முன்னுரை.

பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.

 


  

நீ கண்ணானால் நான் இமையாவேன் – சசிரேகா.

  

பாகம் 1,

  

திருச்சி,

  

ஒரு வருடமாக அனுதினமும் பலமாக யோசித்தே இந்த முடிவுக்கு வந்தான் குமரன், இதைப்பற்றி பெற்றோரிடம் கூட ஒரு வார்த்தை கூறவில்லை, கூறினால் என்ன நினைப்பார்களோ ஏது நினைப்பார்களோ என்ற பயத்தில் தான் எடுத்த முடிவை தனக்குள்ளே வைத்துக் கொண்டான்.

  

இருந்தாலும் பெற்றோர் எதிர்த்தாலும் தனது தம்பிகள் தனக்கு துணையாக இருப்பார்கள் என நம்பி தனது கூட பிறந்த தம்பிகள் சரவணன் மற்றும் கேசவனையும் அடுத்து சித்தப்பா மகன்களான சந்திரன் மற்றும் ஆனந்தனையும் தனக்கென இருக்கும் தென்னந்தோப்பிற்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்துவிட்டு முதல் ஆளாக அவர்களுக்காக காத்திருந்தான் குமரன்.

  

அவனின் மனதில் அப்படியொரு பயம், உடலில் நடுக்கம் வேறு, மனதுக்குள் தான் செய்வது சரியா தவறா என்ற குழப்பம் இருந்தாலும் அவன்தான் அதை செய்தாக வேண்டும், அது தனது கடமை என அவனது மூளை கட்டளையிட்டது. மனதிற்கும் மூளைக்கும் இடையில் மாட்டி அல்லாடிக் கொண்டிருந்தான் குமரன், தனது தம்பிகளின் வரவிற்காக காத்திருந்தான் ஒரு வருடம் கழித்து அண்ணனே தங்களை தென்னந்தோப்பிற்கு வருமாறு அழைத்தது அதிசயம் என எண்ணி தென்னந்தோப்பிற்கு வந்தார்கள் அந்த 4 தம்பிகள்.

  

வரும் போதே அண்ணனின் முகபாவனையைப் பார்த்தார்கள், அவர்களை வரச்சொல்லி வேலையாட்களை அனுப்பினான் குமரன், இத்தனைக்கும் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள், வீட்டில் வைத்தே பேசியிருக்கலாம் அல்லது அவரே கூட அழைப்பு தந்திருக்கலாம் ஆனால் இவ்வாறு அழைப்பு விட்டதற்கான காரணம் புரியாமல் குமரனை நோக்கிச் சென்றார்கள் நால்வரும்,

  

தம்பிகளைக் கண்டதும் குமரனுக்கு பதட்டமும் பரபரப்பும் அதிகமானது, அங்கிருந்தவர்களில் மூத்தவன் குமரன்தான், அவனே தம்பிகள் வரவும் சட்டென எழுந்து மரியாதையாக நின்றதைக் கண்டு மற்ற தம்பிகள் அதிர்ந்துபோய் நின்றார்கள்,

  

”குமரன் அண்ணா என்ன இது நீங்க போய் எழுந்து நிக்கறீங்க உட்காருங்கண்ணா” என ஆனந்தன் சொல்ல குமரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை,

  

”ஆஆ இருக்கட்டும் இருக்கட்டும் அப்புறம்” என ஏதோ பேச வந்து சட்டென நிப்பாட்டி தம்பிகளின் முகம் பார்க்க தைரியமின்றி தலை தாழ்த்திக் கொள்ள அந்த 4 தம்பிகளுக்கு குழப்பமும் சந்தேகமும் மனதில் எழுந்தது.

  

என்னதான் ஆயிற்று அண்ணாவிற்கு, வீட்டில் பிரச்சனை இருப்பது தெரியும், ஒரு வருடம் கழித்தும் அதே மனநிலையில் இன்னும் குமரன் இருப்பது மற்றவர்களுக்கு வேதனையைத் தர அதில் குமரனின் கூட பிறந்த தம்பி கேசவனோ சட்டென குமரனிடம் சென்று,

  

”தப்பா நினைக்காதீங்க அண்ணா“ என சொல்லிவிட்டு குமரனின் தோளைப் பிடித்து அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர வைத்தான். அதற்கே குமரன் நடுங்கிவிட்டான், அவனின் நடுக்கத்தைக் கண்ட கேசவனோ,

  

”அண்ணா என்னாச்சிண்ணா ஏன் உங்க உடம்பு இப்படி நடுங்குது, காய்ச்சலா அண்ணா” என அக்கறையாகக் கேட்க குமரனோ,